இலங்கை பிரதான செய்திகள்

நாட்டின் ஆட்சிமுறைமையினை விளக்குவதற்கான சரியான சிங்களப் பதம் “ஏக்கிய” என எல்லோரும் ஏற்றுள்ளார்கள்…

தமிழாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

புதிய அரசியலமைப்பில் ஒருமித்த கருத்துக்களை உருவாக்கும் நோக்கிலான  விவாதம் – பிரதமர் ரணில்-

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தற்போதைய அரசியலமைப்புத் தொடர்பான விவாதம் புதிய அரசியலமைப்பில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கானதாகும் எனத் தெரிவித்தார். “தற்போதைய நடைமுறை, ஒருமித்த கருத்தை அடைவதற்கானதாகும். முதன்மைச் சிக்கல்கள் குறித்து நாடாளுமன்றத்திலும் நாட்டிலும் சம்மதம் பெற வேண்டியது முதன்மையானது” என அம்பாந்தோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய சட்ட மாநாடு 2017/2018 இன் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்தார்.

“இதுவரை இது தொடர்பில் என்ன நடந்தது? மற்றும் இதனைத் தொடர்வதா இல்லையா” எனப் பாராளுமன்றத்தின் கருத்துகளைப் பெறும் நோக்குடன் பாராளுமன்றத்தில் இப்போது இடைக்கால அறிக்கை தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது என பிரதமர் தெரிவித்தார். “ஒரு புதிய அரசியலமைப்பு ஏன் தேவை? என மக்கள் சிலர் கேட்கின்றார்கள். போரின் பின்னர் எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு தேவை. எங்களுக்குப் புதிய தேர்தல் முறைமை தேவை. நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமை தொடர்பிலான விவாதம் கொண்டுவரப்படல் வேண்டும்” என பிரதமர் விளக்கமளித்தார். மத மற்றும் சிவில் சமுதாயத் தலைவர்களுடன் மேலும் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் இந்த நடைமுறை புதிய அரசியலமைப்பின் வரைவு தொடங்கும் முன்னர் வரை அதாவது பெப்ரவரி அல்லது மார்ச் வரை நடைபெறும் என்றும் பிரதமர் கூறினார்.

“சட்டப்பூர்வ அம்சங்களுக்கு நாங்கள் செல்லவில்லை. எல்லோரும் ஒரே ஆவணத்துடன் வெளிவர வேண்டும் என்பது வரலாற்று முக்கியமானது” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் ஆட்சிமுறைமையினை  விளக்குவதற்கான சரியான சிங்களப் பதம் “ஏக்கிய” என எல்லோரும் தற்போது ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்றும் அதனை எவரும் மறுக்கவில்லையெனவும் பிரதமர் கூறினார். ஐக்கிய இராட்சியத்திலும் அமெரிக்காவிலும் “சமஸ்டி/ கூட்டாட்சி” என்பது உச்ச சட்ட அதிகாரத்தைப் பிரிப்பது என்ற பொருளில் உள்ளது. ஆனால், ஒற்றையாட்சி அதிகாரமுள்ளதாகக் கூறப்படும் ஐக்கிய இராட்சியத்தின் நாடாளுமன்றில் ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து என்பன ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு சாத்தியம் உண்டென கடந்த தசாப்தத்தில் தீர்மானிக்கப்பட்டது என பிரதமர் மேலும் கூறினார்.

“ஒற்றையாட்சி (Unitary) என்பது பிரிக்கப்படமுடியாமையைக் குறிக்கவில்லை. பாராளுமன்றத்தில் அதிகாரத்தைக் குவிப்பது என்ற ஒரு பொருளை மட்டுமே அது குறிக்கின்றது” என பிரதமர் சுட்டிக் காட்டினார். இருந்தபோதும், சிங்களத்தில் இது இரண்டையும் குறிக்கும். எனவே ஒற்றையாட்சி (Unitary) என்பது சரியான பதமாக இருக்குமா? என்பது தான் விவாதிக்கப்பட வேண்டியதாக உள்ளது. “ஏக்கிய” என்ற வலுவான வார்த்தையை உருவாக்கினோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்னொழியப்பட்ட வரைபுகளை எடுத்து நோக்கினேன். அதில் “ஏக்கிய” என்ற சொல்லே மூன்று மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

மதம் சம்பந்தமாக அனைத்து மதத் தலைவர்கள் -மகாநாயக்கர்கள், கார்டினல்கள், ஆயர்கள் மற்றும் பிற மதகுருமார்கள்- ஆகியோரைக் கேட்டுக் கொள்வது சிறந்தது என்று அவர் கூறினார். “இது ஒரு அரசியல் நடைமுறை மட்டுமே. இறுதியாக, ஒரு வாக்கெடுப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதில் முடிவுசெய்ய வேண்டியது இளைய தலைமுறையினரைப் பொறுத்தது ஆகிறது. இது ஒருமித்த கருத்தை உருவாக்கும் அரசியல் வழிமுறையின் தொடக்கமாகும்” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.