இலங்கை பிரதான செய்திகள்

காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள்

காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி   தெரிவித்துள்ளார்.  நாட்டின் வனப் பரம்பலைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் விசேட அவதானத்துடன் செயற்படுவதுடன், அதற்கான அனைத்து செயற்பாடுகளும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் எனவும்  ஜனாதிபதி   வலியுறுத்தினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) முற்பகல் இடம்பெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் சுற்றாடல் பாதுகாப்பிற்கான பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட ஏனைய சர்வதேச பிரகடனங்களை உரியவாறு பின்பற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் தேசிய ரீதியில் அதற்கான செயற்திட்டங்கள் பலவும் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

காடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான வழிகாட்டல்களை உருவாக்குதல், வலய ரீதியில் வனப் பரம்பல் மற்றும் புவி அமைவுகளை சீரமைப்பதற்கான வழிமுறைகளை அங்கீகரித்தல், நகர அமைவுகளிற்கேற்ப தாவரங்களின் பரம்பல், உணவு மற்றும் போசணைப் பாதுகாப்பிற்கான வனங்களின் பங்களிப்பு, காடுகளை முகாமை செய்வதற்குரிய புதிய சமூக அணுகுமுறைகள் மற்றும் 2020 ஆம் ஆண்டில் வன வளங்களை மதிப்பீடு செய்தல் போன்ற தலைப்புக்களில் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

ஆசிய பசுபிக் வலய வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 34 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பல்வேறு மட்டத்திலான கண்காணிப்பு நிறுவனங்களின் 300 பிரதிநிதிகளும் இக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.