இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு 3 – ஒக்சிசன் பற்றாக்குறையினால் 60-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ள மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பணிநீக்கம்


உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒக்சிசன் பற்றாக்குறையினால்,   தொடர்ந்து ஐந்து நாட்களில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர்  தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வரை உத்தர பிரதேச அரசு பணி நீக்கம் செய்துள்ளது.
அத்துடன்  முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்தமோடியை  தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து விளக்கி உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

2ஆம் இணைப்பு – உ.பி. மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியான கொடூரம் – நீதி விசாரணைக்கு உத்தரவு:-

Aug 12, 2017 @ 03:50

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒக்சிசன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது.

முதலில், இரு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியாகி உள்ளனர். கோரக்பூர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கும் பிஆர்டி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஒக்சிசனுக்கான கட்டணத் தொகை ரூ. 67 லட்சம் வழங்கப்படாததால் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியானது.

மாவட்ட கலெக்டர் ராஜீவ் ராவுத்லே இது குறித்து கூறுகையில், “கோரக்பூர் பிஆர்டி மருத்துவ கல்லூரியில் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக எந்த மரணமும் நிகழவில்லை எனவும் நேற்று மட்டும் தான் 7 பேர் உயிரிழந்தனர் எனவும் அதுவும் பல்வேறு மருத்துவ காரணங்கள் காரணமாகவே  உயிரிழந்தனர் எனவும் தெரிவித்தார்

கோரக்பூர் தொகுதி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தொகுதியாகும். இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்ட நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர்.

கோரக்பூரில் உள்ள அரசு சார்பில் இயங்கும் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரியில் தான் கடந்த 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. ஒகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி இந்த மரணங்கள் நடைபெற்று வந்துள்ளதன. நேற்று முன் தினம் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

60 குழந்தைககளை பலி கொண்ட இந்த கொடூர சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு சார்பில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை என்ற காரணம் மறுக்கப்படுகிறது.

குழந்தைகளின் மரணம் துரதிருஷ்டவசமானது என்றும் குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரபிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்


கோரக்பூர் மருத்துவமனையில் 60 குழந்தைகள் பலி: சோனியா காந்தி, ராகுல் கவலை:

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒக்சிசன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு 5 நாட்களில் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளனர்.

சோனியா கூறுகையில், “இந்த சோகமயமான சம்பவம் குறித்து தான் அடைந்த வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை. உயிரிழந்த அப்பாவி குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உத்தரபிரதேச மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், பிரமோத் திவாரி, சஞ்சய் சிங் உள்ளிட்டோர் இன்று காலை மருத்துவமனையை பார்வையிடுகின்றனர்.

குழந்தைகளின் இறப்புக்கு மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் முதல்வர் யோகி தொடர்ந்து கேட்டு கொண்டு வருகிறார். இருப்பினும் யோகி அரசுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் பிரபல வைத்தியசாலையில்  ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக    30 குழந்தைகள் உயிரிழப்பு


இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக  இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே   ஒக்சிசன்  பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு இரு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மிகப் பிரபலமான குறித்த   மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஒக்சிசனுக்கான கட்டணத் தொகை  வழங்கப்படாததால் விநியோகம் நிறுத்தப்பட்டதனால் இவ்வாறு  உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers