இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

முல்லைத்தீவை ஆக்கிரமிக்கும், தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும்?

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..

ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தினர் செய்த ஆக்கிரமிப்பு வேலைகளை, இன்றைக்கு இலங்கை தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் செய்கின்றதா என்பதே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பரவான கேள்வியாகும். முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இவ் இரு திணைக்களங்களும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ஆள்வதில் முனைப்புக் காட்டி வருகின்றன. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கானது, கல்வி, அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதாரம் முதலிய நிலைகளில் பின்தள்ளப்பட்டுள்ளதுடன் நுண்கடன் நெருக்கீடுகள், தற்கொலைகள், விபத்து மரணங்களில் முன் தள்ளப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை நில ஆக்கிரமிப்பால் இலங்கை அரசும் அதன் சில திணைக்களங்களும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையிலேயே மிகவும் வறுமையான மாவட்டம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

நான்காம் ஈழப் போரின் இறுதி யுத்தம் இடம்பெற்ற இந்தப் பகுதியை துண்டு துண்டாக கூறாக்குவதில் இலங்கை அரசு பெரும் அக்கறை கொண்டுள்ளது. தமிழர்கள் காலம் காலமாக வாழ்ந்த மணலாற்றுப் பிரதேசம், சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டு, வெலி ஓயாவாக மாற்றப்பட்டுள்ளது. முற்று முழுதாக சிங்கள, பௌத்த பூமியாக மாற்றப்பட்டுள்ள மணலாற்றை பார்க்கும் எந்த ஈழ மக்களுக்கும் இரத்தம் கொதிக்கும். அந்தளவுக்கு ஆக்கிரமிப்பு சினமூட்டுகிறது. இதைத் தவிர கொக்கிளாய் பகுதியிலும் சிங்க மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு பூர்வீகமாக வாழ்ந்த ஈழ மக்கள் துரத்தியடிக்கப்பட்டு நிலமற்றவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.

இப்போது, எஞ்சிய நிலங்களையும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த குடியேற்றங்களும் மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்குமாறு போராடி வருகிறார்கள். வட்டுவாகலில் சுமார் 500 குடும்பங்களுக்குரிய 617 ஏக்கர் காணிகள் கோத்தபாய கடற்படை முகாம் என்ற பெயரில் இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அதனை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் நோக்கில், சுவீகரிக்க கடற்படை எடுத்த முயற்சிகளை மக்கள் முறியடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகாவலி எல் வலயத்தின் ஊடாக தமிழர் தாயகத்தை கூறுபோடும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன அரசு ஈடுபடுகின்றது. முன்னாள் ஜனாதிபதியும் கடும் இனவாதியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட மகாவலி எல் வலயத்திட்டம் தமிழர் பூர்வீகநிலமான மணலாற்று பகுதியில் முந்திரிகைக்குளம், ஆமையன்குளம், சூரியனாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி நிலங்களிலிருந்து மக்களை விரட்டியது. அதன் காரணமாக பல பகுதிகள் பறிக்கப்ட்டன. அத்துடன் இங்கு சில கிராமங்கள் சிங்களப் பெயர்களு்ககு மாற்றி மொழியமிப்பு நிகழ்த்தப்பட்டது. உதாரணமாக முந்திரிகை குளம் ‘நெலும்வவ’ எனவும், ஆமையன்குளம் ‘கிரிபென்வௌ’ எனவும் மண்கிண்டிமலை ‘பன்சல்கந்த’ எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மகாவலித் திட்டம் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் குடியேறிய சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு மைத்திரி அரசாங்கம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது. மகாவலி எல் வலய திட்டத்தின் ஊடாக சிங்களக் குடியேற்றம் இடம்பெறவில்லை என்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வர் அவ்வாறு கூறியது தவறு என்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அத்துடன் ராஜபக்சக்கள் காலத்திலேயே இவ்வாறு குடியேற்றம் நடைபெற்றதாக கூறிய சுமந்திரன், இப்போது, அங்கு குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் அதற்காக தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக பறிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்­லைத்­தீவு, செம்­மலை புளி­ய­மு­னைப் பகு­தி­யில் பொதுமக்களின் தோட்டக் காணிகளை வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நாயாறு கொக்­குத்­தொ­டு­வாய் பிரதான வீதியின் மேற்குப் புறமாக உள்ள புளியமுனைப் பகுதியில் உள்ள 720 ஏக்கர் காணிகள் 1972ஆம் ஆண்டில் செம்மலையில் உள்ள பொதுமக்களுக்கு பயிர்ச்செய்கைக்காக பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த காணிகளில் கச்சான், சோளம் முதலிய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போர்க் காலத்தில் அப் பகுதிகளுக்குச் சென்று பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் குறித்த பகுதியில் மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த காணிகளை வனவள திணைக்களத்திற்குச் சொந்தமானவை என்று தெரிவித்து, காணிகளை அபகரித்து பெயர்ப் பலகை இடப்பட்டுள்ளது. குறித்த காணிகளுக்குள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாது என்றும் காணிகளுக்குள் நுழைந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறித்த காணிகளை விடுவித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போர் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்தது என்றும் 2015இல் கரைத்துறைப் பற்று பிரதேச செயலகம் ஊடாக 350 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளில் 270 குடும்பங்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமது காணிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் பயிர்ச்செய்கையில் ஈடுபடவிருந்த நிலையிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். தொல்லியல் திணைக்களம் ஒரு புறத்தில் மக்களை துன்புறுத்த மறுபுறத்தில் வகவளத் திணைக்களம் துன்புறுத்துகின்றது. குறித்த காணிகளுக்கான ஆவணங்கள் மக்களிடம் உள்ளதாகவும் அவர்கள் அங்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமைக்கான அடையாளங்கள் உள்ளதாகவும் கூறியுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், தமிழ் தலைவர்கள் இந்த மக்களின் காணிகளை பெற்றுக் கொடுப்பதில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் வெடுக்குநாறி மலையும் குருந்தூர் மலையும் சிங்களப் பேரினவாதிகளின் ஆக்கிரமிப்புக் கண்களில் பெரும் ஊறுத்தலாக உள்ளன. அவற்றை ஆக்கிரமிக்கவும் புத்தர்சிலைகளை வைத்து பொய் வரலாறு புனையவும் அவர்கள் துடிக்கிறார்கள். ஆனால் பிரதேச இளைஞர்களும் மக்களும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக விழிப்பாக உள்ளார்கள். தமிழ் மக்களின் இருதய நிலத்தில் வந்து தங்கள் ஆக்கிரமிப்பை நிலை நிறுத்தி தமிழ் மக்களின் தாயகத்தையும் இருப்பையும் அழிக்க இவர்கள் துடிக்கின்றனர்.

குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றை வைக்க புத்த பிக்கு ஒருவர் வந்துள்ளார். அவரை அழைத்து வந்தவர் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர். இதுதான் அவரின் அரச பணி. இவர்களையே மக்கள் விரட்டி அடித்தனர். எனினும் அங்கு புத்தர்சிலையை நிறுவுவதற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இவர்கள் வழக்கும் தொடுத்துள்ளனர். இதைப்போலவே கடும்போக்குவாதியான விமல் வீரவன்சவின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெடுக்குநாறி மலைக்கு வந்துள்ளனர். இவர்களும் தமது கற்பனை இனவாத மதவாத கருத்தை சொல்லி மக்களிடம் வாங்கிக் கட்டிச் சென்றுள்ளனர்.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பாரிய புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. எந்தக் காலத்திலும் பௌத்தத்துடன் தொடர்பற்ற அப் பகுதியில் மகிந்த ராஜபக்ச காலத்தில் ஒரு பிக்கு வந்து குடியேறி சிறிய புத்தர்சிலை ஒன்றை அமைத்துக் கொண்டார். தற்போது மைத்திரிபால சிறிசேனவின் அட்சிக் காலத்தில் அந்த இடத்தை செட்டிமலை என்று வர்த்தமானியில் அறிவித்து அங்கு பாரிய புத்தர்சிலை அமைக்கப்பட்டு வருகின்றது. வர்த்தமானி அறிவிப்பு ஊடாக பல சைவ ஆலயங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழர்களை அழிக்கும் அவர்களின் பண்பாட்டை சிதைக்கும் முக்கிய தளங்களையே வர்த்தமானிமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. பிள்ளையார் ஆலய இடம் பறிபோயுள்ளது. இது தமிழர்களின் அவர்களது பண்பாட்டின் அழிவாகவே கொள்ளப்படவேண்டியது. குறித்த வர்த்தமானி அறிவித்தல்களை ஜனாதிபதி மீளப்பெற வேண்டும். அரசியல் யாப்பை தெரியாமல் பாராளுமன்றத்தை கலைத்ததுபோலவே ஜனாதிபதி தமிழர்களின் பிரதேசத்தில் பௌத்த புனித சின்னங்களை அறிவித்துள்ளார். ராஜபக்சவின் காலத்தில்கூட இவ்வாறு இடம்பெறவில்லை. இப்போது தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சட்டமாக அறிவிக்கப்பட்டு அபகரிக்கப்படுவது எவ்வளவு கொடுமையானது?

ஒரு புறத்தில் இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. மறுபுறுத்தில் இலங்கை ஜனாதிபதி தமது மகாவலி அபிவிருத்தி அமைச்சு ஊடாக குடியேற்றுகிறார். இன்னொரு புறத்தில் வனவளத் திணைக்களம் காணிகளைப் பறிக்கிறது. இன்னொரு புறத்தில் தொல்லியல் திணைக்களம் தொன்மச் சின்னங்களை ஆக்கிரமித்து புத்தரை குடியேற்றத் துடிக்கிறது. தமிழர் தாயகத்தின் இருதய நிலப் பகுதி இவ்வாறெல்லாம் துன்புறுத்தப்படுகிறது. முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் நடந்த மண்ணில் நிலத்திற்கான போர் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் முல்லைத்தீவு நகரத்தில் மகாவலி ஆக்கிரமிப்புத் திட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. சுமார் ஐந்தாயிரம் மக்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தின்போது, தமிழ் மக்களின் மரபு சார் இடங்களை திணைக்களங்கள் வாயிலாக ஆக்கிரமிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முல்லைத்தீவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சமய அழித்தல் மற்றும் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் இளைஞர்கள் இயல்பாக கிளர்ந்து செயற்படுவதைப்போல வடக்கு கிழக்கு எங்கும் இளைஞர்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். விடுதலைப் புலிகளற்ற இந்தக் காலத்தில், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளால் எதனையும் தடுக்க முடியாத இந்தக் காலத்தில் இளைஞர்களின் எழுச்சியும் மக்களின் விழிப்புமே நிலத்தையும் நிலத்தின் அடையாளங்களையும் பாதுகாக்கும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.