Home இலங்கை “சோபையிழந்த பிரச்சாரப் போரும்” “தானா சேர்ந்த கூட்டமும” “மாவையின் ஐந்து தம்பிகளும்” “தூய கரம் தூய நகரமும்”

“சோபையிழந்த பிரச்சாரப் போரும்” “தானா சேர்ந்த கூட்டமும” “மாவையின் ஐந்து தம்பிகளும்” “தூய கரம் தூய நகரமும்”

by admin

நிலாந்தன்..


தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை. தேர்தல் கூட்டங்களும் விறுவிறுப்பாக இல்லை.இதுவரையிலுமான பிரச்சாரங்களில் பெருமளவுக்கு அதிர்ச்சியூட்டும் புத்தாக்கத்தைக் காண முடியவில்லை. பிரச்சாரக் கோஸங்களிலும் கவரத்தக்க படைப்புத் திறனை பெருமளவுக்குக் காண முடியவில்லை. இதில் கஜன் அணியின் யாழ் மாநகர சபைக்கான கோஸமாகிய ‘தூய கரம் தூய நகரம்’ என்பது படித்த நடுத்தர வர்க்கத்தை அதிகம் கவர்ந்திருக்கிறது. அதுபோல சங்கரி- சுரேஸ்- சிவகரன் அணியிலுள்ள சிவகரனின் ‘மாவை வைத்திருக்கும் ஐந்து தம்பிகள்’ என்ற கதை அதிகம் கேட்டுச் சிரிக்கப்பட்ட ஒரு விமர்சனமாகும். இப்படி ஆக்கத்திறன் மிக்க அல்லது சிரிக்கத் தூண்டும் சூடான பிரச்சாரப் போரை தேர்தல் களத்திற்பரவலாகக் காண முடியவில்லை.

வாக்காளர்கள் மத்தியில் ஒருவித ஆர்வமின்மையும், சோர்வும், பின்வாங்கும் இயல்பும் காணப்படுவதாக வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களும் கூறுகிறார்கள். மக்கள் மத்தியில் இப்படியொரு சோர்வு தோன்றுவது இதுதான் முதற்தடவையல்ல. கடந்த பொதுத் தேர்தலின் போதும் இப்படியொரு சோர்வு காணப்பட்டது. ஆனால் தேர்தலன்று வாக்களிப்பு உற்சாகமாக நடைபெற்றது. எனவே இப்பொழுது வாக்காளர்கள் மத்தியில் காணப்படும் சோர்விற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

1. மக்கள் ஏற்கெனவே முடிவெடுத்து விட்டார்கள். எனவே பிரச்சாரங்களைக் கேட்பதிலோ, வேட்பாளர்களை சந்திப்பதிலோ அவர்களுக்கு ஆர்வமில்லை.

2. கடந்த எட்டாண்டுகளில் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. இவற்றினால் எதுவும் கிடைக்கவில்லை என்று மக்கள் நம்புகிறார்கள்.

3. கூட்டமைப்பின் மீதான அதிருப்தி அதிகரித்துக் காணப்படுகிறது. ஆனால் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அல்லது குறைந்த பட்சம் ஒரு வாக்குத் திரட்சியாக மாற்றுவதற்கு உரிய தலைமைத்துவமோ, கட்சிகளின் கூட்டோ இல்லை. இந்த வெற்றிடம் மக்களை சலிப்படைய வைக்கிறது.

4. கூட்டமைப்பிற்கு எதிரான அணிக்கு விக்னேஸ்வரன் தலைமை தாங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஆண்டில் மிக உயர்வாகக் காணப்பட்டது. ஆனால் அவர் ஓர் அமுக்கக் குழுவாக மட்டுமே தொழிற்படுவார். அல்லது கட்சிக்குள் ஒரு நொதியமாகத்தான் தொழிற்படுவார். அதற்குமப்பால் ஒரு பலமான எதிரணியைக் கட்டியெழுப்பி அதற்கு தலைமை தாங்கமாட்டார் என்று ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் விக்னேஸ்வரனை நோக்கித் திரண்டு வந்த எதிர்பார்ப்புக்கள் யாவும் இப்பொழுது வடியத் தொடங்கிவிட்டன.

5. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின்னரான ஒரு சமூகத்தில் ஒப்பீட்டளவில் நிம்மதியான ஒரு சூழல் ஏற்படும் பொழுது குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின் அப்படியொரு சூழல் உருவாக்கப்பட்ட பொழுது மக்கள் மெல்ல மெல்ல அரசியல் நீக்கம் செய்யப்பட்டு அரசியலில் ஆர்வமற்றவர்களாக மாறி வருகிறார்கள். தவிர அவர்களை அரசியல் நீக்கம் செய்வதற்கென்றே பல தரப்புக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக ஏற்கனவே எடுக்கப்பட்ட மாறா முடிவுகளோடுள்ள வாக்காளர்களை அல்லது அரசியல் ஆர்வமற்றுக் காணப்படும் வாக்காளர்களைக் கொண்ட மந்தமாகக் காணப்படும் ஒரு தேர்தல் களத்தில் கடந்த செவ்வாய்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் கூடிய மக்கள் திரள் எதிர் பார்க்கப்படாத ஒன்றுதான்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியராக இருக்கும் பேராசிரியர் முத்துக்குமாரசுவாமி சொர்ணராஜா உரையாற்றினார். அவரோடு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரனும் உரையாற்றினார். இவ்விரு உரைகளுக்கும் பின்; விக்னேஸ்வரன் தொகுப்புரை வழங்கினார். அதன்பின் கேள்வி, பதில் இடம்பெற்றது.

எழுநூறிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டத்தில் பங்குபற்றினார்கள். இக்கூட்டம் முதலில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறுவதாக இருந்தது. ஆனால் இது தேர்தல் காலம் என்பதைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையகத்திற்கு யாரோ முறைப்பாடு செய்ததாகவும் அதையடுத்து தேர்தல் ஆணையகம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் காலத்தில் இப்படிப்பட்ட கூட்டத்தை நடத்தினால் அது சில கட்சிகளுக்கு ஊக்குவிப்பாகவும் சில கட்சிகளுக்கு பாதகமாகவும் அமையலாம் என்ற தொனிப்பட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். இது காரணமாக இப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்கு பல்கலைக்கழகத்தில் இடமளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையகம் அறிவுறுத்தியதை அடுத்து உபவேந்தர் கைலாசபதி கலையரங்கைத் தருவதற்கு மறுத்து விட்டார். அதனாலேயே கூட்டம் வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.வீரசிங்க மண்டப நிர்வாகத்திற்கும் இப்படியொரு கடிதம் அனுப்பபட்டதாம். சிலவேளை அது கைலாசபதி கலையரங்கில் நடந்திருந்தால் இந்தளவிற்கு மக்கள் திரள் கூடியிருக்குமா? என்ற கேள்வியும் உண்டு. அக்கூட்டத்தை எங்கு நடத்துவது என்பது ஒரு சர்ச்சையாக்கப்பட்டது அவ்வளவு தொகை மக்கள் கூடியதற்கு ஒரு காரணமாயிருக்கலாம்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில்பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதையும் தாண்டியவர்கள். கூட்டம் 4 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல முதியவர்கள் 3 மணிக்கே மண்டபத்தில் வந்து உட்கார்ந்து விட்டார்கள். பேரவையின் தீர்வு முன்மொழிவை வெளியிட்டு வைத்த கூட்டத்திலும் இப்படித்தான் நடந்தது. செவ்வாய்க்கிழமைக் கூட்டத்தில் இளைஞர்களின் பிரசன்னம் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்பட்டது.பெண்கள் தொகை அதைவிடக்குறைவு.

கூட்டத்தில் பேசிய பேராசிரியர் சொர்ணராஜா பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாற்றுவதுண்டு என்று கூறப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தலைப்பு ‘தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேசச் சட்டம்’ என்பதாகும். மூன்று களங்களினூடாக சர்வதேசச் சட்டத்தை கேடயமாக மாற்றலாம் என்று அவர் பேசினார். உலகளாவிய் மனிதாபிமானச் சட்டங்கள், பலமடைந்து வரும் தமிழ் டயஸ்பொறா, நிலைமாறுகால நீதி ஆகிய மூன்று களங்களினூடாக தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். அரசற்ற தரப்புக்களுக்கு சாதகமாக அனைத்துலகச் சட்டக்கட்டமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும்ஈழத் தமிழர்கள் தமக்குரிய நீதியைப் பெற்றுக்கொள்ள நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்ற ஒரு தொனி அவருடைய உரையில் இழையோடியது. தன் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்துவதற்கு பேராசிரியருக்கு தடைகள் இருந்ததாகவும் தோன்றியது.அவர் தனது தர்க்கத்தைச் செறிவாகவும் அழுத்தமாகவும் கட்டியெழுப்பவில்லை என்று சில கூர்மையான அவதானிகள் கருத்துத் தெரிவித்தார்கள்.அதன் விளைவாகவே அவரை நோக்கிக் கேட்கப்பட்ட முதற் கேள்வியும் அமைந்திருக்கலாம். அனைத்துலகச் சட்டங்களை அமுல்படுத்தும் தரப்பு எது?என்பதே அக்கேள்வியாகும்.அது ஆங்கிலத்தில் கேட்கபட்டது.

மற்றொரு பேச்சாளரான குருபரன் இடைக்கால அறிக்கை தொடர்பில் உரையாற்றினார். ‘மாயைகளைக் கட்டுடைத்தல்’ என்பது அவருடைய தலைப்பு. ஒரு சட்டச் செயற்பாட்டாளராக அவர் இடைக்கால அறிக்கை மீதான விமர்சனங்களை தர்க்க பூர்வமாக முன்வைத்தார். அவருடைய தர்க்கம் பெருமளவிற்கு சுமந்திரனை அம்பலப்படுத்துவதாக இருந்தது. அவர் சுமந்திரனின் பெயரை நேடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் சுட்டிக்காட்டிய அநேக விடயங்கள் ஏற்கெனவே சுமந்திரன் முன்வைத்திருக்கும் தர்க்கங்களைமறுப்பவைதான்.

முதல்வரின் தொகுப்புரையில் அவர் கூட்டமைப்பை மறைமுகமாகச் சாடிய போதெல்லாம் கைதட்டல் எழுந்தது. குருபரன் பேசிய பொழுதும் இது நடந்தது. கைதட்டல்களால் முதல்வர் மேலும் உற்சாகமடைந்தவராகக் காணப்பட்டார். தனது விமர்சனங்களை மறைமுகமாக ஆனால் கூர்மையாக முன்வைத்தார்.; படைக்கட்டமைப்பில் உள்ள எல்லாரையும் தாங்கள் குற்றவாளிகளாகக் கூறவில்லையென்றும் அதிலுள்ள சில காவாலிகளையே தண்டிக்கக் கேட்பதாகவும் அவர் உரையாற்றினார். ஆனால் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. ஸ்ரீலங்காப் படைத்துறையில் உள்ள சிலர் தனிப்பட்ட முறையில் செய்த குற்றங்களா அவை? அல்லது ஒட்டுமொத்த படைக் கட்டமைப்பின் யுத்தக் கொள்கையின் விளைவாகத்தான் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டனவா?;. ஏற்கெனவே ஐ.நா போன்ற உலகப் பொது அமைப்புக்கள் போர்க்குற்றஙக்ளை ஒரு கட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட குற்றங்களாகவே வகைப்படுத்தியுள்ளனவே?.

கேள்வி கேட்கலாம் என்று முதல்வர் அறிவித்ததும் கூட்டத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் எழுந்து சென்று விட்டார்கள். அவர்களிடம் ஒன்றில் கேள்விகள் இல்லை. அல்லது அவர்கள் கேள்வி கேட்க விரும்பவில்லை. அல்லது அவர்கள் இருள முன் வீடு திரும்ப வேண்டியிருந்தது. அலுவலகத்தை முடித்துக் கொண்டு கூட்டத்திற்கு வந்தவர்கள் இருட்டுவதற்கு முன் வீடு திரும்பப் புறப்பட்டு விட்டார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் மக்கள் பேரவையில் ஓரணியில் நின்று உள்ளூராட்சித் தேர்தலோடு இரு வேறு அணிகளாகப் பிரிந்த சுரேசும், கஜனும் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.ஆனால் இருவரும் இரு வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களில் சிவாஜிலிங்கம் வந்திருந்தார். மிகச் சோர்வாகக் காணப்படும் ஒரு தேர்தல் பிரச்சாரக் களத்தில் இப்படியொரு கூட்டத்திற்கு இவ்வளவு தொகை மக்கள் திரண்டனர் என்பது எதைக் காட்டுகிறது?

மக்கள் எதையோ வித்தியாசமாகக் கேட்க விரும்புகிறார்கள். அவர்கள் எதிர்க் கருத்துக்களால் அதிகம் கவரப்படுகிறார்கள். இடைக்கால அறிக்கையை உருவாக்கிய தமிழ்த் தலைமைகள் மீது அவர்கள் அதிருப்தியோடு காணப்படுகிறார்கள். அத் தலைமைகளை விமர்சிக்கும் போதெல்லாம் அவர்கள் உற்சாகமாகக் கை தட்டுகிறார்கள். இந்த உற்சாகத்தையும், எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஒருமுகப்படுத்தி அதற்கு தலைமை தாங்க ஒரு ஜனவசியமிக்க பேராளுமை இல்லையென்பதே இப்போதுள்ள பிரச்சினையெல்லாம். அப்படி ஒரு பேராளுமை மேலெழுந்தால் அது கூட்டமைப்பின் இடத்தை பிரதியீடு செய்யக்கூடும். அப்படி ஒரு பேராளுமையாக மேலெழுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்னெஸ்வரன் தொடர்ந்தும் தளம்பிக்கொண்டிருக்கிறார். இதனால் இப்பொழுது அவருக்கு கிடைக்கும் கை தட்டல்கள் வாக்குகளாக மாறும் என்று முடிவெடுப்பது கடினம். மக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளோடு காணப்படுவது கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கே சாதகமாக மாறியது. இம்முறையும் அப்படி நடந்துவிடக்கூடும். இது தொடர்பில் ஒரு தீவிர அரசியற் செயற்பாட்டாளர் ஓரு தமிழ் நாட்டு உதாரணத்தைச் சுட்டிக் காட்டினார்.

2011 ஆம் ஆண்டு தமிழகத்தேர்தல் களத்தில் வடிவேலு பேசிய பொது அவருடைய கூட்டங்களுக்கு பெருந் தொகையான மக்கள் திரண்டு வந்தார்கள் அக்கூட்டம் கருணாநிதிக்குக் கூடிய கூட்டத்தை விடக் கூடுதலாக காணப்பட்டது என்றும் கூறப்பட்டதுண்டு. ஆனால் அக் கைதட்டல்கள் எவையும் வாக்குகளாக மாறவில்லை. எனவே கூட்டங்களுக்கு எவ்வளவு மக்கள் வருகிறார்கள் என்பதை விடவும் அம்மக்களை ஆதரவுத்தளமாக அல்லது வாக்குகளாக எப்படி மாற்றுவது என்பதே இங்கு மிகவும் முக்கியம்.விக்னேஸ்வரன் இந்த தேர்தல் அரசியல் சூக்குமத்தை விளங்கி வத்திருக்கிறாரா?

கடந்த ஆண்டு விக்னேஸ்வரனைக் கவிழ்க்கும் முயற்சிகள் தீவிரமடைந்தபோது ஒருதொகுதி அரச ஊழியர்கள் அவருக்கு ஆதரவாகத் திரண்டார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய சமகாலத்தில் படித்தவர்கள்.இவர்களில் ஒருதொகுதியினர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவான அணி ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு இக்கட்டுரையாசிரியரை அணுகினார்கள். ஒரு தனிநபரை மையப் படுத்துவதை விடவும் ஒரு கொள்கையை மையப்படுத்தி ஒரு அமைபாகுவதே நல்லது என்று அவர்களுக்கு கூறினேன் .அவர்களும் மாற்றத்துக்கும் பொறுப்புக் கூறலுக்கும் வெளிப்படத் தன்மைக்குமான ஓரமைபை உருவாக்க ஒப்புக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஓர் அமைப்பாகத் திரள முன்னரே விக்னேஸ்வரன் தான் கட்சித் தலைமைக்கு எதிராக ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க மாட்டார் என்று கூறிவிட்டார். இதனால் அவர்கள் சோர்ந்து போனார்கள் .எனினும் மறுபடியும் ஏதோ ஒரு நம்பிக்கையோடு முயற்சித்தார்கள்.அனால் அந்த இடையூட்டில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்களில் சிலர் எதிரணியைச் சேர்ந்த கட்சியொன்றில் இணைந்து விட்டார்கள்.கூட்டமைப்புக்கு எதிரான உணர்வலைகள் உரிய காலத்தில் உரிய விதத்தில் ஒன்று திரட்டப்டாத வெற்றிடத்தில் அவர்களுக்கு வேறு மாற்று வழி இருக்கவில்லைப் போலும். அவர்களைப் போலவே ஆங்காங்கே கிராம மட்டத்தில் சிறியதும் பெரியதுமான ஆதரவு அணிகள் விக்னேஸ்வரனை நோக்கி திரண்டன. ஆனால் அவர் முடிவெடுக்கத் தயங்கிய ஒரு பின்னணிக்குள் இந்த ஆதரவு அணிகளில் பல கலைந்து போய் விட்டன.

இப்பொழுது விக்னேஸ்வரன் ஒரு மக்கள் மைய அமைப்பைப் பற்றி அதிகம் பேசி வருகிறார். அது தொடர்பாக அவரிடம் ஏதும் அரசியல் தரிசனங்களோ, வழிவரைபடமோ உண்டா? தேர்தல்அரசியலுக்குள் வராத ஒரு மக்கள் மைய அமைப்பை கட்டியெழுப்புவதென்றால் அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கமும், சித்தாந்தத் தெளிவும் அரசியற் திடசித்தமும் விக்னேஸ்வரனிடம் உண்டா? மக்கள் இயக்கங்களைக் குறித்த தகவல் யுகத்து அனுபவங்களை அவர் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்? தேர்தலில் ஈடுபடாமல் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வெகுசன மைய அரசியலொன்றுக்கு அவர் தலைமை தாங்கத் தயாரா?ஒரு பிரமுகர் மைய அமைப்பாகக் காணப்படும் பேரவையை ஒரு மக்கள் மைய அமைப்பாகக் கட்டியெழுப்புவது எப்படி? எப்பொழுது?

நிலாந்தன்..

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More