இலங்கை

வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்குக் களப்பயிற்சி – வடக்கு சுற்றாடல் அமைச்சால் யாழில் ஏற்பாடு

வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றங்களின் காரணமாக இடம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் சென்று மீளவும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் பறவைகள் வலசைப் பறவைகள் எனவும் இந்த இடப்பெயர்வு வலசை போதல் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த வலசைப் பறவைகள் தொடர்பான அறிவை ஊட்டும் வகையில் சர்வதேச ரீதியாக ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது வார இறுதி நாட்களில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி இம் மாதம் 13ஆம், 14ஆம் திகதி உலக  வலசைப் பறவைகள் தினம் ஆகும். இத்தினத்தைக் கொண்டாடும் விதமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு வலசைப் பறவைகள் பற்றிய வதிவிடக் கருத்தமர்வு மற்றும் வெளிக்களப் பயிற்சிகளை 12,13 மற்றும் 14ஆம் திகதிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும்; தேர்வு செய்யப்பட்ட நூறு மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான கருத்தமர்வுகள் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் யாழ் மத்திய கல்லூரியிலும் இடம் பெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ் குடாநாட்டின் உள்ளேயும் வெளியேயும் காணப்படும் கடல்நீரேரிகளும், இவற்றையொட்டி வளரும் கண்டல் தாவரங்களும் வலசைப் பறவைகளுக்கு உவப்பான இயற்கைச் சூழலாக அமைந்துள்ளன. இதனால், பருவகால மாற்றங்கள் ஏற்படும்போது தென்இலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவை இனங்கள் குடிபெயர்ந்து யாழ் குடாநாட்டுக்கு வந்து பின்னர் திரும்பிச் செல்கின்றன.

மாணவர்களுக்கு எமது இயற்கைச்சூழல் குறித்தும் வலசைப் பறவைகள் குறித்தும் அறிவூட்டும் விதமாக பறவைகள் அதிகளவில் கூடும் தொண்டைமானாறு ஏரி, வல்லைவெளி, சரசாலை குருவிக்காடு, செம்மணி, மண்டைதீவு ஆகிய இடங்களில் வெளிக்களப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. கருத்துரைஞர்களாகவும் வெளிக்களப் பயிற்சி வழங்குநர்களாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களோடு, தன்னார்வப் பறவையியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

உலக வலசைப் பறவைகள் தினத்தின் இறுதி நிகழ்ச்சி ஞாயிறு (14.05.2017) பி.பகல் 2 மணிக்கு யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் விருந்தினர் உரைகளும், மாணவர்களுக்கான பரிசு வழங்குதலும் இடம்பெறவுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.