இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஞாபக நடை தந்த சில ஞாபகச் சிதறல்கள் – கணபதி சர்வானந்தா…

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா தந்த வித்தியாசமானதொரு அனுபவம்.

சிறிய சிறிய விடயங்கள்தான் அவை. இருந்தும் வாழ்க்கையை அவை எப்படி அர்த்தப்படுத்துகின்றன. சதா அந்த இடத்தைக் கடந்து செல்லுகிறோம். இருந்தும் அவை பற்றி நாம் வலுவாகச் சிந்திப்பதில்லை. அவை எப்படி சமூகத்தோடு ஒன்றிப் போயிருந்தன என்பது போன்ற விடயங்களில் நாம் அக்கறை கொள்வதுவுமில்லை. ஆனால் அவை ஒரு கல்விசார் விடயமாக முன்னெடுக்கப்படும்போது அவற்றின் பெறுமதிகள் உயர்ந்து கொள்ளுகின்றன. அப்படி யாழ்.மண்ணில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைப் பற்றிய விபரங்களை இவ்வாரம் உங்களுக்காகத் தருகிறோம்.

கடந்த ஓக்டோபர் மாதம் யாழ். மண்ணில் முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக “ஞாபக நடை” என்னும் ஒரு நிகழ்சி நடைபெற்றது. அந்த நிகழ்வை ஒருங்கமைத்து நடத்தியவர் யாழ்.நுண்கலைத் துறையைின் தலைவர் கலாநிதி.தா.சனாதனன். ஈழ மண்ணில் நடைபெற்ற யுத்தத்திற்கு முன்னும் பின்னரும் திரை அரங்குகளோடு யாழ்ப்பாணச் சமூகத்திற்கு உண்டான நெருக்கமும் சமூகப் பெறுமதியும் என்ற தளத்தையொட்டிய விடயங்கள்  இந்த நடைபவனியிலே பேசப்பட்டது.

யாழ். வண்ணார் பண்ணைப் பகுதியில் கே.கே.எஸ் வீதிக்கு மேற்காக இருக்கின்ற   மனோகராத் திரையரங்கு முன்றிலிருந்து தொடங்கி வண்ணை சிவன் கோவில் முன்பாகச்  சென்று கன்னாதிட்டி வழியாக கஸ்தூரியார் வீதியில் உள்ள எஸ்.ரி.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராஜா தியேட்டர் பின்னர் அவ்விடத்தில் முன்பிருந்த பழைய வின்ஸர்,  பழைய வெலிங்டன் என்றும் தொடர்ந்து லிடோ   திரையரங்கு இருந்த கட்டத்தொகுதியைத்  தொடர்ந்து  ஸ்ரான்லி வீதிவழியாகச் சென்று அங்கு 1990 இல் தொடங்கி இன்றுவரை இயங்கும் ஒரு மினி சினிமாத் தியேட்டரைக் கடந்து   ஸ்ரீதர் சினிமா அரங்கத்தைப் பார்த்துப்  பின்னர் விக்டோரியாத் தெருவுக்கூடாக ச் சென்று மின்சார நிலைய வீதியில் காணப்பட்ட ராணித் தியேட்டரடியில் நின்று பேசிப்  பின்னர் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினூடாகச் சென்று செல்வாத் தியேட்டரைக்  (அது முன்பு சாந்தித் தியேட்டர்) கண்ட பின்னர் முற்றவெளி மையானத்திற்கு முன்பதாகக் காணப்பட்ட றீகல் திரையரங்குவரை நடை நீடித்தது. பழைய யாழ். மாநகர சபைக் கட்டடத்திலும் ஒரு சினமாத் திரையரங்கு இயங்கியிருக்கிறதென்ற விடயமும் அங்கு பேசப்பட்டது.

பண்டைய காலத்தில் சினிமா பார்ப்பதை யாழ்ப்பாண சமூகம் ஏற்றுக் கொள்ளாத நிலையிலிருந்த போது சமூக எல்லைகளை உடைக்கக் கூடிய சமூக ஒழுக்கம் அற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களே சினிமாவை அதிகம்  பார்க்கத் தொடங்கினர். சினிமா பார்ப்பது ஒரு ஒழுக்கக் குறைவான பழக்க வழக்கம் என்று கருதப்பட்ட காலத்தை த் தாண்டிப் பின்னர் ஒரளவு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதுவே நாளடைவில் ஒரு பாரிய பொழுது போக்கு ஊடகமாக மாறிக் கொண்டது. பின்னர் 1960 – 1970 களில்  அந்தச் சினிமா ஒரு சமூகப் பண்பாட்டுப் பெரு வெளிக்குள் நுழைந்து கொண்டது. அக்காலத்தில் திருமணம் செய்து கொண்ட பல புதுமணத் தம்பதிகள்  அவர்களுக்குரிய சடங்குகளோடு சினிமா பார்க்கச் செல்வதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்ததை  நாம் நினைவில் கொள்ளலாம்.  எனவே இத்தகைய பாரிய பின்னணியைக் கொண்ட விடயம்  தொடர்பாகக் கல்வியாளர்கள் பார்வை எப்படி இருக்கிறது, அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்றதையும், ஞாபக நடை பற்றியும்  அறிய கலாநிதி தா.சனாதனனை அணுகினோம்..

வணக்கம். ஞாபக நடை என்ற நிகழ்வை ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்ன?அதுவும் யாழ்ப்பாணத் திரைப்பட விழாக்காலத்தில் அது நடைபெற்றிருக்கிறது. எனவே அதன் பின்னணி பற்றிச் சொல்வீர்களா? அதைப் பற்றி அறியப் பலர் ஆவலாக இருக்கிறார்கள்.

ஆம். யாழ்ப்பாணச் சர்வதேசத் திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னர் யாழ். பல்கலைச் சமூகத்தினாலும் மற்றும் பல தனியார் முயற்சிகளாலும் அவ்வப்போது திரைப்பட விழாக்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.பொதுவாகத் திரைப்படம் பற்றிப் பேசுகிறோம். அதன் வரலாறு பற்றி ஆய்வு செய்கிறோம்.அதை இயக்கியவர்கள் பற்றிக் கலந்துரையாடுகிறோம். அதன் ஆக்கமும் அதன் பின்னணி பற்றியும் விவாதிக்கிறோம். ஆனால் எப்பவுமே அதைப் பார்த்தவர்கள் பற்றிய அல்லது அதைக் காண்பித்தவர்கள் பற்றிய வரலாறு  ஒரு போதும் பேசப்படுவ தில்லை. ஆனால் படம் பார்த்தவர்கள் பற்றிய வரலாற்றைப் பேசாது சினமாவின் முழுவடிவத்தைப் பற்றிப் பேசமுடியாது என்றொரு நிலையுண்டு. யாழ்ப்பாணத்தில் சினமா ஒரு பொழுதுபோக்குச் சாதனமாக 1960 – 1970 களில் எப்படி உருவானது. பின்னர் அது ஒரு சமூகப் பண்பாட்டு நிகழ்வாக இருந்திருக்கிறது. திரைப்படம் பார்ப்பதென்ற  விடயத்தைப்  புறந்தள்ளிப் பார்க்க முடியாதவாறு அது  சமூக நடவடிக்கைகளோடு பின்னிப் பிணைந்து காணப்பட்டிருக்கிறது. தொடர்ந்து காணப்பட்ட யுத்தகால நடவடிக்கைகளில் பொருளாதாரத்தடை, மின்சாரமின்மை, சீரற்ற போக்குவரத்து,  அரசியல் போன்ற காரணங்களினால் சினமாவைக் கொண்டு வந்து காட்ட முடியாத நிலைமை ஏற்பட்ட காலகட்டத்தில் வேறு வடிவங்களுக் கூடாகச் சினமா நுகரப்பட்டிருக்கிறது. சினமா எமக்குள் இருப்பதற்குக் கடும் போரட்டத்தை செய்திருக்கிறது. அது போல நாமும்  சினமாவைப் பார்ப்பதற்குக் கடும் போரட்டத்தைச் செய்திருக்கிறோம். தமிழர் பண்பாட்டு வரலாற்றை மற்றும் போராட்ட வரலாற்றை ஒரு காட்டுமிராண்டித் தனமானதாகவும் ,  ஆயுதத்தைக் கையிலெடுத்த பண்பாட்டுத் தொடர்பில்லாத வெறும் நெருக்கடிக்குட்பட்டதாகக் காட்ட முற்படுகின்றனர் சிலர். ஆனால்  அதுக்குள்ளேயும்  பன்முகப்படுத்தப் பட்டதொரு  வாழ்க்கை இருந்திருக்கிறதென்றதையும் இந்த வரலாறு காட்டுகிறது. அதாவது சினமாவை பார்க்கின்ற விடயம் தொடர்பாக எமக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது என்றதைக் காட்ட வேண்டும் என்ற நோக்கமும் எமக்கிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் நடைபெற்ற  காலங்களில் கலைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற முயற்சிகளும் மாற்றுச் சினமாவுக்கான வெளியைத் திறக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளும் நடைபெற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாது ஒரு குறுகிய நகரத்துக்குள், சிறிய வட்டத்துக்குள்  அதுவும் ஒரே நேரத்தில் ஏறத்தாழப் பன்னிரண்டு திரையரங்குகள் இயங்கியிருக்கின்றன என்றவிடயம் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்துகிறது. எனவே இத்தகைய சினமாத் தியேட்டர்களுக்கூடாக சினமாபார்த்த  வரலாற்றைப்  பேசுவதும் அத்தோடு அவைகள் இன்று காணப்படும் நிலைகளை வைத்து அவைகள் எப்படி வன்முறைக் காலங்களை எதிர்கொண்டன, கடந்து வந்தன  போன்ற விடயங்களைப் பேசுவதுமே எமது முக்கியமான நோக்கங்களாக இருந்தன.

இந்த ஞாபக நடை என்ற நிகழ்வுக்கு முன்னரும் பின்பு அது நடைபெற்று முடிந்த பின்னரும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? சிறிய தொகையினரே  கலந்து கொண்டதாகக் கண்டேன். உங்கள் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா?

மிகவும் திருப்திகரமானதாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு குறிப்பிட்ட தொகையினரை உள்ளடக்க வேண்டும் என்பது எமது திட்டங்களில் ஒன்று. ஏனெனில் இதற்கு முன்பு நாம் நிகழ்த்திய நடைகளில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்தே இதனைத் திட்டமிட்டோம். நடை நடத்தப்பட வேண்டிய களச் சூழ்நிலையையும் அங்கு காணப்படுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. அத்துடன் குறைந்த எண்ணிக்கையினருடன் பேசும்போது பல விடயங்களை அவதானிக்கலாம். சிறு வயதில் பஸ்ஸில் பயணித்துப் பார்த்த காலத்தில் பார்த்த விடயங்கள், பின்னர் வாகனத்தில் பயணித்துப் பார்க்கும் விடயங்கள் என்றதற்கு அப்பால் காலால் நடந்து அவற்றைப் பார்ப்பதென்ற விடயம் மிகவும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரவல்லது என்று கண்டு கொண்டேன். ஒரு குறுகிய வட்டத்திற்குள் இத்தனை விடயங்கள் நடைபெற்றிருக்கின்றனவா? என்று மூக்கில் விரலை வைத்தவர்கள் பலர். அத்துடன் இந்த சினமாத் திரையரங்குகள் பற்றிய கதைகள் தெரியும். ஆனால் அந்தக் கதைகளை அது நடைபெற்ற இடங்களுக்கு அருகில் நின்று பேசுவது ஒரு அலாதியான அனுபவம் என்றனர் பலர். இந்த நடையின்போது பலவிடயங்களைக் கடந்து சென்றோம். அவைகள் பற்றியும் அறியக் கூடிய சந்தர்பங்களை இந்த நடை பெற்றுத் தந்தது. நிகழ்வு நடைபெற்ற அந்த மூன்று நாட்களும் ஒரு வளவுக்குள் நடந்து விடயங்களைப் பார்ப்பது போன்ற ஞாபகங்கள். ஒரு யாத்திரைக்கு யாத்திரீர்களை அழைத்துச் செல்வதைப் போன்ற அனுபவங்கள் . நிகழ்வு நடைபெற்ற அந்த ரம்மியமான அதிகாலைப் பொழுது. அன்று காணப்பட்ட  மழைக்காலச்  சூழல். நிகழ்வில் கலந்து கொண்ட பல தரப்பட்ட மக்களின் (உள் நாடு மற்றும் சர்வதேசம்) ஆர்வம் – எனப் பலதரப்பட்டவைகளால் என் மனம் நிறைந்து கொண்டது. தொடர்ந்து ஒரே விடயமே பேசப்பட்டாலும் கலந்து கொண்டவர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும்போது புதுப் புது விடயங்கள் வெளிக் கொணரப்பட்டன. முடிவாகச் சொல்லப்போனால் இத்தகைய விடயங்கள் இப்படியான முறையிலேதான் பேசப்பட வேண்டும். நான் எண்ணிக் கொண்ட விடயங்களைவிட அந்தந்த இடங்களுக்கு முன்பாகச் சென்று நின்றபோது பல ஞாபகங்கள்  மீள் நினைவுக்குட்பட்டது. பல விடயங்கள் புதிதாக முளைவிட்டன. அவற்றைப் பற்றியும் பேசினோம். கதைத் தோம். பகிர்ந்து கொண்டோம். ஒரு திருப்திகரமான செயற்பாடு என்கிறார் கலாநிதி தா. சனாதனன்.

இந்த நடையில் நானும் கலந்து கொண்டேன்.சிறு வயதில் கெஞ்சிக் கூத்தாடி மன்றாடி விடுமுறையின்போது பெரியவர்கள் கூடச் சென்று இடைவேளையின்போது  ஒரு கையில் வல்வெட்டித்துறை பேபி மார்க் சோடாவும் மற்றக் கையில்  கடுதாசிப்பையில் கோதுக்கடலையோடு நெஞ்சிலோர் ஆலயம், திருவிளையாடல், தெய்வம், ஆயிரத்தில் ஒருவன்  எனச் சில படங்கள் பார்த்த பால்யப் பருவத்தை இரைமீட்டுக் கொண்டேன்.நினைவில் வாழ்வதில் நாம் காணும் இன்பமும்,  அனுபவமும்  அலாதியானது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.