இலங்கை பிரதான செய்திகள்

உண்ணாவிரத கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் அமைச்சரவையில் பிரஸ்தாபம்

தமது வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இன்று அமைச்சரவையில் பிரஸ்தாபித்த    அமைச்சர்    மனோ கணேசனிடம் இது தொடர்பில் சட்டமாதிபரிடம் உடன் விளக்கம் கோரி தீர்வை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கருத்து கூறிய அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்ததாவது,

அமைச்சரவையில் இதுபற்றி பிரஸ்தாபித்ததையடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இதுபற்றிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இந்த விவகாரம் பற்றி ஜனாதிபதியிடம் விளக்கி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் சாட்சிகள், வவுனியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை காட்டியுள்ளனர். இதை காரணமாக கொண்டே வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

சட்டமாஅதிபர் திணைக்களத்தின் இந்த முடிவு நியாயமானது அல்ல. சாட்சிகளின் தேவையை கருதி வழக்குகள் இடம் மாற்றப்படுவது ஏற்புடையதல்ல.  இன்று யுத்தம் முடிந்த நிலையில் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் எவரும் சென்று வரக்கூடிய நிலையில், சட்டமாஅதிபர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது தமிழ் மக்களுக்கு தவறான செய்தியை தருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஜனாதிபதி, இதுபற்றி தான் அறியவில்லை என்றும்,  சாட்சிகளின் தேவையை கருதி வழக்குகள் இடம் மாற்றப்படுவது ஏற்புடையதல்ல என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். இதுபற்றி தான் சட்டமாஅதிபரிடம் விளக்கம் கோரி தீர்வு காண்பதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்துள்ளார்.

இதுபற்றிய கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனும் எழுதியுள்ளதாக, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இச்சமயத்தில் கூறினார் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.