இலங்கை பிரதான செய்திகள்

நீங்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை நீங்களே இல்லாமலாக்கிவிடாதீர்கள் – ராஜித வேண்டுகோள் :

 
நீங்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை நீங்களே இல்லாமலாக்கிவிடாதீர்கள் என்று ஜனாதிபதி மைத்திரியை நோக்கி    ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் பெற்றுக்கொண்ட ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் உரிமைகளை இல்லாமல் செய்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது செயற்பட்டுள்ள விதமானது நாட்டின் ஜனநாயத்திற்கு முற்றிலும் முரணானதென தெரிவித்துள்ள அவர், உடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமை தொடர்பில் கருத்து தெரிவித்த ராஜித, நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சியை ஏற்படுத்தினோம். இவ்வாறான ஒரு மோசமான நிலைமையை ஏற்படுத்துவதற்காக நாம் பாடுபடவில்லை என்றும் கூறினார்.

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளதாக கேள்விப்பட்டோம். ஏன் பயப்படுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பிய  ராஜித, நாடாளுமன்றத்தை கூட்டாமல், நாடாளுமன்றத்தில் மறைத்து முன்னெடுக்கப்படும் சகல விடயங்களும் அரசியலமைப்பிற்கு முரணானவை. ஆகவே உடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்துகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

அன்று எமக்கு காணப்பட்ட அதிகாரம், பதவி, அச்சுறுத்தல் என சகல விடயங்களையும் துச்சமாக மதித்து வெளியில் வந்து மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கினோம். இன்று இவ்வாறான ஒரு முடிவை எதிர்பார்த்து இந்த அர்ப்பணிப்பை செய்யவில்லை என்றும் ராஜித இதன்போது சுட்டிக்காட்டினார்.

அன்று மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பிரிந்துவந்த நாம், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை தவிர்த்து பொதுவேட்பாளரை களமிறக்க வழிவிடுமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டோம். அவ்வாறு செயற்பட்டால் அவரது உரிமையை பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டோம். இவ்வாறான ஒரு துக்ககரமான முடிவை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவும் எதிர்கால சந்ததிக்காகவும் பாடுபட்டதாகவும் ஊழல் மோசடியை இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குவற்கு ஜனாதிபதி மைத்திரியை நியமித்தாகவும் கூறிய அவர் அதற்கான அர்ப்பணிப்பை ரணில் விக்ரமசிங்க செய்தார் என்றும் அதற்கு நன்றியுணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சகலவற்றையும் துறந்து நாம் பொதுவேட்பாளராக மைத்திரியை களமிறக்கி ஒரு குடும்பமாக செயற்பட்டோம். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால், குடும்பத்தை விட்டுப் போகக்கூடாது என்றும் தேர்தலில் தோல்வியுற்றால் மரண அச்சுறுத்தல் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரி அன்று குறிப்பிட்டார். அவரை நாம் பாதுகாத்து மரண பயத்தை இல்லாமல் செய்தோம். அவ்வாறு செய்தவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் உங்களுக்கு அவகாசம் உண்டு. உங்கள் தலைமையில் நாட்டில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் உரிமையை நிலைநாட்டினோம். உங்கள் தலைமையில் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவற்றை இல்லாமல் செய்துவிடாதீர்கள் என்றும் ராஜித சேனாரத்தின குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியை இவ்வாறு செயற்பட வைப்பது யாரென எமக்கு தெரியவில்லை என்று கூறிய அவர் ஜனநாயகத்தை மேம்படுத்தும் ஒரு அங்கமாகவே ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து அதனை நாடாளுமன்றிற்கு வழங்கியதாகவும் ஆகவே நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் தலைமையில் வென்றெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை நீங்களே இல்லாமல் செய்து, வரலாற்றில் அவப்பெயரை இட்டுக்கொள்ளாதீர்கள் என ஜனாதிபதியிடம் கேடடுக்கொள்கிறோம் என்றும் நல்லாட்சியில் அமைச்சராக அங்கம் வகித்த ராஜித சேனாரத்தின மேலும் கூறினார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers