Home இலங்கை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் எங்கே? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துன்னாலைச் செல்வம்:-

பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் எங்கே? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துன்னாலைச் செல்வம்:-

by admin

பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரின் மண் பற்றில் காட்டிய தீவிரம் பற்றி உலகில் பரந்திருக்கும் தமிழர்கள் பேசிக்கொண்டோ சிந்தித்துக் கொண்டோ இருக்கிறார்கள். தமிழர் வரலாற்றில் ஒரு இடம் பிடித்த இவரை என்றும் நினைவில் இருந்து அழிக்க முடியாது. மிகப் பெரியளவில் பேசப்பட்டு கவனயீர்ப்பைப் பெற்ற அடிகளாரைப் விடயம் பத்தோடு பதினொன்றாக பேச வேண்டிய விடயமல்ல. பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தவராவார்.

தனது தொழிலான கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார். இந்நிலையில் தமிழர் பகுதியில் தமது நிழல் அரசாட்சியை நடத்திக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களுள் ஒன்றான ‘தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை’ யின் தலைவராகப் பொறுப்பேற்று இறுதிவரை அவ்வமைப்பு மூலம் கல்விக்கும் அரும்பணிகள் ஆற்றிவந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து போராட்டத் தலைமை வன்னிக்கு பின்நகர்ந்த பின்னர் அடிகளாரின் பணி முழுமையாக வன்னியில் மிளிரத் தொடங்கியது. அவரது ஒவ்வொரு வினாடியும் எவ்வாறு தமிழ்ச்சமூகத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது என்பதிலேயே கழிந்தது. எந்நேரமும் அதுகுறித்தே சிந்தித்துக் கொண்டும் செயலாற்றிக் கொண்டுமிருந்தார். குறிப்பாக ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார். இயல்பிலேயே ஆங்கில மொழிவல்லமை கொண்டிருந்தமையும் நீண்டகால ஆசிரியத் தொழில் அனுபவமும் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய கல்லூரிகளுள் ஒன்றான புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய பெரு அனுபவமும் கொண்டிருந்தமையால் அவரால் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் மிகத்திறம்படச் செய்ய முடிந்தது.

2004 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் திறக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரியில் இவரே பொறுப்பாகவிருந்து அக்கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பொறுப்பாளர்களுக்கான ஆங்கிலக் கல்வி புகட்டலையும் செய்து வந்தார். இவ்வளவு வேலைப்பழுவிற்குள்ளும் கத்தோலிக்க மதகுருவாக தனது பணிகளையும் செய்துவந்தார். கிளிநொச்சி அம்பாள்குளம் பங்கில் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் உட்பட மதகுருவாக தனது பங்கையும் ஆற்றிவந்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின்பால் இவருக்கிருந்த அக்கறை அதீதமானது. எமது மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றியவர். அடிகளாரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானதால் அவசரமாக சில சத்திரசிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை இருந்தது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்று மருத்துவத்தைக் கவனித்துவிட்டு பின்னர் வன்னிக்கு வந்து பணியாற்றும்படி அவருக்கு வேண்டுகோள் விடுத்தும்கூட அடிகளார் தனக்கான ஓய்வை எடுத்துக் கொள்ளவில்லை. தான் யாழ்ப்பாணம் போனால் திரும்பிவர முடியாநிலை ஏற்படலாம் அதனால் எல்லாப் பணிகளும் பாதிப்படையும் என்பதோடு தன்னால் தேவையேற்படும் இடத்தில் பணிபுரிய முடியாமற் போகுமென்ற காரணத்தைச் சொல்லி கத்தோலிக்கத் தலைமைப்பீடம் அவரை அழைத்த போதும்கூட போகாமல் இறுதிவரை அவர் வன்னியை விட்டு வெளியேறாமலேயே இருந்தார்.

வன்னியில் போர் தீவிரமடைந்தபோது மக்களோடு மக்களாகவே அடிகளாரும் தனது கல்லூரியினதும் கல்வி மேம்பாட்டுப் பேரவையினதும் ஆவணங்களோடு ஒவ்வோரிடமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தார். போர் உக்கிரமடைந்த போது அவரின் உடல் நிலை மேலும் பாதிப்புற்றது. இதனால் அடிகளாரை படகு வழியாக பாதுகாப்பாக அனுப்புவதென விடுதலைப் புலிகளின் தலைமை முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அடிகளாரைப் புறப்படச் சொன்னபோது என்ன நடந்தாலும் மக்களுடனே கடைசி வரை நான் இருப்பேன் என்று சொல்லி போக மறுத்துவிட்டார். எழுபத்தைந்து வயதிலும் வலுவாகவும் இயல்பாகவும் அந்தக் கடைசிநேரக் கோரத்தை தான் நேசித்த மக்களோடேயே இருந்து எதிர்கொண்டவர்.

முள்ளிவாய்க்காலில் உடல் அங்கவீனமான நவம் அறிவுக்கூடப் போராளிகள் சிலரைத் தங்கவைத்திருந்த ஒரு பதுங்குகுழியிலேயே அடிகளாரும் அவர்களோடு இணைந்து தங்கியிருந்து தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தார். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிநாட்களில் எல்லோரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது அடிகளாரும் மக்களோடுதான் வந்திருந்தார். மே மாதம் 17 ஆம் நாள் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டிருந்த போது அவர்களோடு மக்களோடுதான் அடிகளார் இருந்தார். அவரோடு விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர்.

மே மாதம் 18 ஆம் நாள் காலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தம்மை அடையாளப்படுத்தி இராணுவத்தினரிடம் சரணடையச் செல்வதென்ற முடிவெடுத்த போது தனது ஆங்கிலமொழி வல்லமை அவ்விடத்தில் தேவைப்படுமென்பதால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் அந்தச் சரணடைவை சுமுகமாக நிகழ்த்தும் விதத்தில் அவரே முன்னின்று செயற்பட்டார். ஆனால் மற்றவர்களோடு அடிகளாரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். ஏராளமான மக்கள் பார்த்திருக்க விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் உட்பட ஏனைய பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அடிகளாரோடு இராணுவத்திடம் சரணடைந்தார்கள். போர் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்த நிலையில் அவர்களில் ஒருவர் கூட இதுவரை திரும்பிவரவில்லை. ஒருவர் பற்றிய குறிப்புக்கூட யாருக்குமே தெரியவில்லை.

அடிகளாரோடு இறுதிவரை பயணித்த செல்வி நளாயினியும் விக்னேஸ்வரியும் கூட திரும்பி வரவில்லை. அந்தச் சரணடைவில் இராணுவத்தினரால் குடும்பமாக அழைத்துச் செல்லப்பட்ட போது கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் பற்றிய சிறு தகவல் கூட யாருக்குமே தெரியவில்லை. தனது ஒவ்வொரு வினாடியையும் தமிழ்ச்சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காவே செலவழித்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த அடிகளார் – குறிப்பாக ஆங்கிலக் கல்வி மேம்பாட்டிற்காக வெறித்தனமாய் உழைத்த அடிகளார் – இறுதிச் சரணடைவிலும் தனது ஆங்கில வல்லமையின் உதவி தேவைப்படுவதை உணர்ந்து அந்தத் தள்ளாத வயதிலும் தானே முன்வந்து செயலில் இறங்கிய எமது அடிகளார் இன்று காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்கப் போனவர்களின் கதை இன்று உலகின் முன் மாயமாகிவிட்டது.

சிறிலங்கா அரசாங்கப் படைகளின் யுத்த மூலோபாயம் தொடர்பாக சில மேற்குலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் தமது அதிருப்தியை வெளியிட்ட போதிலும் கூட சிறிலங்காவிலிருந்த திருச்சபையைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்கள் சிறிலங்கா அரசாங்கப் படைகளின் செயற்பாடுகளைக் கண்டித்து எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை என அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரால் அவ்வேளையில் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்ட திறந்த மடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கடந்த இரவில் 3318 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4000 வரையானவர்கள் காயமடைந்துள்ளனர்’ என மே10,2009 அன்று ஜோசப் பிரான்சிஸ் அடிகளாரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயங்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் மீது ஆட்டிலறி, மோட்டார், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், கொத்துக் குண்டுகள், கனரக ஆயுதங்கள் எனப் பல்வேறுபட்ட தாக்குதல்களை நடாத்தி வருகின்றது’ என போப்பாண்டவருக்கு ஜோசப் அடிகளாரால் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

365,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருவதாகவும், ‘தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் தொடர்பாக சிறிலங்கா திருச்சபையானது தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விவேகம் மற்றும் துணிச்சல் என்பன இல்லாதுள்ளமை கவலையளிப்பதாகும். இக்கடிதத்தை நான் அனுப்புவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது என்னைக் கொல்லலாம் அல்லது திருச்சபையானது எனக்கு தண்டனை வழங்கலாம்’ எனவும் ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச படைகளால் ஜோசப் அடிகளார் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் காணாமற்போயுள்ளதாகவும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆயரான கிங்சிலி சுவாம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் பின்னர் தெரிவித்துள்ளார். மே 2009 இல் போர் வலயத்திலிருந்து வெளியேறியவர்களில் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரும் உள்ளடங்கியிருந்ததாகவும், ஓமந்தை சோதனைச் சாவடியின் ஊடாக இவர் கடந்த போது இவரைப் படையினர் விசாரணைக்காகக் கொண்டு சென்றதாக இவருடன் பயணித்த பொதுமக்கள் சிலர் தெரிவித்ததாக ஆயர் மேலும் தெரிவித்துள்ளார். ‘அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. அதன்பின்னர் யாருமே அவரைக் காணவில்லை’ எனவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என அமெரிக்காவை பேராயர் மல்கம் ரஞ்சித் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புற்றேனிஸ் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அண்மையில் வெளிவந்த விக்கிலீக்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையானது சிறிலங்கா அரசாங்கம் கடினப் போக்கான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு வழிகோலும் என பேராயர் அமெரிக்கத் தூதரிடம் வலியுறுத்திக் கூறியதாகவும் இக்கருத்தை அமெரிக்கத் தூதர் ஏற்றுக்கொண்டதாகவும் விக்கிலீக்சில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கொழும்பிலுள்ள பேராயரின் செயலகமானது விக்கிலீக்சால் வெளியிடப்பட்ட இத்தகவல் போலியனவை என்றும் ஆதராமற்றவை என்றும் கூறி அதனை நிராகரித்துள்ளது. பேராயரின் பெயரானது தவறாகப் பயன்படுத்தப்படுவது இது முதற்தடவையல்ல எனவும், விக்கிலீக்சில் குறிப்பிடப்பட்டுள்ள பேராயர் தொடர்பான செய்தியைத் தாம் ஏற்க மறுப்பதாகவும் பேராயரின் செயலகப் பேச்சாளரான வணக்கத்திற்குரிய பெனடிக்ற் ஜோசப், சண்டேலீடரிடம் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், ஜோசப் அடிகளாரால் 2009ம் ஆண்டில் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்ட கடிதமானது, சிறிலங்கா திருச்சபை மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ‘தமது சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற தமிழ் மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உங்களது புனிதமான சேவையை எதிர்பார்த்திருக்கிறார்கள்’ என ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா அரசாங்கமானது தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்து அதன் மூலம் இராணுவ வெற்றியை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்தின் பின்னர் போப்பாண்டவர் பதினாறாவது பெனடிக்ற் அவர்கள் யுத்த வலயத்திலிருந்து வெளியேறிய பொதுமக்களுக்கான வளங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

யுத்த வலயத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக சிறிலங்கா அரசாங்கமானது அறிவிப்புச் செய்ததை அடுத்து வத்திக்கானில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டமொன்றில் உரையாற்றிய போப்பாண்டவர், ‘ஒரு சில நாட்களுக்கு முன்னர் யுத்த வலயத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் வழங்கியிருந்த’ ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையுடன் தான் இணைந்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.
நாங்கள் செத்துக்கொண்டிருக்கின்றோம் எங்களைக்காப்பாற்றுங்கள்’ இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இருந்து மே மாதம் 10 நாள் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் தமிழ் மக்களை காப்பாற்ற நாதியற்றவர்களாக உள்ளனர். ஆகவே தமிழ் மக்கள் உங்களைத்தான் நம்பி இருக்கின்றோம் எனவும் சுதந்திரத்திற்காக உயிர்ப்பலிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என தனது இறுதிக் கடிதத்தில் பாப்பரசரை இறைஞ்சி எழுதிய கடிதமே அவரது இறுதிக் கடிதமாக இருக்கும் என பிபிசி கூறியுள்ளது.

ஆனால் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் மட்டுமல்ல பாப்பரசரும் இந்த கடிதத்தினை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார். எல்லாமே நடந்து முடிந்த பின்னர்தான் பாப்பரசர் முகாமிற்கு வந்து சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சுதந்திரத்திற்காகவும், ஏழை எழிய மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்த ஆண்டவர் ஜேசுவின் திருச்சபையினை வழி நடத்தும் பாப்பரசர் 40,000 மக்கள் பலி எடுக்கப்படும் வரை பார்த்துக் கொண்டுதான் இருந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More