இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

அரசியல் யாப்பு உருவாக்கமும் முரண் நிலையும் – துன்னாலைச் செல்வம்:-

1945-1946 ஆகிய ஆண்டுகளில் தொடங்கிய தமிழ் மக்களின் அரசியல் குரல் இத்தனை ஆண்டுகளின் பின் எங்கே நிற்கின்றது? இதுவரை கடந்து வந்த பாதையில் பயணிக்கப் போகின்றதா? புதிய பாதையில் போகப்போகின்றதா என்பன போன்ற பல வினாக்களுக்கு விடை தேடவேண்டிய காலம் இது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி வலுவான நிலையில் அப்பொழுது இருந்தது.இலங்கைத் தீவை விட்டு வெள்ளையர்கள் வெளியேறும் நிலையில் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் அரசியல் தலைவர்கள் திறம்படக் கையாளவில்லை என்றும் கூறப்படுகின்றது. இலங்கைத் தீவுக்குப் புதிய அரசியல் யாப்பு எழதப்பட்ட அந்த நேரத்தில் தமிழினம் தான் ஒரு தேசிய இனம் என்பதை வலியுறுத்தத் தவறிவிட்டது என்பது பெரிய குற்றச்சாட்டாகும். அது உண்மையும் கூட. ஏனெனில் அந்நியர்கள் இலங்கைத் தீவை ஆட்சி செய்த போதும் தமிழர் தாயகப் பகுதிகள் தனியாகவும் சிங்களப் பகுதிகள் தனியாகவுமே நிர்வாகம் செய்யப்பட்டு வந்தன.1815இல் முழு இலங்கையையும் தனது ஆட்சிக்குள் கொண்டுவந்த வெள்ளையர்கள் 1833இலேயே முழு இலங்கையையும் ஒரே நிர்வாகக் கட்டமைப்பிற்குள் கொண்டுவந்தனர். ஆங்கிலேயர் நாட்டைவிட்டு வெளியேறிய போது நாம் எப்படித் தனித்திருந்தோம் எனவே எமக்கு எவ்வகையான ஆட்சி அமைப்பு வேண்டும் என்று தமிழ் அரசியல் வாதிகள் சிந்திக்கவும் இல்லை,கேட்கவும் இல்லை.

புதிய அரசியல் யாப்பு சோல்பரியின் தலைமையில் தயாரிக்கப் பட்டபொழுது 50 இற்கு 50 என்ற கோரிக்கை ஜி.ஜி தலைமையிலான காங்கிரசினால் முன்வைக்கப்பட்டது.இதைப் பற்றி இலண்டனில் பல மணி நேரம் பொன்னம்பலம் பேசினார். அப்பொழுது இங்கே முதலில் ஒற்றுமையாக இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,ஜி.ஜி அங்கு ஆணித்தரமாக தனது வாதத்தை முன்வைத்த போது சுந்தரலிங்கம் சிற்றம்பலம் ஆகியோர் ஆட்சியில் இணைந்து அமைச்சர்களாகினர் .தமிழ் உறுப்பினர்களே அரசின்திட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்று பொன்னம்பலத்திடம் கூறினர் வெள்ளையர்.ஜி ஜி தோல்வியுடன் நாடு திரும்பினார் .திரும்பியவர் சோர்ந்து விடவில்லை ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற குரலுடன் அரசியலைத் தொடர்ந்தார். மக்கள் எங்கள் பலம் பொன்னம்பலம் என்றும் பாகிஸ்தானுக்கு ஒரு ஜின்னா தமிழ் மக்களுக்கு ஒரு பொன்னா என்று ஒலித்தனர். மக்கள் பொன்னம்பலத்தின் ஆழ்ந்த சட்ட அறிவு ஆங்கிலத் திறமை என்பனவற்றில் நம்பியிருந்தனர்.

தாயகம் தேசியம் என்பன பற்றிய சிந்தனை இல்லாமல் இந்த அரசியல் யாப்பில் தமது கருத்தைத் தெரிவித்த அரசியல்வாதிகள் பின்னர் ஒற்றை ஆட்சிக்குள் அரசியலை கொண்டு சென்றனர்.அப்பொழுது ஜி.ஜி அரசுடன் ஒரு சமாதானம் செய்து முன்பு சுந்தரலிங்கம் செய்தது போன்று டி எஸ் சேனநாயகாவின் அமைச்சரவையில் மீன்பிடி அமைச்சரானார். இது கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தியது. பின்னர் ஜி.ஜி மலையக மக்களின் வாக்குரிமை குடியுரிமை என்பனவற்றைப் பறித்த சட்டமூலத்திற்கு ஆதரவு அளித்தார். இதனால் காங்கிரசுக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. இலங்கைத் தமிழரசுக்கட்சி 1949டிசெம்பர் மாதம் தோற்றம் பெற்றது. இதன் முக்கிய இலட்சியமாக சமஷ்டி முறை அரசியல் அமைப்பே தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான இடத்தை இத்தீவில் வழங்கும் என்று கூறியது.

உலகத்தில் பல நாடுகளில் சமஷ்டி அமைப்பு ஆட்சி முறை தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளதுஎன்று தமிழரசுக் கட்சி எடுத்துக் கூறியது. சமஷ்டி மொழிக்குச் சம அந்தஸ்த்து என்று தந்தை செல்வா கூறியவுடன் தந்தை செல்வாவையும், தமிழரசுக் கட்சியையும் இனவாதி, இனவாதக் கட்சி சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் முத்திரை குத்தின.சோவியத் ஒன்றியம்,யுகோஸ்லாவியா போன்ற கம்யுனிச நாடுகளில் சமஷ்டி முறை உள்ளதே என்பதைக் கூட மறைத்துவிட்டு அக்கட்சிகள் சமஷ்டி கோருவது இனவாதம் என்று கூறின. சோசலிஸ்ட் ஒன்றியம் என்ற பெயரையே மாற்றிவைத்த லெனின் வழிவந்தவர்கள் என்று கூறியவர்கள் இவ்வாறு சமஷ்டியை இனவாதமாகக் கண்டனர். இதுதான் இன்றைய நிலையும். தன்னை ஒரு இடதுசாரிக் கட்சியாகக் கூறும் மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி தமிழ் மக்கள் பேரவையினால் முவைக்கப்பட்ட சமஷ்டியை இனவாதமாகவே பார்க்கின்றது.அனைத்துச் சிங்களத்துக் கட்சிகளின் நிலையும் இதுவே.

அன்று அரசியல் யாப்புத் தயாரிக்கப்பட்ட போது விட்ட அதே பிழையை இன்றுதமிழ் அரசியல்வாதிகள் தொடரப் போகின்றனரா. தமிழ்த் தேசியப் பேரவை சமஷ்டி முறையை அங்கு முன்வைத்துள்ளது.வடமாகாண சபையும் அதேபோன்று சமஷ்டியை கோரியுள்ளது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன கேட்கின்றது. என்பது வெளிப்படுத்தப் படவில்லை.உண்மையில் அங்கே மாகாண சபைக்குச் சில அதிகாரங்களை வழங்கவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் சர்வதேசத்தின் ஆதரவுடன் தாங்கள் தீர்வு காணப்போவதாகக் கூறிவருகின்றனர்.அரசியலமைப்பு என்பது சாதாரண மூலமல்ல. இது இனத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் ஒன்றாகும். எனவே வரலாற்றுத் தவறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யக் கூடாது என்பதுதான் மக்களின் நிலைப்பாடு. அதைத்தான் மக்கள் ‘எழுக தமிழ்’ மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அக்டோபர் 1972-10-3 நாள் தந்தை செல்வா சிறிலங்கா நாடாளுமன்றத்தில் (தேசிய அரசுப் பேரவை )ஆற்றிய வரலாற்று முக்கியம் வாய்ந்த உரை இங்கு தரப்படுகிறது.இவ்வுரை பற்றி அறிந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது உண்டா என்பது ஐயமே.இவ்வுரையை தந்தை செல்வா தமிழிலேயே ஆற்றியிருந்தார் என்பதும் முக்கியமாகும்.’மாண்புமிகு சபாநாயகர் அவர்களே. நான் இந்தத் தேசிய அரசுப் பேரவையிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்திருக்கிறேன்.அதற்கான நியாயங்களைச் சொல்ல விரும்புகிறேன். 1948ஆம் ஆண்டு தொடக்கம் இந்நாட்டில் தமிழ் மக்களுடைய வாழ்வு படிப்படியாகக் கீழ் நிலையடைந்து கொண்டே வருகிறது.95 உறுப்பினர்களைக் கொண்ட அன்றைய பாராளுமன்றத்தில் தமிழ்த் தோட்டத் தொழிலாளரின் பிரதிநிதிகளாயிருந்த 8 தமிழ் உறுப்பினர்கள் இன்று இங்கு இல்லை.அவர்களுடைய இடத்தை இன்று அவர்களிலும் இரட்டித்த எண்ணிக்கையான சிங்கள உறுப்பினர்கள் எடுத்திருக்கிறார்கள்.பெரும்பாலான தோட்டத் தொழிலாளருக்கு அன்று வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்த காரணத்தால் இந்த 8 தமிழ் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.பிரித்தானிய அரசாங்கம் இந்திய வம்சாவளிப் பிரச்சினையில் இதை ஒரு நீதியான தீர்ப்பாகக் கருதியது.

இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் சிங்கள அரசாங்கம் செய்த முதல் வேலை தமிழ்த் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமையைப் பறித்ததேயாகும்.முதலில் அவர்களின் பிரஜாவுரிமையைப் பிடுங்கிய குடியுரிமைச்சட்டத்தை நிறைவேற்றிக் குடியுரிமை உள்ளவர்களுக்கே வாக்குரிமை உள்ளவர்களுக்கே வாக்குரிமை என்று அடுத்துச் சட்டம் இயற்றியதன் மூலம் இக்கருமம் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது.இதனால் சோல்பரி அரசியல் திட்டத்தின் அடிப்படையே தகர்க்கப்பட்டது .இந்த நடவடிக்கையை சமசமாஜக் கட்சியும் கம்யுனிஸ்ட் அன்று எதிர்த்ததே என்று கூற விரும்புகிறேன்.இன்று அக்கட்சிகளும் வகுப்புவாதக் கொள்கைக்கு அடிபணிந்து விட்டன.
அடுத்து நடந்த அதிமுக்கிய சம்பவம் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா அரசாங்கத்தினால் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டமையாகும்.தமிழ்த் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதே தனிச் சிங்களச் சட்டத்தையும் சாத்தியமாக்கியது.தமிழ்த் தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பொழுதிலும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஒதுக்கப்பட்ட பாராளுமன்றத் தொகுதிகள் நீக்கப்படாது அவை சிங்கள வாக்காளருக்குக் கொடுக்கப்பட்டன.1952 ஆண்டு தொடக்கம் சிங்கள மக்களுக்கு அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமான பிரதிநிதித்துவம் கொண்டதாகப் பாராளுமன்றம் அமைந்தது.அதன் பின் நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் சிங்கள வகுப்புவாதச் சட்டங்களாகவே அமைந்தன.1947 ஆம் ஆண்டு இருந்தது போல வாக்குரிமை இருந்திருக்குமாயின் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏற்பட்ட பிரமாண்டமான வெற்றி ஏற்பட்டிருக்க மாட்டாது.

எண்ணிக்கைக்கு மிஞ்சிய சிங்களப் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றத்திலும் ஒரு புது அரசியலமைப்பும் தயாரிக்கப்பட்டது.அடுத்து நடந்த முக்கிய சம்பவமாகும்.இவ்வரசியல் அமைப்புச் சிங்கள மக்களுக்கு எல்லா உரிமைகளையும் அளித்திருந்தது.தமிழ் மக்களுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை.மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்றி மாற்றப்பட இயலாதவகையில் தனிச் சிங்களச் சட்டம் பலப்பட்டிருக்கின்றது.சிங்களம் நீதிமன்ற மொழியாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் மொழியிலேயே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் எனும் கூற்று சிங்கள மனிதனுக்கே அன்றித் தமிழ் மனிதனுக்கு அல்ல.

இவ்வரசியல் அமைப்பிலே உள்ள ஆட்சேபத்துக்குரிய அம்சங்களைப் பற்றி இங்கு நான் குறிப்பிடத் தேவையில்லை.முந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட்ட சிறு பாதுகாப்புத் தானும் இன்று நீக்கப்பட்டது.இந்தச் சூழ்நிலையில் பல்வேறு அரசியற் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமிழர் கூட்டணியில் ஒன்று சேர்ந்து இக்குறைபாடுகளில் சிலவற்றை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.இவ்வரசியல் அமைப்பில் திருத்தப் பட வேண்டிய ஆறு அம்சங்களைக் குறிப்பிட்டு முதலமைச்சர் அவர்கட்கு தமிழர் கூட்டணியின் சார்பில் நான் ஒரு கடிதம் எழுதினேன்.அப்படித் திருத்துவதற்குச் செப்டெம்பர் முப்பதாம் திகதி வரை அவகாசம் கொடுத்தோம்.ஆனால் ஒன்றுமே செய்யப்படவில்லை.இந்நிலையில் தமிழ் மக்கள் எம்மோடு இருக்கிறார்களா?இல்லையா?என்பதாகக் கூறுமாறு அவர்களைக் கேட்கும் பொறுப்பு தமிழர் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் என் மீது சுமத்தப்பட்டுள்ளது.தமிழ் மக்களில் ஒரு கணிசமான பகுதியினர் இவ்வரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.நாம் இதை மறுக்கிறோம். ஆகவே தமது கூற்றை நிரூபிப்பதற்காக அரசாங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்க விரும்புகிறோம்.இதற்குச் சிறந்த வழியாக தமிழர் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் இச்சபையில் என் இஸ்தானத்தை நான் துறந்து,எனது கொள்கையை முன் வைத்து நான் மீண்டும் போட்டியிடும் போது அரசாங்கம் தனது கொள்கையை முன் வைத்து என்னோடு போட்டியிட வேண்டும் என்று கேட்கிறேன்.அத் தேர்தல் முடிவு தமிழ் மக்களது தீர்ப்பாகவே இருக்கும்.

இந்நாட்டில் கடந்த 24 ஆண்டுகளாக நடந்தவற்றை மனதில் கொண்டு தமிழ் மக்கள் இந்நாட்டில் ஓர் அடிமை இனமாக அழிவதா அல்லது சுதந்திர மக்களாக வாழ்வதா என்ற தமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருக்கும்.விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு மக்களை நான் கேட்பேன்.இந்தக் கொள்கையில் அரசாங்கம் என்னோடு போட்டியிடட்டும்.நான் தோல்வி அடைந்தாள் என் கொள்கையை நான் விட்டுவிடுகிறேன்.அரசாங்கம் தோல்வி அடைந்தாள் தமது கொள்கையையோ, அரசியல் திட்டத்தையோ,தமிழ் மக்கள் ஆதரிப்பதாகக் கூறுவதை நிறுத்திவிட வேண்டும்.இடைத் தேர்தலைப் பின் போட்டு இப்பிரச்சினைகளை ஒட்டி மக்கள் தீர்ப்பு வழங்குவதைத் தடுக்க வேண்டாமென்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.இது தான் அன்று தந்தை செல்வா அரசுக்கு விட்ட சவால்.
அரசு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலைத் தள்ளிப்போட்டு தேர்தலை நடத்தியது.முழு அரசு எந்திரங்ககளும் இரண்டு ஆண்டுகளும் காங்கேசன்துறை தொகுதியில் அரசுக்கு ஆதரவாக உழைத்தன.ஆனால் தந்தை செல்வா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.இவற்றை எல்லாம் இப்பொழுது தந்தையின் பெயரைச்சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துவோர் அறிவார்களா தெரியவில்லை.

இதன் பின்பு 1977 இல் நடந்த பொதுத் தேர்தலில் கூட்டணி அரசு படுதோல்வி அடைந்தது.எதிக்கட்சித் தகுதி கூடக் கிடைக்கவில்லை.தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியானது. எதிர்க்கட்சி நிலையை இப்பொழுது சம்பந்தனுக்கு வழங்கியது போல் எவரும் வழங்கவில்லை.இரண்டாவது பெரியகட்சிக்கு உரியதை அவர்கள் வழங்கினார்கள்.எதிர்க்கட்சிக் கொறடாவும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்குரியதே. அதையும் பெற்றார்கள்.ஆனால் இப்பொழுது ஜே.வி.பி க்கு அல்லவா கொரடா வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சி என்பது ஆளும் எதிர் கட்சி என்று பொருள் கொள்ளலாம் என்பதுதான் உண்மை.

1972 ஆண்டின் அரசியல் அமைப்பு எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதைச் சுருக்கமாகப் பார்த்தோம்.இதற்குப்பின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 நிறைவேற்றப்பட்டது.அதனடிப்படையில் உழைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.இத் தீர்மானம் தமிழ் மக்களின் இரு பெரும் கட்சிகளான காங்கிரசு தமிழரசு ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஒரு கட்சியாக எடுத்த முடிவாகும்.ஜி.ஜி செல்வா இருவரும் இக்கூட்டணியின் தலைவர்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டனர். ஆனால் இவ்விருவரும் திருச்செல்வமும் அடுத்து அடுத்து காலமாகிவிட்டதால் தலைமையில் ஒரு தொய்வு ஏற்பட்டதென்றே கூறவேண்டும். இதன் பின்னர் 1977 ஆண்டுத் தேர்தல் வந்தது.இத்தேர்தலை தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பாகக் கருதி தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணிஅறைகூவல் விட்டது.மக்கள் அதனை ஏற்று வாக்களித்தனர்.ஆட்சியில் இருந்த சிறிமாவோவின் ஐக்கிய முன்னணி படுதோல்வி அடைந்தது.ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஜே.ஆர் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது.தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டாவது பெரும்பான்மைக் கட்சி ஆனதால்எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பு கிடைத்தது. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

தேர்தலில் ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.சிறி ஜெயவர்த்தனபுரவில் வைத்து அரசியல் யாப்புத் தயாரிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஜயவர்த்தனபுரவில் அரசியல் யாப்புத் தயாரித்தால் தாங்கள் நல்லூருக்குச் சென்று தமிழீழ அரசியல் யாப்பைத் தயாரிப்போம் என்று கூறினர்.நாடாளுமன்றம் கொழும்பிலிருந்து ஜெயவர்த்தனபுரவிற்குச் சென்றது.அத்திறப்பு விழாவில் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அத்திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.ஆட்சியாளர் அங்கே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்து புதிய அரசியல் யாப்பைத் தயாரித்தனர். இதில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின் படி தமிழர் விடுதலைக் கூட்டணி கலந்து கொள்ளவில்லை.கலந்து கொள்ளாததற்கான காரணத்தை ஒரு பெரிய உரையாக எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் ஆற்றியிருந்தார்.ஆனால் இவர்கள் நல்லூரில் அரசியல் யாப்புத் தயாரிப்பது பற்றி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சிறிமாவோவின் அரசியல் யாப்பு தீவைக் குடியரசாக கொண்டுவந்தது.பிரதமரே ஆட்சித் தலைவராக இருந்தார் ஆனால் ஜே.ஆரின் யாப்பு பிரதமமந்தியின் அதிகாரங்களை குறைத்து நிறைவேற்று அதிகாரங்கள் நிறைந்த ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கு இத்தீவைக் கொண்டு வந்தது.இந்த அரசியல் யாப்புத் தான் இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றது. தற்பொழுது புதிய அரசியல் யாப்புத் தயாரிக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத் தெரிவுக் குழு அதைத் தயாரிக்கின்றது. அதில் நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின்பிரதிநிதிகள் பங்குபற்றுகின்றனர். தமிழரசுக் கட்சியும் அதில் பங்குகொள்கின்றது

இப்பொழுது சம்பந்தன் முதல் அரசியல் யாப்பு வெள்ளைக்காரரால் தயாரிக்கப்பட்டதாகவும் இரண்டாவது யாப்பு ஒரு கட்சியால் தயாரிக்கப்பட்டதாகவும் மூன்றாவது யாப்பும் தனி ஒரு கட்சியால் தயாரிக்கப்பட்டதாகவும் கூறி வருகின்றார். இந்த யாப்போ அனைவராலும் தயாரிக்கப்படுவதாகவும் கூறுகின்றார்.
1946 அரசியல் யாப்பு வெள்ளையர் தயாரித்தது, 1972 அரசியல் யாப்பு ஒரு கட்சி தயாரித்தது, 1978 அரசியல் யாப்பு ஒருகட்சியால் தயாரிக்கப்பட்டது, இப்பொழுது தான் இரு பெரும் சிங்களக் கட்சிகளும் இணைந்து தயாரிக்கின்றன. எனவே பொது நீதிக்கு வழி உண்டு என்று சம்பந்தன் கூறுகின்றார். இந்தக் கூற்று உண்மையானதா என்று பார்க்க வேண்டும்.1946இல் உருவாக்கப்பட்ட அரசியல்யாப்பு சோல்பரியின் தலைமையில் தான் உருவாக்கப்பட்டது.. ஆனால் அனைவரின் கருத்துகளும் கேட்க்கப்பட்டன.அங்கே தான் ஜி.ஜி 50 இற்கு 50 தை வலியுறுத்தினார்.இதைச் சம்பந்தனால் மறுக்க முடியுமா?அது மட்டுமல்ல இருபத்தொன்பதாவது விதி ஜி.ஜி யின் உரையினாலேயே அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்த இருபத்தொன்பதாவது விதியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் கூட மாற்ற முடியாது என்பதும் கவனிக்கப்படவேண்டும்.இந்த விதியால் பெரிதாக எதுவும் தமிழ் இனத்திற்குக் கிடைத்து விடவில்லை.சிறுபான்மை இனத்திற்கு எதிரான சட்டங்கள் எவையும் கொண்டு வர முடியாது என்ற நிலை அங்கிருந்தது அதனால் தான் 1972 அரசியல் யாப்பு நாடாளுமன்றத்திற்கு வெளியே இயற்றப்பட்டது. உண்மையில் அரசியல் யாப்பு தயாரித்த முறை ஒரு புரட்சி என்றே கூறலாம். இவ்வரசியல் அமைப்பில் அனைத்துக் கட்சியினரும் தான் பங்குபற்றினர்.ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்து அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுத்து அனைவரும் பங்கு பற்றினர்.எனவே ஒருகட்சி தயாரித்த யாப்பு என்று சம்பந்தன் எப்படிக் கூற முடியும்?தமிழ் மக்களின் சார்பில் வைக்கப்பட்ட அனைத்தும் நிராகரிக்கப்பட்ட பின்னரே தமிழரசுக் கட்சி வெளியேறியது. இதர கட்சிகள் தொடர்ந்து பங்குபற்றியே யாப்பை ஏற்றுக்கொண்டனர்.அதில் சில கருத்து வேறுபாடுகள் இருந்திக்கலாம்.ஆனால் தமிழ் மக்களின் திருத்தங்கள் யாவும் அக்கட்சிகளால் ஒற்றுமையாகவே நிராகரிக்கப்பட்டன. 1978 ஆண்டு அரசியல் யாப்பில் தமிழரின் அன்றைய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையுடன் நாடாளுமன்றம் சென்றதாலும் திருச்செல்வம் வைத்த நீதிமன்ற வாதங்களின் அடிப்படையிலும் சிறிலங்காவின் அரசியல் யாப்புத் தயாரிப்பில் பங்குபற்றுவதில்லை என்று முடிவெடுத்திருந்தனர். இதர நாடாளுமன்றக் கட்சிகள் பங்குபற்றியே யாப்பும் நிறைவெற்றப்பட்டது. இங்கேயும் சம்பந்தனின் வாதம் அடிபட்டுப் போகின்றது.

தற்பொழுது நாடாளுமன்றத்தெரிவுக்குழு அரசியல் யாப்புத் தயாரிக்கின்றது அல்லது திருத்தங்கள் செய்யப் போகின்றது.எது நடந்தாலும் ஐ.தே.கவும் மைத்திரியின் கட்சியும் இணைந்துள்ளன என்பதே சம்பந்தனின் வாதம். ரணில் சமஷ்டியை ஏற்றுக்கொள்ளவில்லை, மைத்திரி ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் இதனை அமைச்சர் கிரியெல்ல தெளிவாகக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை என்று. அண்மையில் அமைச்சர்நிமால் சிறிபால டி சில்வாவும் கூறியுள்ளார். இப்படி இரு கட்சியினரும் கூறும் பொழுது குழப்பிவிட வேண்டாம் நாங்கள் மென் வலு சாணக்கியத்தின் மூலம் கொண்டுவருவோம் என்று சம்பந்தன் கூறுகிறார். எதைக் கொண்டுவரப்போகின்றார். ‘எழுக தமிழ்’ மூலம் உரத்துக் கேட்டல் மகிந்தவின் ஆட்கள் கேட்டு விடுவார்கள்; அவசரப் பட வேண்டாமாம் எனன்கிறார். ஆப்படியாயின் அரசியல் யாப்பு தெரிவுக்குழுவில் இரகசியமாக அரசியல் யாப்பை எழுதி நிறைவேற்ற முடியுமா? அத்தெரிவுக் குழுவில் மகிந்தவின் ஆட்கள் இல்லையா. சரி இருக்கட்டும். நாடாளுமன்றத்திற்கு வந்துதானே யாப்பு நிறைவேற்றப் படவேண்டும். பின்னர் மக்கள் வாக்கெடுப்புக்குப் போகவேண்டும் அதில் சிங்கள வாக்குகள் சமமாகப் பிரியும் பொழுது தமிழ் மக்களின் வாக்கைப் பயன்படுத்தி வென்றுவிடலாம் என்பதுதானே திட்டம். அப்படியானால் தமிழ் மக்களுக்கு என்னத்தை யாப்பு வழங்கப் போகின்றது என்று கூறுவதில் என்ன தயக்கம்?;. இப்பொழுது இதை ஏற்போம் போகப் போக பின்னர் பார்ப்போம் என்று கூறுவது சரியா?
1965 இல் ஐக்கிய தேசியக்கட்சி தமிழரசுக் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்த பொழுது எதிர்க்கட்சியினர் டட்லியைப் பார்த்துச் சிரித்தனர்.அப்பொழுது டட்லி சொன்னார் ‘இப்போது என்னைப் பார்த்துச் சிரிக்கின்றீர்கள் ஆனால் யார் இறுதியில் யாரைப் பார்த்து யார் சிரிக்கப் ;போகிறார்கள் என்று பார்ப்போம்’ என்றார்.மாவட்டசபைகள் மசோதா தருவதாக ஒப்பந்தம் செய்த டட்லி அச் சட்டமூலத்தைக் கொண்டுவராது வெறும் வெள்ளை அறிக்கையாகக் கொண்டுவந்து திறந்த விவாதத்திற்கு வழிவகுத்தார்.அப்படியானால் கட்சிக் கட்டுப்பாடின்றி உறுப்பினர்கள் பேசலாம் என்ன நடந்தது. ஐக்கிய தேசிக் கட்சியினரும் எதிக்கட்சியினரும் காங்கிரசும் மாவட்டசபையை விமர்சித்துப் பேசின. தமிழரசுக் கட்சியினர் தனித்து விடப்பட்டனர். ஒப்பந்தம் போட்டு ஏமாற்றிய டட்லி முன்பு கூறியது போல்சிரித்தார். இந்த நிலைமை தான் சம்பந்தனுக்கு ஏற்படப்போகிறதா?
சோல்பரி அரசியல் யாப்பைத் தயாரித்த சேர் ஐவர் ஜென்னிங்க்ஸ் என்பவர் பல ஆண்டுகளின் பின்னர் இலங்கைத் தீவுக்கு வந்தபொழுது தாம் தவறு செய்து விட்டதாகவும் இலங்கைக்கு சமஷ்டி அரசியலே மிகப் பொருத்தம் என்று கூறியிருந்தார். சிறிலங்காவின் பிரதமர் அரசியல் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார். அரசியல் அமைப்பு ஒற்றையாட்சி அமைப்பாகவே இருக்கும். சமஷ்டிக்கு அதில் இடமில்லை என்பது அதில் ஒன்று.அதை விடுத்து மற்றொன்றையும் அவர் கூறியுள்ளார். அது என்னவெனில் 1972 அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்ட பௌத்தத்தின் உரிமை 1978 அரசியல் அமைப்பிலும் உள்ளது. இதன்படி அரசியல் அமைப்பில் புத்தமதத்தைப் பாதுகாக்கும்,பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கும் உறுப்புரையை அவ்வாறே முன்கொண்டு செல்ல வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு அரசியல் அமைப்பினூடாக புத்தமதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் விடயத்தை அவ்வாறே முன் கொண்டு செல்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார். இக்கூற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுக்கவில்லை. எனவே புத்த மதத்தை அரச மதமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுள்ளது என்பதே உண்மையாகும். சிறிலங்கா குடியரசிலே பெரும்பான்மை மக்களின் சமயமாகிய புத்த மதத்திற்கு அதற்குரிய இடம் வழங்கப்படல் வேண்டும் 5(4) ஆம் அடிப்படைத் தீர்மானத்தினால் எல்லாச் சமயங்களுக்கும் உறுதியளிக்கும் அதே நேரத்தில் புத்த மதத்தை பாதுகாத்தலும் பேணி வளர்ப்பதும்அரசின் கடமையாதல் வேண்டும். இவ்வாறான அரசியல் யாப்பு முன்மொழிவை தமிழரசுக் கட்சி முற்றாக எதிர்த்தது.இம்முன் மொழிவுக்கு தந்தை செல்வா திருத்தங்கள் கொண்டுவந்தார். அது பின்வருமாறு இருந்தது..’சிறிலங்கா குடியரசு ஒரு மதச் சார்பற்ற அரசாதல் வேண்டும் ஆனால் அது புத்த மதம் இந்து மதம் கிறிஸ்த்தவ மதம் இஸ்லாம் மதம் ஆகியவற்றை பாதுகாக்கவும்,பேணி வளர்க்கவும் வேண்டும் என்றிருந்தது. ஆனால் அத்திருத்தம் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

இது தான் தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சியின் கொள்கை. ஆனால் இன்று தந்தை செல்வாவைப் பின்பற்றுவதாகக் கூறுவோர் என்ன நிலைப் பாட்டில் உள்ளனர். தமிழரசுக் கட்சி தான் எங்கள் கட்சி என்று சொல்வோர் அருள்கூர்ந்து இதை நோக்கவும். இது முற்றிலும் தந்தை செல்வாவின் இலட்சியத்திற்கு முரண்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் இலட்சியம்தான் முதன்மையானது. தனிமனிதர்களல்ல, இந்தச் செல்வநாயகம் கொள்கைதவறினால் என்னைப் பின்பற்றாதீர்கள். கொள்கையில் உறுதியாக இருங்கள் என்று தந்தை செல்வா கூறினார். அதற்கமைய நடக்க வேண்டியதுதான் தமிழரசுக்கட்சியினரின் சரியான வழியாகும்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.