இலங்கை பிரதான செய்திகள்

“பொலிஸைச் சுத்தப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது” “தண்டனை பெற்றவர்களை வடக்கிற்கு கடமைக்கு அனுப்ப வேண்டாம்”

அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

எமது நாட்டின் அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியமாகும். நீண்டகால யுத்தமானது முப்படைகள் மத்தியில் இந்த எண்ணக்கருவை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்திருக்கலாம். எனவே, அரசியல் தலைமைத்துவமானது இந்த எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதுடன், இந்த எண்ணக்கருவை முப்படைகளுக்கும் வழங்கி, அதனை தீவிரமாக மேலோங்கச் செய்வதற்கு முன்வர வேண்டும். மேலும், முப்படைகளில் பல்லினத் தன்மையற்ற முறைமை களையப்பட வேண்டியதும் அவசிமாகும். இவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்ற சூழலே இந்த நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு பலமான அத்திவாரத்தை இடும் என்பதில் சந்தேகமில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு எனது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் எட்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயத் தன்மைகள் முழுமையாகவே அகற்றப்படாதிருக்கின்ற சமூகச் சூழலையே காணக்கூடியதாக இருப்பதாக வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வந்து செல்கின்றவர்கள் குறிப்பிட்டு வருவது வழக்கமாக இருக்கின்றது. எமது நாட்டிலுள்ளவர்களில் பலர் இந்த விடயத்தை உணராதிருப்பதற்கு, கடந்தகால யுத்தச் சூழ்நிலைக்குள் இருந்தே பழக்கப்பட்டுவிட்டமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

எனவே, இத்தகைய நிலைமைகள் அகற்றப்பட்டு, முழுமையான இயல்பு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில், நான் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளவாறு, எமது பகுதிகளில் காணப்படுகின்ற யுத்தச் சுவடுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டியதுடன், அப்பகுதிகளில் முழுமையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் பொருளாதார அபிவிருத்தியே தற்போதைய முக்கிய இலக்காக இருக்கும் நிலையில், அதற்கான அயராத முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதுடன், அதனுடன் இணைந்ததான சில முக்கிய விடயங்களும் சமகாலத்தில் முன்னெடுக்கப்படுவதே அந்த பொருளாதார அபிவிருத்தியினை சாத்தியமாக்கும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதில், முக்கியமானது தேசிய நல்லிணக்கமாகும். தேசிய நல்லிணக்கம் என்பது ஒரு துறை சார்ந்ததோ, ஒரு சமூக மக்கள் சார்ந்ததோ அல்ல. அது பரவலான வியாபித்த வளங்களைச் சார்ந்து நிற்கின்றது. அந்த வகையில் இன்று இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மூன்று அமைச்சுக்களும் முக்கியமானவையாகும்.
தேசிய நல்லிணக்கத்திற்குள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமை போன்ற முக்கிய கட்டமைப்புகள் உள்ளடக்கப்பட்டு, அது, நேர்மையான செயல்வடிவங்களைக் கொள்கின்றபோது, எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பி, ஐக்கியமானதும், சமாதானதுமான நாட்டிற்குள் நிலைபேறான – நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியினை சாத்தியமாக்க முடியும்.

எனவே, தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டுமாயின், காணாமற்போனோர் சென்ற வழி, சென்றடைந்த இடம் என்பன கண்டறியப்பட்டு அதன் உண்மைகள் அவர்கள்தம் உறவுகளுக்கு அறியப்படுத்துதல் முக்கியமானது. இதில் காட்டப்படுகின்ற தாமதங்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கான பாதகமாகும் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, கடும் பாதிப்புகளுக்கு ஆட்பட்டோர், தங்களது கௌரவத்தையும், நம்பிக்கையையும் மீளக் கட்டியெழுப்பிக் கொள்ள இயன்ற வகையில், மறு வாழ்வை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

மேற்படி கடுமையான பாதிப்புகளுக்கு காரணகர்த்தாக்கள் எவரோ, அவர்கள், சட்டத்தின் பிரகாரமும், நம்பிக்கை சாட்சியத்தின் பிரகாரமும் தீர்ப்பளிக்கப்படுதலுக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

அத்துடன், சமாதானமானதும், சுபீட்சமானதுமான நாட்டினை மீளக் கட்டியமைப்பதற்கும், கடந்தகால துயரங்கள் மீள ஏற்படாத வகையில் தவிர்த்துக் கொள்வதற்குமாக எமது நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைப்பதற்கான இதயசுத்தியுடனான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

அடுத்தாக, எமது மக்களது சொந்த காணி, நிலங்கள் விடுவிப்பு விடயமானது, தமக்கு உரித்தற்றதைக் கேட்பதோ, புதிய ஏற்பாடுகளின் ஊடாகக் கேட்பதோ, அல்லது எவரிடமிருந்துமோ, அரசிடமிருந்துமோ பறித்தெடுப்பதுவோ அல்ல. படையினரால் கையகப்படுத்திய தமது சொந்த காணி, நிலங்களை மீளக் கையேற்பதற்காக எமது மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வடக்கு மகாணத்தில் மாத்திரம் படையினரின் வசம் இருப்பதாகவே தெரிய வருகின்றது. ஆனால், சுமார் 30 ஆயிரத்திற்கும் குறைந்த அளவிலான ஏக்கர் நிலப்பரப்பே படையினர் வசம் இருப்பதாக சில தகவல்கள் அரச சார்பு நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அரச மற்றும் தனியார் காணிகள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டே இந்த கணக்கினை அவர்கள் காட்டுகின்றனர். இவர்கள் இங்கு காட்டுகின்ற அரச காணிகள் பிரதேச செயலாளர்களின் ஆளுகைக்கு உட்பட்டவையாகும். இது தவிர, வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் போன்றவற்றையும் படையினர் கையகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்தக் காணி, நிலங்கள், எமது மக்களின் வாழ்விடங்களை மாத்திரம் கொண்டவையல்ல. அம் மக்களின் வாழ்வாதார உயிர் நாடியாகவும், உணர்வுகளின் உறைவிடமாகவும் விளங்குகின்றன.

எனவே, இந்தக் காணிகளை உடன் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளே எமது மக்களுக்கான எதிர்கால சுபீட்சத்திற்கான ஒரு வழியாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த நிலையில், அங்கிருக்கும் இராணுவத்தை எங்கே அனுப்புவது என்பது தொடர்பில் சிலர் தெரிவித்துவரும் கருத்துகளும் அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எமது மக்கள் வாழ்கின்ற, எமது மக்களது வாழ்வாதாரங்கள் அடங்கிய இடங்களே முப் படையினரின் அளவுக்கு அதிகமான நிலைகொள்ளலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இது, அந்தச் சூழலின் தன்மை குறித்தும் ஆதிக்கம் செலுத்துவதாகவே எமது மக்களால் உணரப்படுகின்றது. இத்தகைய நிலையில் படையினர் அந்த இடங்களைவிட்டு, தேசிய பாதுகாப்பின் தேவை கருதிய அளவில் பொருளாதார வளங்களற்ற, குடியேறத்தக்க அரச தரிசு நிலங்களில் நிலைகொள்ள முடியும்.

எதற்கும் ஒரு தேவை இருக்க வேண்டும். தேவையற்றவை திணிக்கப்படும் போதுதான் தேவையற்ற பிரச்சினைகள் உருவெடுக்கின்றன என்பதனை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்தாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்ற ஒரு விடயமாகவுள்ள போதிலும், உரிய தரப்பினர் அது தொடர்பில் அக்கறை காட்டாது, தட்டிக்கழித்து வருகின்ற நிலைமைகளின் மத்தியில், யாரிடம் போய் முறையிடுவது என்ற கேள்வியே எமது மக்கள் மத்தியில் எஞ்சியிருக்கின்றது.

செய்ய வேண்டியதும், செய்யக்கூடியதுமான பல விடயங்களைக்கூட செய்யாது, அவற்றுக்கு பூதாகாரமான வியாக்கியானங்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்களால் கூறப்பட்டு வருகின்ற நிலையில், ஒரு மிகையான விரக்தி நிலையில் இருக்கின்ற எமது மக்கள் மத்தியிலேயே ‘சர்வதேசத் தலையீடு தேவை’ என்கின்ற ஒரு எண்ணப்பாடு புகுத்தப்படுகின்றது என்பதை தென்பகுதி அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவை அனைத்துமே யுத்தத்தின் பின்னரான காலத்தை நிலைமாற்றுக் காலமாகக் கொண்டு செயற்படுத்தி, முடிக்கப்பட்டிருப்பின், இன்று எமது நாடு பொருளாதா அபிவிருத்திப் பாதையில் வீறுநடை கொண்டு பிரவேசித்திருக்கும். துரதிர்ஸ்டவசமாக அது முறையாக செயற்படுத்தப்படவில்லை. செயற்படுத்தப்படவில்லை என்ற விடயத்தையே மீண்டும், மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்காமல், இப்போதாவது இவற்றைச் செயற்படுத்த முன்வருமாறே வலியுறுத்துகின்றேன்.

இந்த நாட்டில் கடந்த காலகட்டத்திலே எமது மக்கள் இரண்டு வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். ஒன்று வன்முறை சார்ந்த பிரச்சினையாகும். அது இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. அடுத்தது, அன்றாட, அடிப்படை மற்றும் அரசியல் உரிமைப் பிரச்சினையாகும். இது இன்றும் தொடர்கின்றது. அந்த வகையில், பொருளாதார வறுமைக்கும், நீதியின் வறுமைக்கும் உட்பட்டவர்களாகவே எமது மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர் என்பதை மிகவும் வேதனையுடன் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

எனவே, எதிர்வருகின்ற காலத்தையாவது நிலை மாற்றுக் காலமாக, உரிய முறையில் பயன்படுத்தி, எமது மக்களை அனைத்து வறுமைகளிலிருந்தும் கரைசேர்க்குமாறு, இந்தச் சபையினூடாக அனைவரிடமும் – மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், முற்போக்குவாதிகள், புத்திஜீவிகள், பொது மக்கள் என அனைவரிடமும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், எமது நாட்டில் அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்ப, தேசிய பாதுகாப்பின் பூகோள அவசியம் கருதி படையினரும,; சட்டம் ஒழுங்கினை நிலைப்படுத்த பொலிஸாரும் நிலை கொள்ளச் செய்யப்படுதல் வேண்டும். அத்தகையதொரு நிலைப்பாடே எமது மக்கள் மத்தியில் ‘நாம் இலங்கையர்கள்’ என்ற மனப்பான்மையை வளர்ப்பதற்கு ஏதுவாகும். இந்த மனப்பான்மையானது முப்படைகளிடத்தேயும், பொலிஸாரிடத்தேயும் ஏற்படுதல் அவசியமாகும்.

எமது நாட்டின் அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியமாகும். நீண்டகால யுத்தமானது முப்படைகள் மத்தியில் இந்த எண்ணக்கருவை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்திருக்கலாம். எனவே, அரசியல் தலைமைத்துவமானது இந்த எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதுடன், இந்த எண்ணக்கருவை முப்படைகளுக்கும் வழங்கி, அதனை தீவிரமாக மேலோங்கச் செய்வதற்கு முன்வர வேண்டும். மேலும், முப்படைகளில் பல்லினத் தன்மையற்ற முறைமை களையப்பட வேண்டியதும் அவசிமாகும். இவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்ற சூழலே இந்த நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு பலமான அத்திவாரத்தை இடும் என்பதில் சந்தேகமில்லை.

அண்மையில், இலங்கை கடற்படையின் 21வது தளபதியாக அத்மிரால் ட்ராவிஸ் சின்னையா அவர்கள் நியமிக்கப்பட்டதானது, தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய எமது நாட்டின் பயணத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்த நாட்டின் பெரும்பாலான மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. முப்படையினர் மத்தியிலும் பெரும்பாலானவர்கள் இதற்கு மதிப்பளித்திருந்தனர் என்றே தெரிய வந்திருந்தது. எனினும், அவர் மிகவும் குறுகிய காலத்தில் ஓய்வுபெறச் செய்யப்பட்டதும், ஓய்வுபெறச் செய்யப்பட்ட விதமும் மிகவும் வேதனை தருகின்ற விடயமாகவே மாறிவிட்டது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்திலே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

மேலும், ஏற்கனவே நான் இந்தச் சபையின் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கடந்தகால யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கும், மதக் கிரியைகளை மேற்கொள்வதற்கும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் வசதியாக ஒரு பொது நினைவுத் தூபி அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தை குறித்தொதுக்குவதற்கும் அரசு தெரிவித்திருந்த சாதகமான பதிலுக்கு எனது நன்றியினை இந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவித்துக் கொள்வதுடன், அந்த ஏற்பாடுகளை பொருத்தமான ஓர் இடத்தில் மேற்கொள்ளும் வரையில், கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவுகூறுவதற்கு எவ்விதமான தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையையும் மனிதாபிமான ரீதியில் இந்த இடத்தில் முன்வைக்கின்றேன். அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதில் தென்பகுதியில் இன்று காணப்படுகின்ற நடைமுறைகளைப்போல், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் வழிவிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

மேலும், இம்முறை வரவு – செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் மெற்கொள்ளப்பட்டுள்ளதாகவே தெரிய வருகின்றது. அந்தவகையில,; கரையோரப் பகுதிகளின் – குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளின் கண்காணிப்பை மேலும் வலுவடையச் செய்வதற்குரிய பணிகளை கடற்படையினர் மேற்கொள்ள வேண்டும் என்ற கொரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். தற்போது பல்வகையான போதைப் பொருட்கள் மற்றும் கேரள கஞ்சா போன்றவை இப்பகுதிகளின் ஊடாகவே பெருமளவில் எமது நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகத் தெரிய வருகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் எமது கடற்படையினர் கூடிய அவதானங்களை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

எமது நாட்டிற்கு பொது மன்னிப்பு என்பது தமிழ், சிங்கள இளைஞர்களைப் பொறுத்தவரையில் புதியதொரு விடயமல்ல. அந்தவகையில் தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என நீதியமைச்சர் அவர்ளிடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது நாட்டில் இன்னும் தீர்க்கப்படாத சுமார் 7 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியிருப்பதாகத் தெரிய வருகின்றது. நாட்டில் போதிய நீதிமன்றங்கள் இன்மையும் இதற்கொரு காரணமாகக் கூறப்படுகின்றது.

அந்த வகையில், நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய தேவைகள் இருப்பதாகவே தென்படுகின்றது.

அதே நேரம் கொழும்பில் தற்போது 07 மேலதிக நீதிமன்றங்களே செயற்படுகின்ற நிலையில் இதன் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதே தற்போதைய நிலைக்கு உகந்தது என்ற கருத்தும் நீதித்துறையினர் மத்தியில் இருந்து வருகின்றது.

இதுவரையில் தீர்க்கப்படாமல் தாமதமாகியுள்ள மனித உரிமைகள் தொடர்பிலான பல வழக்குகளை மாகாண மேல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தககூடிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் என்ற கருத்தும் நீதித்துறையினரிடம் நிலவுகின்றது. இத்தகைய வழக்குகள் அவசர வழக்குகளாகக் கருதப்பட்டு, விரைவில் அவற்றைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, காத்திரமான சமுதாய உருவாக்கத்திற்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இதன்போது, நான்; தொடர்ந்தும் தெரிவித்து வருகின்ற ஒரு விடயம், தமிழ் மொழி மூல பரிச்சயம் மாத்திரம் கொண்டவர்களால் தொடுக்கப்படுகின்ற வழக்குகளின் போதும், தமிழ் மொழி மூலப் பரிச்சயம் மாத்திரம் கொண்டவர்கள் ஆஜராக வேண்டிய வழக்குகளின்போதும், இம் மக்கள் மொழி காரணமாக நீதிமன்றங்;களில் பாரிய பாதிப்புகளுக்கும், சிரமங்களுக்கும் உட்படுகின்றனர். இந்த நிலையில் துரித மாற்றங்கள் கொண்டுவரப் படுதல் அவசியமாகும்

‘சிங்களமும், தமிழும் நீதிமன்றங்களின் மொழியாக இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் இருத்தல் வேண்டும். எவரேனும் கட்சிக்காரர் அல்லது விண்ணப்பதாரர் அத்தகைய கட்சிக்காரரின் அல்லது விண்ணப்பதாரியின் பிரதிநிதியாக இருப்பதற்குச் சட்டப்படி உரித்துடைய ஆள், ஒன்றில் சிங்களத்தில் அல்லது தமிழில் வழக்குத் தொடரலாம்’ என மொழி உரிமை தொடர்பான அரசியல் அமைப்பின் 4ஆம் அத்தியாயத்தின் உறுப்புரைகள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும், இன்று மொழிப் பரிச்சயம் அற்ற காரணத்தால் எமது மக்கள் நீதிமன்றங்களில் படுகின்ற அவஸ்தைகளும், தேங்கியிருக்கின்ற வழக்ககளின் எண்ணிக்கையும் கொஞ்சநஞ்சமல்ல. எனவே இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்தவகையில், பதவி உயர்வுகளுக்காகவும், ஊதிய உயர்வுகளுக்காகவும், ஏனைய வரப்பிரசாதங்களுக்காகவும் இரண்டாம் மொழியினைக் கற்பவர்களால் இந்தப் பணிகளை ஒழுங்குற ஆற்ற முடியாது. அதற்கென தமிழ் மொழிப் பரிச்சயமும், அதே வேளை, தமிழ் கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் பரிச்சயமும் உடையவர்களே தேவைப்படுகின்றனர்.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்படி பரிச்சயங்களைக் கொண்ட நீதிபதிகளை மேலதிகமாக நியமிப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அனைத்து தர நீதிமன்றங்களிலும் மேற்படி பரிச்சயங்களைக் கொண்ட நீதிபதிகளை போதியளவு நியமிப்பதற்குமான ஏற்பாடுகள் அவசியமாகும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம், தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்ற விடயம் குறித்தும் கௌரவ நீதியமைச்சர் அவர்கள் மேலும் அவதானத்தைக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். பொது மன்னிப்பு என்பது தமிழ், சிங்கள இளைஞர்களைப் பொறுத்தவரையில் எமது நாட்டிற்கு புதியதொரு விடயமல்ல.

நீதி மன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தட்டெழுத்தாளர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஏற்பாடானது மும் மொழிகள் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

வழக்குகள் தாமதமடையாது விரைவு படுத்தலுக்கு ஏதுவாக வழக்கு தொடுத்தல் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களமும் துரித செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு போதிய வளங்களையும், வளவாளர்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்க வேண்டியதும் அவசியமாகும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!…

வடக்கில் மீண்டும் பதற்ற சூழ்நிலை உருவாகக் காரணம் என்ன? – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் கேள்வி!

சட்டம் ஒழுங்கு பற்றி கூறப்போனால், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நிலை மீண்டும் பதற்றமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதையே காணக்கூடியதாக இருக்கின்றது என நீதியமைச்சர் அவர்ளிடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இத்தகைய பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சில சுயலாப தமிழ் அரசியல் சக்திகளுக்கும் பங்கிருப்பதாகவே சில தகவல்கள் கூறுகின்றன. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஏற்கனவே ஒரு தமிழ் அரசியல் கட்சியின் அலுவலகத்திலிருந்து வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிந்தது. மேலும் சில தமிழ் அரசியல்வாதிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் குடாநாட்டில் ஒரு செய்தி பரவியிருந்தது. எனவே இதனது உண்மையான பின்னணி கண்டறியப்பட்டு, அதன் மூலவேர்கள் அகற்றப்படாத வரையில் இப்பிரச்சினை தீரப் போவதில்லை என்றே தெரிகின்றது.

அண்மையில் நான்கு தினங்களுக்குள் 08 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று, 12 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கோண்டாவில், மானிப்பாய், ஆறுகால்மடம், நல்லூர் முடமாவடி, ஈச்சமோட்டை, குருநகர் போன்ற பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குருநகர் பகுதியில் கடந்த 12ஆம் திகதி இரவு இளம் குடும்பஸ்தர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள வாள்வெட்டுச் சம்பவத்தின்போது, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும் அந்த அழைப்பிற்கு பொலிஸார் பதில் தரவில்லை என்றும், பின்னர் பொலிஸாரின் அவசர உதவிச் சேவைக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ் குடாநாட்டில் மேற்படி வாள்வெட்டுச் சம்பவங்களில் ஏற்கனவே ஒரு குழுவினரே ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று பலக் குழுக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இத்தகைய நிலைமையானது மிகவும் பாதூரமான அபாயத்தையே வலியுறுத்துவதாகத் தென்படுகின்றது. அந்த வகையில் இத்தகைய நிலைமையினை முற்றிலுமாக மாற்றியமைப்பது தொடர்பில் பொலிஸார் மிகவும் அவதானமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என்றே கருதுகின்றேன்.

சட்டம் ஒழுங்கைப் பேணும் வகையில் பொலிஸார் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டியது அவசியமாகும்.

கடந்த சுமார் மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு அப்போதைய பொலிஸாரின் சில செயற்பாடுகளும் காரணமாக இருந்ததையே வரலாறு எமக்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றது. மேலும், பாரிய யுத்தச் சூழலுக்கு பழக்கப்பட்டதொரு சூழலில் வளரந்த மக்களைக் கொண்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணும்போது மிகுந்த அவதானம் தேவை. இன்னமும் யுத்தமயமான சூழலிலிருந்து முழுமையாக விடுபடாத பகுதிகளாகவே எமது பகுதிகள் காணப்படுகின்றன. அந்த வகையில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டியுள்ளதை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

அதேபோன்று நாட்டின் தென்பகுதியை எடுத்துக் கொண்டாலும், குறிப்பாக, ரத்கம, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, கொஸ்கொட, பலபிட்டிய, கரந்தெனிய, மீடியாகொட, படபொல போன்ற பகுதிகளிலும் பாதாளக் குழுக்களின் ஆதிக்கங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக தென்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்று போதைப் பொருட்களின் கடத்தல் செயற்பாடுகளுக்கும், விற்பனைக்கும், பாவனைக்கும் தாராளமயப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே மாறிவிட்டுள்ளன. அண்மைக்கால ஊடகங்களைப் பார்க்கின்றபோது இதனை புரிநிதுகொள்ள முடிகின்றது.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக, யாழ்பாணம், மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்கள் ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பில் அடிக்கடி பேசப்பட்டுவந்த மாகாணங்களாக இருந்த நிலையில், தற்போது திருகோணமலை மாவட்டத்திலும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனைகள் துரிதகதியில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது.

எனவே, நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் மேலும் அதிகமான கவனங்கள் செலுத்தப்பட வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது என்றே கருதுகின்றேன்.

‘பொலிஸைச் சுத்தப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளதாகவும், பின் கதவால் பொலிஸ் சேவையில் நுழைந்து, அரசியல் பலத்தினால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாகக் கடமையாற்றுவோர் இனி அந்தப் பதவியில் நீடிக்க முடியாது’ என அண்மையில் பொலிஸ்மா அதிபர் திரு. பூஜித்த ஜயசுந்தர அவர்கள் தெரிவித்திருந்ததாக ஊடகங்களின் மூலமாக அறியக் கிடைத்தது.

அவரது கருத்தை நான் வரவேற்பதுடன், இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூற வேண்டும் என எண்ணுகின்றேன்.

யுத்தம் நிலவிய காலத்தில் தென்பகுதிகளில் தண்டனைகளுக்கு உட்படுகின்ற பொலிஸாரை அவர்களது வசிப்பிட பகுதிகளை விட்டும் தூர இடங்களுக்கு இடமாற்றுவது என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றுவது, தண்டனைக்குரியவர்களுக்கான மிகப் பெரும் தண்டனையாகக் கருதப்பட்டது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இப்போதும் அந்த நடைமுறைப் பின்பற்றப்படுவதாகவே அறிய முடிகின்றது.

அந்த வகையில், இவ்வாறு தண்டனைப் பெற்று, கோபத்துடனும், விரக்தியுடனும், மொழி புரியாத நிலையிலும், அதுவும் யுத்தத்தில் வெற்றி கொள்ளப்பட்ட பகுதி என்ற நினைப்புடனும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடமையாற்ற வருகின்ற ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் எமது மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பது? என்றொரு பிரச்சினையும் இருந்து வருகின்றது. இது குறித்தும் பொலிஸ்மா அதிபர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம் பெரும்பாலான பொலிஸாரிடையே குணவியல்புத் தன்மைகளில் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எமது மக்களை அரவணைத்தப் போகக்கூடிய தன்மைகள் காணப்படுகின்றன. இந்த நிலை மேலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஆலோசனையாக முன்வைக்கின்றேன்.

அத்துடன், காலி கிந்தோட்டடைப் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. பொலிஸார் தலையிட்டு அங்கு சுமுகமானதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும், இவ்வாறான மோதல் நிலைமைகளின்போது பொலிஸார் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே அழிவுகளை பாரியளவில் தடுக்க முடியும் என்பதையும் தெரிவித்தக் கொள்கின்றேன்.

இறுதியாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக்க அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணக் கோட்டை புனரமைப்பு தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ பிரதமர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தபோது, தாங்கள் காலி கோட்டைப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், தங்களுடன் கலந்துரையாடி யாழ்ப்பாணக் கோட்டை புனரமைப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் யாழ்ப்பாணக் கோட்டை புனரமைப்புத் தொடர்பில் தங்களது ஒத்துழைப்பு அவசியம். அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படிக் கோரி எனது உரையை முடித்துக் கொள்கின்றேன்.

இங்கு கொள்கை சார்ந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு விடயம் தொடர்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். முப்படைகள் தரப்பிலும், பொலிஸ் தரப்பிலும் பொறுப்பு வாய்ந்தவர்கள் இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த கோரிக்கையை முன்வைப்பதே பொருத்தமாகும்.

அதாவது, தற்போது பொலிஸாருக்கென்றும் படைகளுக்கென்றும் மருத்துவமனைகள் நல்ல முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த யுத்த காலத்தில் இவற்றுக்கான தேவைகள் மிக அதிகமாக இருந்தது. தற்போதைய நிலையில் அப்படி இருக்காது என எண்ணுகின்றேன்.

எனவே, மேற்படி மருத்துவமனைகளின் சேவைகளை, நியாயமான கட்டணத்தின் அடிப்படையில் பொது மக்களும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான ஏற்பாடுகளை செய்ய முடியுமெனக் கருதுகின்றேன். இதனால், பொது மக்களுக்கும் நியாமான செலவில் உயரிய பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதே வேளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு போதியளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாக இருக்கும்.

எனவே, இந்தத் திட்டம் பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஊடகப் பிரிவு
ஈழமக்கள் ஜனநாயக கட்சி

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.