இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் சம்மதத்துடனேயே இறுதி முடிவு – சம்பந்தன்

இனப்பிரச்சினைக்கான தீர்வு ஸ்தாபிக்கப்பட்ட பின், அதனை தமிழ் மக்களுக்குச் சமர்பித்து, மக்களின் ஆலோசனைகளைப் பெற்று மக்களின் கருத்துக்குட்பட்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தற்போதுள்ள வாய்ப்பை நாம் உதாசீனம் செய்யக்கூடாது எனத் தெரிவித்த அவர் இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது எனவும்  குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தந்தை செவ்வாவின் 40ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

பல இனங்களைச் சோர்ந்த மக்கள் வாழ்கின்ற நாடுகளில் ஆட்சி ஒழுங்குகள் அதற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர் நாங்கள் அனைத்து தரப்பினரையும் அனுசரித்துச்செல்கின்றோம் எனவும் அதற்காக அடிப்படை விடயங்களை பிடி கொடுக்குமளவிற்கு நடந்துகெரள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட தந்தை செல்வா  இந்நாட்டின் அரசியல் ஆட்சிமுறை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல அந்த வாதத்தினை முன்வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து ஒரு அரசியல் பயணத்தை ஆரம்பித்ததாகவும் அந்தப் பயணம் இன்றும் தொடர்கின்றது  எனவும்  கூறிய சம்பந்தன் அந்தவிதத்தில் தான் நாங்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

எமக்குத் தேவை எமது மக்களின் ஒற்றுமையாகும் எனவும்  எமது மக்கள் அனைவரும் ஒருமித்து நிற்கவேண்டும் எனவும் தெரிவித்த அவர்  நாங்கள் ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றோம் எனவும்  சனிக்கிழமை  நடைபெற்ற தமிழரசுக் கூட்டத்தில் இவ்விடையங்கள் தொடர்பில் மிகவும் தெளிவாக பேசினோம் எனவும் தெரிவித்தார்.

கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்போது பகைமையை வளர்க்காமல், அனைவரினதும் ஆதரவுகளைப் பெற்று இந்நாட்டிலுள்ள மக்களும் அதனை ஆதரிக்கக் கூடிய வகையில், நிதானமாக நீண்ட நோக்குடன் சர்வதேசத்தில் தடம் பதிக்கக் கூடிய விதத்தில் நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும்; அவர் தெரிவித்தார்.

உருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் நாட்டு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். இது ஒரு சாதாரணமான விடையமல்ல, நடைமுறைச் சாத்தியமற்ற விடையமுமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

எம்முடைய அரசியல் சூழலில் அதனை அடையக் கூடிய நிலமை இருக்கின்றது. அதற்காக நாங்கள் அனைவரினதும் அதரவுகளைப் பெற்றுச் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாங்கள் பிடி கொடுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு நடந்து கொள்ளவும் கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers