இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

காகிதத்தில் நினைவுகூறப்படும் மனித உரிமைப் பிரகடனம்:-

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:-

ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன.

எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்றும் ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் இந்த நாள் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுரிய சம உரிமையை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இன்றைய நாளில் இந்த நாட்டிலும் இந்த உலகத்தாலும் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு என்ன இடம் வழங்கப்பட்டது என்பதைக் குறித்து ஆராய்வது மிகவும் உபயோகமானது.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய அடையாளங்களையும் கலாசாரத்தையும் கொண்ட மூத்த இனமாக வாழ்ந்து வருகின்றது. சுதந்திரம் பெற்ற இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரைசைகள் என்ற இடத்திற்கு தள்ளப்பட்டு சம உரிமை மறுக்கப்பட்டு ஆட்சி அதிகாரம் இழந்து அழித்தொழிக்கப்படும் நிலைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இனம், மொழி, நிலம், அரசியல் என்பன அதிகாரத்தை தம் வசமாக்கிய பெரும்பான்மையினத்தால் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் வரலாறு உலகம் அறியாத ஒன்றல்ல.

தமிழர்கள் தமது சம உரிமைக்காகவும், தம்மீதான இன மேலாதிகத்தை எதிர்த்தும், தம்மீதான அழித்தொழிப்புக்களை எதிர்த்தும் அகிம்சை வடிவிலும் ஆயுத வடிவிலும் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். ஆனால் இன, மத, மொழி சமத்தும் மற்றும் கண்ணியம், உரிமை குறித்து பேசும் ஐக்கிய நாடுகள் சபையோ, அல்லது அதன் மனித உரிமை பிரகடனத்தில் ஒப்பம் வைத்துள்ள நாடுகளோ இவ் ஒடுக்குமுறைகள் குறித்து அதனை மேற்கொள்ளும் இலங்கை அரசுடன் தனது அரசியல் நலன்களை முன்வைத்தே அணுகுகின்றன. குறிப்பாக 2009இல் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை எதிர்கொண்டு தமிழ் இனம் உச்சகட்டமான பேரிழப்பை சந்தித்தபோதும் ஐ.நாவின் மனித உரிமை பிரகடனம் மௌனமாகவே இருந்தது.

இது ஈழத் தமிழ் இனம் மாத்திரம் சந்தித்த விடயமல்ல. உலகத்தில் ஒடுக்கப்படும் நாடுகள் அனைத்தும் ஒடுக்கப்படும் இனங்கள் அனைத்தும் இத்தகைய நிலையையே எதிர்கொள்ளுகின்றன. அவைகள்மீது ஐ.நா மற்றும் ஐ.நாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தமது நலனை கருத்தில் கொண்டே சாதகமாகவும் பாதகமாகவும் செயல்பட்டுள்ளன. மாறாக, செய்துகொண்ட மனித உரிமை பிரகடனத்திற்கு ஏற்ப செயற்படவில்லை என்பதும் ஐ.நா உனித உரிமை பிரகடனம் என்பது வெறுமனே காகிதத்தில் மாத்திரமே நினைவுகூறப்படுகிறது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இன்றைக்கும் தமிழ் மக்கள் ஏராளம் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதனால் அரசியலுரிமை மறுக்கப்பட்ட இனமாக ஈழத் தமிழினம் பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் அரசியல் அதிகாரமற்றவர்களாக – உரிமையற்றவர்களாக எங்கள் மக்கள் வாழ்கிறார்கள். தங்கள் சொந்த நிலத்தில் வாழக்கூட அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. வீடு திரும்பாதவர்களும் தெருக்களில் வாழ்வை கழிப்பவர்களும் உள்ளனர். 26 வருடங்கள் ஊர் திரும்பாத எங்கள் மங்கள் இன்று நினைவுகூறப்படும் இந்த நாளிழின் அர்த்தத்தை எப்படி உணர்வார்கள்?

வீட்டுக்கு வீடு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள். குடும்பங்களுடன் அழிக்கப்பட்டவர்கள் பலர். யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்காய் எந்த நீதியையும் வழங்காமல் யுத்தத்தை மேற்கொண்டவர்கள் மற்றும் அதன் குற்றவாளிகளான இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கும் வகையிலும் முகம் கோணாத வகையிலுமே ஐ.நா நடக்கின்றது. ஐ.நாவின் முன்னிலையில்தான் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஐ.நாவில்தான் மக்களை கொலை செய்தவர்களும் காணாமல் போகச் செய்தவர்களும் தமது கொலைகளுக்கான நியாயங்களை உரைக்கிறார்கள்.

உலகில் பல நாடுகளில் ஒடுக்கப்படும் இனங்கள் காணாமல் போகச் செய்யப்பட்டும் இல்லாமல் போகச் செய்யப்பட்டுமுள்ளனர். அதைப்போல ஈழத்திலும் வகைதொகையற்ற ரீதியில் இந்தச் செயல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தாலும் இராணுவத்தின் துணை ஆயுத குழுக்களாலும் யுத்த களத்திலும் யுத்த களத்திற்கு வெளியில் இராணுவ வலயங்களிலும் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டனர். இதனை ஒரு இன ஒழிப்பிற்கான பெரும் நடவடிக்கையாக கடந்த அரசு மேற்கொண்டது.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது அரசுகள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. காணாமல் போனவர்களுக்காக காணாமல் போனோர் பத்திரத்தை உருவாக்குகிறது இலங்கை அரசு. இந்தப் பூமிப் பந்தில் காணாமல் போனவர்கள் என்றொரு இனம் உருவாக்கப்படுவதே மனித உரிமைகள் எந்தளவில் இருக்கிறது என்பதற்கு தக்க எடுத்துக்காட்டு. அந்தக் கொடுமையின் மையமாக இலங்கைத் தீவையும் குறிப்பிடலாம். நம்பகமற்றதும் நிச்சயமற்றதுமான வாழ்க்கைக்கு ஒடுக்கப்படும் சமூகங்கள் தள்ளப்பட்டிருப்பதைத்தான் காணாமல் போகச் செய்தல் உணர்த்துகிறது.

இலங்கைத்தீவில் தமிழர் இருப்பு இல்லாமல் செய்யப்பட்டு பெரும்பான்மையினரின் இருப்பு விஸ்தரிக்கப்படுகிறது. இதற்காகவே இன அழிப்புக்களும் அரசியல் எதிர்ப்புக்களும் யுத்தங்களும் நில அபரிப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மனிதர்களுக்கும் வாழும் சம உரிமை இருக்கிறது என்ற மனித உரிமை பிரகடனத்திற்கு முற்றிலுல் மாறான இந்தச் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பாடமல் அதனை மேற்கொள்ளும் பெரும்மையினத்திற்குச் சாதகமாகவும் அதன் அத்தகைய நடவடிக்கைகளாக ஜனநாயக மதிப்பிடும் வகையிலும் ஐ.நா செயல்படுகின்றது என்பதையே கடந்த கால அனுபவங்கள் சொல்கின்றன.

எந்தவொரு இனமும் சுய நிர்ணய உரிமை கொண்டது என்றும் அது பிற இனங்களால் ஒடுக்கி அழிக்கப்படும்போது அவ்வினம் பிரிந்து சென்று தனக்கான அரசை அமைக்கும் சுயநிர்ணய உரிமை கொண்டது என்றும் ஐ.நா சாசனம் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த உரிமை ஈழத் தமிழர்களுக்கு மாத்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இன ஒடுக்குமுறைக்கு தமிழ் – சிங்கள இனச் சிக்கலுக்கு அவ் இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுவே தீர்வாகும். இதனையே கடந்த கால அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன.

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் வாழ்வுரிமையற்ற இனமாக நடத்தப்பட்டும் அழிக்கப்பட்டும் வந்தததுவே கடந்த கால வரலாறு. எனவே வாழ உரிமையற்று ஒழிக்கப்படும் இனத்திடம் வேறு என்ன உரிமைதான் இருக்கும். இத்தகைய ஒரு இனத்தின் முன்பாக கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்காமல், மறுக்கப்பட்ட உரிமைகளை மீள வழங்காமல், அநீதியின்மீதும், ஏற்றத்தாழ்வுகளின்மீதும் மேலாதிக்கத்தின்மீதும் இவைகளை மையப்படுத்திய அரசியல்மீதும் கொண்டாடப்படும் மனித உரிமை தினம் என்பது அர்த்தமற்ற, மோசமான, எதிர் அர்த்தம் கொண்ட ஒரு தினமாகவே கடந்து செல்லும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.