இலங்கை பிரதான செய்திகள்

பிரபாகரனின் ஆளுமையினால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள், நுழைய முடியாத நிலை இருந்தது- கோத்தாபய:-

எதுவுமே இல்லாத சூழ்நிலையில் ஆயுதம் ஏந்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பலம்பொருந்திய, ஒரு ஆயுதப்படையினை உருவாக்கினார் என, இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில், பிரபாகரன் விடுதலைப்புலிகள் அமைப்பினை அடிமட்டத்திலிருந்து உறுதியான கட்டமைப்பாக உருவாக்கி இருந்ததாகவும், தரைப்படை, விமானப்படை, கடற்படை என தமது படைபலத்தை விஸ்தரித்த அவர், பரந்துபட்ட நிலப்பரப்பினையும் தனது ஆளுகைக்குள் வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

தம்மிடமிருந்த ஆயுத பலத்தை முழுமையாக நம்பிய பிரபாகரன், இலங்கை படையினருக்கு எதிராக, இறுதிவரையில் யுத்தம் செய்ய முடிவு செய்ததாகவும், அவரது ஆளுமையினால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் இலங்கை படையினரோ பொலிஸாரோ நுழைய முடியாத நிலைமை காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக தான் பதவியேற்றபோது, விடுதலைப் புலிகள் அமைப்பில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலான உறுப்பினர்கள் இருந்தனர் என்றும், அவர்கள், படையினருக்கு எதிராக மிகச்சிறப்பான ஆயுத பலத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்த கோத்தாபய, முல்லைத்தீவு, ஆனையிறவு, பூநகரி போன்ற பகுதிகளில் விடுதலைப்புலிகள் தங்களை மிகவும் பலப்படுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக ஆயுத பலத்தையே நம்பியிருந்த பிரபாகரனிடத்தில், படையினருக்கு சற்றும் குறையாத அளவில் ஆயுதங்களைப் பெறும் வல்லமையும், வழிமுறைகளும் இருந்தமையினால், பேச்சுவார்த்தை மூலம் தீர்வைப் பெறுவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ குறிப்பிட்டு உள்ளார்.

பிரபாகரன் சரணடையவும் இல்லை சரணடைய விரும்பவும் இல்லை:-
பிரபாகரன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைய விரும்பவில்லை. யுத்தம் நிறைவடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அவருடைய தொலைபேசி உரையாடல் ஒன்றை ஒற்றுக் கேட்டோம். அந்த உரையாடல் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தது. அதன்போது யுத்தத்தை கைவிடுங்கள், வெளிநாட்டுக்கு ஒன்றிற்கு தப்பிச் செல்லுங்கள், பின்னர் அதற்கான நேரம் வரும்போது நாட்டை மீட்டு எடுப்போம் என குமரன் பத்மநாதன் பிரபாகரனிற்கு ஆலோசனை கூறியிருந்தார்.  எனினும் இதற்கு பதிலளித்த பிரபாகரன், தன்னால் நிலைமைகளை மாற்ற முடியும், அதற்கு ஆயுதங்கள் தேவை, என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்த உரையாடல், எந்த சூழ்நிலையிலும் பிரபாகரனுக்கு சரணடையும் எண்ணம் இருக்கவில்லை என்பதை தமக்கு உணர்த்தி இருந்ததாக கோத்தபாய கூறினார்.

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவும் இல்லை அதற்கான வாய்ப்பு கிடைக்கவும் இல்லை:-

இதே வேளை இறுதி யுத்தத்தின் போது 50 பேர் சரணடைய தயாராக இருப்பதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எமக்கு அறிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேலதிக தகவல்களை அவர்   வெளியிடவில்லை எனவும் கோத்தாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்திருக்கவில்லை. அவர் உயிரிழந்து விட்டதாக யுத்தகளத்தில் இருந்த இராணுவத்தினரே முதலில் எனக்கு அறிவித்தனர். குறிப்பாக மே மாதம் 16ஆம் திகதி இரவு புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றது. இதன்போதே அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்புகிறோம்.

மெய்ப் பாதுகாவலர்களின் கடுமையான பாதுகாப்புடன், பிரபாகரன் மறைந்திருந்தார். இதன்போது பிரபாகரனின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினருக்கும், பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்களுக்கும் இடையில், கடுமையான மோதல் நிகழ்ந்தது. இந்த மோலின்போதே அவர் இறந்திருக்கலாம் என எண்ணுகிறோம்.

பிரபாகரனின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது என்றே கூறப்பட்டது. அவரை உயிருடன் பிடித்தமைக்கான தடயங்களோ, அதற்கான ஒளிப்படங்களோ எவரிடமும் இல்லை, அந்த சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை, அவரை ஒருபோதும் உயிருடன் பிடிக்கவும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.