இலங்கை பிரதான செய்திகள்

நாட்டின் நலனைக் கருத்திற்கொள்ளாத பெரும்பான்மைக் கட்சிகளால் அரசியலமைப்பு உருவாக்கம் தாமதப்படுகிறது – அமெரிக்க தரப்பிடம் சம்பந்தன் :


இலங்கை வந்துள்ள  ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான றொட்னி பிறீலிங்குசன், ஹென்றி கியூலர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் மற்றும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன்   பாராளுமன்ற உறுப்பினர்   சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்

சந்திப்பின் போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அவர்களுக்கு  தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. என்பனவற்றின் உறுப்பினர்கள் நாட்டின் நலனைக் கருத்திற் கொள்ளாது தமது அரசியல் எதிர்காலத்தை முன்வைத்துச் செயற்படுவதன் நிமித்தம் இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற ஓர் இழுத்தடிப்பு நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அரசியல் யாப்பானது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதோடு மாத்திரமல்லாமல், அது சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்தப் பொன்னான தருணத்தை நாம் தவறவிடக் கூடாது எனத் தெரிவித்த  சம்பந்தன், தான் தமிழ் மக்களின் நன்மைக்காக மாத்திரம் இதைக் கூறவில்லை எனவும்  இலங்கைவாழ் அனைத்து மக்களின் நன்மைக்காகவும்   தெரிவிக்கிறேன் எனக் கூறினார்.

மேலும், பிரிவுபடாத, ஒன்றிணைந்த ஐக்கிய இலங்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமையினால் ஏற்கெனவே 50சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ள அதேவேளை, நியாயமான தீர்வு ஒன்றினை எட்ட முடியாத சந்தர்ப்பத்தில் இன்னும் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவார்கள்.  அந்த நிலைமை நடைபெறக் கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்பந்தன் , காணாமல்போனோர் விடயம் தொடர்பில் இனிமேலும் காலதாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்   காணாமல்போனோர் அலுவலக சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விசாரணைப் பொறிமுறைகளுக்கூடாக காணாமல்போனோர் தொடர்பிலான உண்மை கண்டறியப்பட்டு அவர்களது உறவினர்களுக்கு தக்க ஆதாரங்களுடன் அவை வெளிக்காட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காணி விடுவிப்பு தொடர்பாகத் தெளிவுபடுத்திய  சம்பந்தன்   இக்காணிகளில் குடிகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கு பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு அந்த உற்பத்திப் பொருட்களை அக்காணிகளின் உரிமையாளர்களுக்கே விற்று வருகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

தங்கள் சொந்தக் காணிகளில் வாழும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ள இந்நிலைமையானது வேதனைக்குரியது எனத் தெரிவித்த   அவர் யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்களாகியுள்ள போதிலும் இவ்விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை வேலையற்ற இளைஞர்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த  சுமந்திரன்   பாரிய அளவிலான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கத்திடம் ஒரு தெளிவான திட்டமில்லை எனவும் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மையானது பல்வேறு சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாகவும் எடுத்துக் கூறினார்
சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை அமெரிக்க அரசாங்கமானது உறுதி செய்யவேண்டும் எனவும்  அவர்  கேட்டுக் கொண்டார்.

இதனை செவிமடுத்த  நிச்சயமாக உங்களுடைய கரிசனைகளை அரச உயர்மட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் என அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • ஸ்ரீ லங்கா அரசாங்கத்தை கையாண்டு தமிழ் மக்களின் உரிமைகளை பெற வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியாதவராக சம்பந்தர் இருக்கின்றார்.

    தாமதமாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சாம்பந்தனுக்கு உதவும் வகையில் ஓய்வுபெற்ற, அனுபவம் வாய்ந்த, செல்வாக்கு பெற்ற, சில ஆற்றல் மிக்க வெளிநாட்டு இராஜதந்திரிகளை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers