இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் பெண்கள்

பெண்கள் ஏன் தீர்மானம் எடுப்பவர்களாக மாற வேண்டும் – சுரேகா..

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருவது முயற்கொம்பே’ பெண்ணியம் சார்ந்து சிந்திக்கின்றவர்களும், செயலாற்றுகின்றவர்களும், குரலெழுப்புகின்றவர்களும் தமது போராட்டங்களைப்பலப்படுத்தி வந்தாலும் ஆணாதிக்க கருத்தியல்களின் வழியாக போற்றப்பட்டு வரும் மரபுகளும் பெண்கள் சார்ந்த பிற்போக்கான சிந்தனைகளும் பெண்களின் சுயத்தைத்தடுக்கும் இரும்புக்கோட்டைகளாக இருக்கின்ற வரை பெண்களுக்கான சம அந்தஸ்த்தும் உரிமைகளும் பேசுபொருளாகவே இருந்துகொண்டிருக்கும்.

இந்நிலையில் பெண்கள் வீட்டிலும் சரி, சமூகத்திலும் சரி, அரசியலிலும் சரி திடகாத்திரமாகத் தீர்மானம் எடுப்பது சவால் என்றே கூறவேண்டும். பண்டைத்தமிழ் இலக்கிய வரலாறுகளில் வீரமிகு தலைவனாக உருவகிக்கப்படுபவனுக்கு மதிநுட்பம் மிகுந்த தோழி இருப்பாள் என்றும், சாதுரியம்மிக்க, தலைவி இருப்பாள் என்றும் கூறப்பட்டுவந்த மரபு எப்படிப்பெண்ணை அடக்கவும், ஒடுக்கவும், ஆளவும், உடமையாக்கவும் ,கொண்டாடவும் கற்றுக்கொடுத்தது என்பது ஆண்,பெண் இருபாலாரும் ஆராயவேண்டிய ஒன்று.

பெண்ணானவள் தன்னுடைய கல்வி, தேர்ந்தெடுக்கும் நிறுவனம், ஆற்றப்போகும் தொழில் தொடக்கம் வாழ்ந்து முடிக்கும் வரையான சின்னச்சின்ன தேவைப்பாடுகள், விருப்பங்களில் கூட தந்தை, தமையன், தம்பி, கணவன் என ஆண் சார்ந்தே சிந்திக்கவேண்டியவளாக நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். எவ்வளவு தான் பெண் உயர்கல்வி கற்று உயர்பதவியில் அமர்ந்தாலும் குடும்பம், தாய்மை, மனைவி என்ற பாத்திரங்கள் அவளுக்கான எல்லையை வரையறுத்துவிடுகின்றது. இந்நிலையில்  பெண் உயரிய பொதுநோக்கு ஒன்றிற்குள் உள்நுழைவது கடினமே.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் பால்நிலை சமத்துவம் பேணப்படுவதுடன் ஆண்களுக்கு நிகராக முடிவெடுக்கும் துறைகளில் பெண்களை உள்வாங்குகின்றமை சாதாரணமான விடயங்களில் ஒன்றாகிவிட்டது. ஆனால் மூன்றாம் உலக நாடுகளைப்பொறுத்தவரை இன்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. குறிப்பாக இலங்கையின்  குடும்ப, சமூக, பொருளாதாரக்காரணிகளால் ஆகக்குறைந்த பெண் பிரதிநிதித்துவமே சாத்தியப்பாடாகின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தந்த வடுக்களும், உயிர் மற்றும் உடற்பாகங்கள் இழப்புக்களும் அளவுக்கதிகமான பெண்தலைமைத்துவக்குடும்பங்களையும், கை,கால் ஊனமுற்றவர்களையும், கண்பார்வையற்ற மனிதர்களையும் வறுமைக்குட்பட்ட மக்களையுமே பரிசளித்திருக்கின்றது. இந்நிலைமையானது  பெண்களையும், சிறுவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் பெருமளவு பாதித்திருக்கின்றமையை எவரும் மறுத்துவிடமுடியாது. இத்தகைய தருணத்தில் பெண்கள், ‘தாமே தமக்காக’ உரத்துக்குரல் எழுப்பவேண்டியவர்களாகின்றனர்.

பெண்களின் பிரச்சினைகள் என்கின்ற போது ஒன்று, இரண்டு என எண்ணமுடியாதளவு ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலித்தொடர் போல பலவேறு பிரச்சினைகள் வந்துசேர்ந்துவிடும். .இவை பெண்களின் உடல், உள, சமூக ஆரோக்கியத்தைப் பாதித்து சமநிலையைக்குழப்புகின்ற பாரிய விடயம்.

இன்று பெண்ணானவள் தனித்து வீட்டை நிர்வகித்து தன் குடும்பத்தைப்பரிபாலனம் செய்கின்றாளாயின் அவள் முகம்கொடுக்கப்போகும் பொருளாதாரப்பிரச்சினைக்கு அப்பால் தன்னுடைய உடலை அந்நிய ஆண்களிடமிருந்து காப்பதுடன் தன்னுடைய இளவயதுப்பெண்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டியவளாகின்றாள். நுண்கடன் என்கிற பெயரில் பெண் படும் அவலங்களும், ஆண் அதிகாரிகளின் தீயவார்த்தைப்பிரயோகங்களும் இதற்குச்சான்று.

அதேநேரம் சமூகத்திலுள்ளவர்களின் அநாமதேய பேச்சுக்களுக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்தில் ஆண் உத்தியோகத்தர்கள், மற்றும் பொது நிறுவனங்களின் உதவியை நாடவும் அச்சம் அடைகின்றாள். இதனால் அந்தக்குடும்பம் எந்தப்பிரச்சினைக்கும் யாரையும் நாடாமல் தம்மையே நொந்து குட்டிச்சுவராகும் பரிதாபநிலை ஏற்படுகின்றது.

ஆக, பொருளாதார ரீதியில் உடல் உளப்பாதிப்புக்களால் அல்லற்படுவதும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களே. ஆரோக்கியமான உணவு தொட்டு அமைப்பான வீடு வாழ்வாதார வழிகள் என அனைத்திற்கும் அந்தப்பெண் போராடவேண்டியிருக்கின்றது.

வாழ்வாதார உதவிகள், நிவாரணங்கள் வழங்கப்படுகின்ற போதும் நிலைத்திருக்கும் வருமானத்தை ஈட்டும் வகையில் பெண்களுக்கு வழிகாட்டவும், நெறிப்படுத்தவும் யாரும் முன்வருவதில்லை. இதனால் அன்றன்றாட உழைப்பை அன்றன்றாடம் பயன்படுத்தும் ஸ்திரமற்ற வாழ்க்கையே சாத்தியமாகின்றது. பெண்களுக்கான வேலைவாய்ப்புக்கள், தொழில் இடங்கள் மிகக்குறைந்த வீதத்திலேயே காணப்படுகின்றது.

ஏன் இன்னமும் இத்தகைய நிலைமைகள்  தொடர்கின்றது  என ஆராய்ந்தால் பெண்கள் இன்னமும் சக்திவாய்ந்த முடிவுகளை எடுக்கக்கூடிய அந்தஸ்த்தில் இல்லை என்றே கூறவேண்டும்.  அரச அலுவலகங்களில் பெண்கள் தீர்மானம் எடுக்கக்கூடிய பதவிகளில் இருக்கின்றார்கள், ஆண்களுக்கு நிகராக சகலமட்டங்களிலும் பெண்கள் இருக்கின்றார்கள் என புள்ளிவிபரங்கள் சொன்னாலும் அவர்களால் முன்வைக்கப்படும் தீர்மானங்களில் ஆண் உத்தியோகத்தர்களின் மேற்பார்வை, தலையீடு உச்சமாகக்காணப்படுகின்றது. இல்லையெனில் கீழ்மட்ட ஆண் உத்தியோகத்தர்களால் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படாது உதாசீனமாக்கப்படுகின்றது.

பெண்ணை இரண்டாம் தரப் பிரஜையாகக் காட்டுவதுடன் பெண் ஆளுமையைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் அமைந்துவிடுகின்ற இந்த நிலைமை தொடருமானால்  பெண் உரிமைப்போராட்டங்களும், பெண்ணியச்செயற்பாடுகளும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் விழலுக்கிறைத்த நீராகிவிடும்.

பெண்கள் அரசியலில் பங்கேற்கவும் தீர்மானங்களை சபையில் துணிந்து கொண்டுவரவும், பெண்களுக்குகந்த முறையில் கொள்கைகளை வகுக்கவும் 25மூ  கோட்டா முறை இலங்கை உள்ளூராட்சித்தேர்தலில் முதன்முறையாகக் கொண்டுவரப்பட்டிருப்பது பெண்களின் தீர்மானம் எடுக்கும் திறனின் முக்கியத்துவத்திற்குக்கிடைத்த வெற்றி.

 ஆனால் அந்தத்தேர்தல் மூலம் அரசியலில் பிரவேசித்த பெண்கள் எத்தகைய தீர்மானங்களை எடுக்கும் அங்கீகாரம் பெற்றவர்களாகச் செயற்படுகின்றனர் என்பதைக்கூர்ந்து அவதானிக்கவேண்டும். பெரும்பாலும் பெண்கள் சிறுவர் விவகாரம் எனப் பெண்களை மீளவும் ஒரு வரையறைக்குள் உட்புகுத்தும் தன்மையே நடைமுறையில் இருக்கின்றது. இந்த நிலைமைகள் மாற்றப்படுவதுடன் பால்நிலை சமத்துவத்தை சகல தரப்பிலும், சகல துறைகளிலும், சகல மட்டங்களிலும் கட்டாயமாக ஏற்படுத்த அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும், பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களும் முன்னிற்கவேண்டும்.

மேலும் பெண்களும் தம்மை இரண்டாம் தரப் பிரஜைகளாகவும், குடும்ப, கலாசாரக்காவலர்களாகவும் கருதுகின்ற போக்கை மனதிலிருந்து அப்புறப்படுத்த முன்வரவேண்டும். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பால்நிலை சமத்துவம் பேசப்பட்டாலும் அது சென்றடைய வேண்டிய தூரம் இன்னும் நீண்டதாகவே உள்ளது.

ஆகவே அதிகாரத்தைக்கையில் வைத்திருக்கும் பெண்கள் மற்றப்பெண்களுக்கு வழிகாட்டுவதுடன் தமக்கான அங்கீகாரத்தையும், தீர்மானம் எடுக்கும் பங்கையும்  போராடிப் பெற ஒன்றிணைய வேண்டும். அதை விட அரசியலுக்குள் பெண்களை உள்நுழைத்துப் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டும். அப்போது தான் பெண்களுக்கானதொரு மகிழ்வான உலகத்தைக்கட்டியெழுப்ப முடியும்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.