இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி -மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினர்.

கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில்  பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டியை நேற்று சனிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
அக்கினிச் சிறகுகள் அமைப்பின்  ஏற்பாட்டில் கிளிநொச்சி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியாக  வடக்கில் கிழக்கில் உள்ள பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி போட்டி முல்லைத்தீவு இரணைப்பாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சியில் ஆரம்பமான போட்டியில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட ;  பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கருத்து தெரிவித்த போது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பாந்தாட்ட போட்டியில் என்னையும் விருந்தினராக அழைத்திருந்தார்கள் நான் அரசியல் வாதியாக அல்லாமல் ஒரு விளையாட்டு வீரனாக ஆதாவது பல போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றி கிண்ணங்களை பெற்றவன் என்ற அடிப்படையில் கலந்துகொண்டிருக்கிறேன்.
எங்கள் சமூதாயம் பெரும் போர் ஒன்றை சந்தித்து வீழ்ந்துகிடக்கின்ற நிலைமையில் இப்படியான விளையாட்டுக்கள் குறிப்பாக இளைஞர்களை ஒழுங்கமைத்த உற்சாகப்படுத்துகின்ற வகையில் மனோநிலை உடல் நிலை என்பவற்றை கட்டியெழுப்ப வேண்டும். தொடர்ந்தும் அவர்கள் ஒரு விடுதலை உணர்வோடு எங்கள் சமூதாயத்தில்  தலைமைத்துவ பயிற்சி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கோடு நடைப்பெறுகின்ற இந்தப் போட்டியில் நான் கலந்துகொள்வதனையிட்டு ஆறுதலும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்த விளையாட்டுப் போட்டி பல இக்கட்டுகளுக்கு மத்தியில் அதாவது பொலீஸார் மற்றும் உளவுத்துறையின் விசாரணைகளுக்கு மத்தியில் இடம்பெறுகிறது. எனவே இவர்கள் தொடர்ந்தும் தங்களது விடுதலையுணர்வை இழந்துவிடாது மேலும் கட்டியெழுப்புதற்காக ஜனநாயக வழியில்  இவ்வாறான போட்டிகள் இடம்பெறுவதை நான் வரவேற்கிறேன் எனத் தெரிவித்தார்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டிகள் பல மட்டங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தமை தொடர்பில்  கருத்து கேட்ட போது
விமர்சனங்கள் இடம்பெறும் அதனை நாங்கள் மறுக்கவில்லை ஆனால் இதே இளைஞர் சமூதாயத்தை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் மக்களையும் வீரர்களையும் இணைப்பதில்  ஏற்பாட்டாளர்கள் ஒரு விடுதலையுணர்வோடுதான் இந்தப் போட்டிகளை நடத்துகின்றார்கள். இத்தனை அழிவுகளுக்குப் பின்னும் எத்தனையோ போட்டிகள் எத்தனையோ கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. ஆனப்படியால் இந்தப் போட்டியையும் அதேமாதிரியான விமர்சனக் கண்ணோடு பார்க்காமல் அவர்கள் எழுந்து நிற்கின்றார்கள்  அவர்கள் உடல் வலிமை பெறுகின்றார்கள் வடக்கு கிழக்கு இணைந்து நிற்கவேண்டும்  என்ற ஒரு  அடிப்படை கோட்பாடுக்கொள்கை  இருப்பதை நான் பார்க்கின்றேன். எங்களுடைய  இளைஞர்கள்  விளையாட்டுத்
துறையில் மீண்டும் எழுந்து வந்துள்ளனர் என்பதையே நான் இங்கு பார்க்கின்றேன் எனத் தொிவித்தாா்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.