
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் இன்று சாட்சியமளித்தார்.
ஆதித்தனுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற மற்றொரு வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது. அது தொடர்பில் சாட்சியம் பெறுவதற்கே கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் மகனான ஆதித்தன் ( வழக்கில் இணைக்கப்பட்டுள்ள மறு பெயர்களான கிரிதரன் அல்லது கிரி அல்லது ரஞ்சன் அல்லது தாஸ் அல்லது கண்ணன்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009ஆம் கைது செய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆயுதப் பயிற்சி பெற்றார் மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அவரால் வழங்கப்பட்டது எனத. தெரிவித்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் முன்வைக்கப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து, ஆதித்தனை 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் 17ஆம் திகதி வழக்கிலிருந்து விடுவித்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கட்டளைக்கு அமைவாக அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக மற்றொரு குற்றப்பத்திரிகை பயங்கரவாத குற்றச்செயல்களை விசாரிக்கும் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலை செய்யத் திட்டம் தீட்டினார் என அந்தக் குற்றப்பத்திரிகையில் ஆதித்தன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
வழக்கின் அரச தரப்புச் சாட்சியங்கள் நிறைவடைந்த நிலையில் எதிரி தரப்புச் சாட்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வழக்கில் கனகரத்தினம் ஆதித்தன் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி கே.வி. தவராசாவின் விண்ணப்பத்தையடுத்தே இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளரிடம் சாட்சியம் பெறப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற மூல வழக்கேட்டுடன் அழைக்கப்பட்ட அவரிடம் வழக்கின் நாள்குறிப்பில் உள்ள விடயங்கள் தொடர்பில் சாட்சியம் பெறப்பட்டது.
Spread the love
Add Comment