இலங்கை பிரதான செய்திகள்

மாவட்டச் செயலக காணியை இராணுவத்திற்கு வழங்கினார் றூபவதி – சிறிதரன் – காணியை இராணுவத்திடம் இருந்து மீட்டது நான் – றூபவதி:-


மாவட்டச் செயலக காணியை இராணுவத்திற்கு வழங்கினார் முன்னாள் அரச அதிபர் சிறிதரன் எம்பி, காணியை இராணுவத்திடம் இருந்து மீட்டது நான் என்கின்றார் முன்னாள் அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்குரிய காணியை இராணுவத்திற்கு தன்னிச்சையாக முன்னாள் கிளிநொச்சி அரச அதிபர் வழங்கியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டினார். ஆனால் இராணுவத்திடம் இருந்த கிளிநொச்சி மாவட்டச் செயலக காணியை அன்றைய சூழலில் மீளப்பெற்று புதிய மாவட்டச் செயலகத்தை அமைத்தது நான்தான் இது உண்மைக்கு புறமானது எனநேரடியாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அதே மேடையில் வைத்து கடும் தொணியில் தெரிவித்தார் முன்னாள் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்.

இன்று காலை கிளிநொச்சி இரணைமடு தாமரை தடாகம் மண்டபத்தில் இடம்பெற்ற நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் மாவட்டச் செயலக காணியை இராணுவத்தினருக்கு தன்னிச்சையாக வழங்கி விட்டார் என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்காமல் அவர் இவ்வாறு வழங்கியுள்ளதாகவும், இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே மாவட்டச் செயலக காணியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது எனவும் பகிரங்கமாக முன்னாள் கிளிநொச்சி அரச அதிபரும் தற்போதைய முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருமான திருமதி றூபவதிகேதீஸ்வரன் முன்னிலையில் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் உண்மைக்குப் புறம்பான தகவலை அனைவருக்கும் முன் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார் என கோபமடைந்த அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினரை நோக்கி நீங்கள் உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றீர்கள் ஆதாரமற்று பேசுகின்றீர்கள், நீங்கள் கூறுவதற்கு மாறாகவே நான் அன்றைய சூழலில் செயற்பட்டிருக்கிறேன். இராணுவத்திடம் இருந்த காணியை மீளப்பெற்று நவீன முறையில் இன்றைய கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அமைய காரணமாக இருந்தவள் நான். தற்போது மாவட்டச் செலயகம் அமைந்துள்ள காணியின் பெரும் பகுதி இராணுவத்தின் வசம் இருந்தது அது தங்களுக்கும் தெரிந்த விடயம் எனவே அவ்வாறு இருந்த நிலத்தை மீட்டு இராணுவத்தை ஒரு பகுதிக்குள் ஒதுக்கி பெரும் பகுதி நிலத்தை மீட்டிருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதன்போது அதிகாரிகள, அரச உத்தியோகத்தர்கள் பலரும் பார்த்திருக்க இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.