இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

தமிழர்களின் நீரியல் சடங்குகளும் நீர்நிலை மேலாண்மையும் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக சரவணகுமார்:-

பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

என்று சிலப்பதிகாரத்தில் குமரிக்கண்டம் கடல்கொண்ட செய்தி கிடைக்கிறது. தமிழர்களுக்கு வாழ்வுமென்பதும், அழிவென்பதும் அதிகம் நீரினாலே நடந்ததுள்ளது. ஆரியர் நாகரிகத்தில் அக்னி சடங்குகள் முதன்மை பெறுவது போன்று திராவிடர் நாகரிகத்தில் நீரியல் சடங்குகளே முக்கியத்துவதும், முதன்மையும் பெறுகிறது. ஆரியர்கள் நாடோடிகளாக வாழ்ந்ததால் நெருப்பை காக்க வேண்டிய தேவையும், தமிழர்கள் உற்பத்தியில் பங்குபெற்று இருந்தமையால் நீரின் முக்கியத்துவமும் இருந்தது. மேலும் தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதியைச் சேர்ந்ததால் நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் அதிகமாக காணப்படுவது வியப்புக்குரியதல்ல. தமிழர்களின் நீர் மேலாண்மையை அறிந்து கொள்வதற்கு முன்பு தமிழர்களின் நீரியல் சடங்குகளையும் மந்திரங்களையும் அறிந்து கொள்வது மிக அவசியமானதாகும்.

மந்திரமும் சடங்குகளும்

மானிடவியலாரின் நோக்கின்படி இயற்கையின் இயக்கங்களை புரிந்து கொள்ள முடியாத ஆதிமனிதன் இயற்கையைக் கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து சில பயன்களைப் பெறவும் உருவாக்கியதே மந்திரமாகும். மனிதனிடம் கடவுள்களும், சமயங்களும் உருவாவதற்கு முன்பாகவே மந்திரங்களும் சடங்குகளும் அவனிடத்தில் வந்துவிட்டன.

இந்த புராதன மந்திரமானது கற்பனையொன்றினை உருவாக்குவதன் மூலம் யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற கருத்தோட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது உண்மையான தொழில்நுட்பத்தில் பற்றாக்குறையினை ஈடுகட்டுவதற்காகத் தோன்றிய கற்பனையான தொழில்நுட்பமாகும் என்று தாம்சன் குறிப்பிடுகிறார்.

ஜோசப் நீதாம் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, “அறிவியலும் மந்திரமும் தொடக்கத்தில் பிரித்தறிய முடியாது இருந்தன” என்று கூறுகிறார். இக்கருத்துகளின் அடிப்படையில் மந்திரத்தைத் தொல் அறிவியல் (Proto –science) என்று கூறுவதில் தவறில்லை.

மந்திரங்கள் மற்றும் சடங்குகளின் தோற்றம், அதனுடைய நோக்கம், அவற்றின் வகைகள் ( ஒத்த மந்திரம், தொத்து மந்திரம்), தற்போது வரை நிகழ்த்தப்படும் சடங்குகள் ஆகியவற்றை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் “மந்திரமும் சடங்குகளும்” என்ற நூலில் விரிவாக விளக்குகிறார்கள்.

மழைச்சடங்கு:

நீருக்கு ஆதரமானது மழையாகும். அதனால் தான் இளங்கோவடிகள், “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று மழையைப் போற்றுகிறார். “வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற்பாற்று” என்று வள்ளுவர் அமுதத்திற்கு நிகராக மழையினைக் குறிக்கிறார்.

மழையின்றித் துயருறும் பாமர உழைக்கும் மக்கள் மழை வேண்டி சடங்குகளை நிகழ்த்துகின்றனர். இதற்காக தெய்வத்திற்கும் பலி கொடுப்பதுமுண்டு. மழையை வேண்டி குறிஞ்சி நிலத்திலுள்ள குறவர்கள் தெய்வத்தை வணங்கிய செய்தியினை,

“மலைவான் கொள்கெனவுயர் பலிதூஉய்
மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
கடவுட்பேணிய குறவர் மாக்கள்” என்று புறநானூறும் (143),

“———– மலைவான் கொள்கெனக்
கடவு ளோங்கும் வரைபேண் மார்வேட்டெழுந்து
கிளையோடு, மகிழுங்குன்ற நாடன்” என்று நற்றிணையும் (165) தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் மழை பெய்ய வேண்டிச் செய்யும் சடங்குகளில் மழைக்கஞ்சி காய்ச்சுதலும்(எடுத்தல்), கொடும்பாவி கட்டியிழுத்தலும் கிராமப்பகுதிகளில் பரவலாக நடத்தப்படுகிறது.

கொங்குப் பகுதிகளில் மழையை வேண்டி மழைக்கஞ்சி எடுக்க ஊரிலுள்ள மக்கள் முடிவு செய்தவுடன் பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கிராமத்திலுள்ள வீடுதோறும் சென்று தானியங்களைப் பிச்சையாக ஏற்பார்கள். குறிப்பிட்ட வகைத் தானியங்கள் என்றில்லாது எல்லா வகைத் தானியங்களையும் பிச்சையாகப் பெற்று, அதை அரைத்து, உப்பில்லாமல் கஞ்சி காய்ச்சி, ஊரார் குடித்து முடித்தவுடன் பெண்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை எடுத்துக் கொண்டு பரதேசம் போவதாகக் கூறி புறப்படுவார்கள். அவர்களை ஊர்ப் பெரியவர்கள் தடுத்து மழை பெய்யும் என்று நம்பிக்கையூட்டி அழைத்து வருவார்கள். இதே சடங்கு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தானியங்கள் அல்லாமல் வீடுவீடாக சோற்றை வாங்கி அவற்றை உப்பிடாது ஊர் முச்சந்தியில் வைத்து, பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது உண்டு வீடு திரும்புகிறார்கள். நெல்லை மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்கள் பெறப்பட்ட சோற்ற ஊர் முச்சந்தியில் இல்லாது தேவாலயத்தில் வைத்து, செபித்து பங்கிட்டு உண்கிறார்கள்.

மழைக்கஞ்சி எடுத்தல் சடங்கைப் போன்று கொடும்பாவி கட்டி இழுத்தலும் பரவலாக காணப்படும் சடங்காகும். வைக்கோலால் ஒரு மனித உருவம் செய்து, அதற்கு பழந்துணிகளை அணிவித்து பிணத்தைப் போல படுக்க வைத்து வருவார்கள், அப்போது பெண்கள் மாரடித்து ஒப்பாரி பாடுகிறார்கள். மழை பெய்ய வேண்டும் என்ற தங்களது வேண்டியதலையும் பாடலாகப் பாடுகிறார்கள். அதை ஊர் பொது இடத்திலோ, சுடுகாட்டிலோ வைத்து எரித்து விடுவார்கள். இறந்தவர்களுக்கு செய்யும் கடன்களைப் போலியாக யாராவது ஒருவர் அதற்கு செய்வார். மழை பெய்யாமல் இருப்பதற்கும் காரணம் அறம் குன்றி அநீதி மிகுந்துவிட்டதுதான் காரணமென்றும், அநீதியின் உருவமாக கொடும்பாவியை கொளுத்திவிடுதால் வருணம் மனமிரங்கி மழை பெய்விப்பான் என்று நம்புகிறார்கள்.

மழை பெய்யவில்லை என்றால் தமிழ் மக்களிடம் அதிகம் தண்டனை பெறும் கடவுளாக பிள்ளையார் இருக்கிறார். நகரத்தார் (நாட்டுக்கோட்டை செட்டியார்) மூலமாக வட இந்தியாவிலிருந்து பிள்ளையார் தமிழ்நாட்டுக்கு வந்ததாகவும், பிள்ளையார்பட்டியில் உள்ள பிள்ளையாரே பழமையானது என்றும் ஆய்வாளர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். வட இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்டும் பிள்ளையார், தமிழ்நாட்டு மக்களிடம் தண்டனை பெறும் நாட்டார் தெய்வமாக இருக்கிறார். நிறுவனமயமாக்கப்பட்ட ஆரிய பெருங்கடவுள்களின் கோயில்களில் பிள்ளையார் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டும், மரத்துக்கடியிலும், குளத்தங்கரையிலும் பிள்ளையார் நாட்டார் தெய்வமாகவே இருக்கிறார்.

மழை பெய்யச் செய்ய பிள்ளையாரை காலால் எட்டி உதைத்து கவிழ்த்து விடுகிறார்கள். மழை பெய்யும் வரை நிமிர்த்தி வைப்பதில்லை. பிள்ளையார் மீது சாணிக் கரைசலையோ, மிளகாய் கரைசலையோ ஊற்றி விடுவார்கள். இந்த அவல நிலையிலிருந்து மீள அவர் மழையைப் பெய்விப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள். சில கிராமங்களில் பிள்ளையார் சிலையை கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளிலோ, குப்பைகளிலோ கொண்டு போய் போட்டுவிடுவார்கள். மழை வந்தவுடன் எடுத்து வந்து அதனை உரிய இடத்தில் வைப்பார்கள்.

தமிழர்களின் வாழ்வியலில் நீரியல் சடங்குகள்:

தமிழர்களின் வாழ்வியலில் பிறப்பிலிருந்து இறப்பு வரை நீரியல் சடங்கு முக்கியத்துவம் பெறுகிறது. மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும், வழக்கத்தினை அகநானூறு (86) குறிப்பிடுகிறது. இன்னும் கொங்குப்பகுதியில் மணமகளை திருமணத்திற்கு முந்தைய நாள் தாய்மாமன் வீட்டுக்கு அழைத்துச் சென்று நீராட்டும் வழக்கம் உள்ளது. இறந்தார்க்கு ஊரறிய நீர்மாலை எடுத்து வந்து நீராட்டுகிறார்கள். கருவுற்ற பெண்ணை, “தலை முழுகாமல் இருக்கிறாள்” “குளியாமல் இருக்கிறாள்” என்றும், மாதவிலக்கு காலத்தை “தலைக்கு தண்ணீர் ஊற்றி இருக்கிறாள்” என்றும் குறிப்பால் உணர்த்துவது நாட்டார் பேச்சு வழக்காகும்.

கருவுற்று இருக்கும் பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், இறந்த நாள் அன்றே கூடியுள்ள மக்களின் மத்தியில் ஒரு சொம்பில் நீர் வைத்து எத்தனை மாதமாக இருக்கிறாளோ அத்தனை பூக்களை அந்த நீரில் போட்டு, செய்தியினை ஊராருக்குச் சொல்கிறார்கள். இறந்து மூன்றாவது நாள் சொந்தபந்தங்களுக்கு சொல்லி அனுப்பி தண்ணீர் வைத்து பெண்கள் ஒப்பாரி சொல்லி அழுகிறார்கள். இதற்கு “சொம்புத்தண்ணீர் வைத்து அழுதல்” என்று பெயர்.

போர்க்களம் செல்லும் வீரர்கள் மஞ்சள் நீராட்டு செய்வது அல்லது மஞ்சள் உடை உடுத்திச் செல்லுவர். அது இறப்பினை எதிர்கொள்ளும் வீரவுணர்வினையும் தியாக உணர்வினையும் குறிக்கும். இவ்வழக்கத்தின் தொல்லெச்சமாகவே அரக்கனை அழிக்கச் செல்லும் தாய்த் தெய்வத்தின் “சாமியாடி” மஞ்சள் நீராடி மஞ்சள் உடை உடுத்திச் செல்கிறார். கரகத்தில் நீரை அடைத்தும், தீர்த்தக் காவடியில் நீரை அடைத்தும் நீரையினை வழிபடுகின்றனர். நாட்டார் தெய்வத்திற்கு படையலிட்டு தேங்காய் உடைத்து அந்த நீரைக் கொண்டே முதலில் பூசை செய்கிறார்கள்.

இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்ப்பந்தல் அமைப்பது தமிழர்களின் வழக்கம். மொகஞ்சொதராவில் அகழ்வாய்வில் காணப்பட்ட படிக்கட்டுகளுடன் கூடிய குளம் நிர்ச்சடங்குகள் செய்வதற்குரிய இடமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நீராடுவதே ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருதப்பட்டதற்குப் பரிப்பாடல், திருப்பாவை போன்ற இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.

மழை மற்றும் நீர் குறித்த பழமொழிகள்:
· நீரடித்து நீர் விலகாது
· நீரில் எழுதியது போல
· தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்
· அந்திமழை அழுதாலும் விடாது
· ஐப்பசிபனி அப்போதே மழை
· கார்த்திகைக்குப்பின் மழையும் இல்லை. கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.
· சித்திரை மழை கருவை (பயிரை) அழிக்கும்.
· தும்மலில் போனாலும் தூற்றலில் போகாதே.
· தைமழை நெய்மழை
· மழை பெஞ்சுங் கெடுக்கும், பெய்யாமலுங் கெடுக்கும்.
· ஆடுமாடு இல்லாதவன் அடமழைக்கு ராசா, பெண்டுபிள்ளை இல்லாதவன் பஞ்சத்துக்கு ராசா.

தமிழர்களின் நீர்நிலை மேலாண்மை:

தமிழ்நாட்டின் எல்லையானது வடவேங்கடம் முதல் குமரிக்கடல் வரையாகும். இதை,
“நெடியோன் குன்றமும், கொடியோன் பெளவமும்,
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு” என்று இளங்கோவடிகளும்,
“வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகம்” என்று பனம்பாரனாரும்,

“குணகடல் குமரி குடகம் வேங்கடம்
என நான்கு எல்லை” என்று பவணந்தியாரும்,

“வேங்கடம் குமரி தீம்புனல் பெளவம்
என்றிந் நான்கெல்லை தமிழது வழக்கே” என்று சிகண்டி முனிவரும் சான்று பகிர்கின்றனர்.

தாமிரபரணி ஆறு

இந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை, தாமிரபரணி,ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. சிலப்பதிகாரத்தில் இளங்கோ, புகார் காண்டம் – கானல் வரியில் காவிரியைப் பற்றியும், மதுரைக்காண்டம் – புறஞ்சேரி இறுத்த காதையில் வையை(வைகை) பற்றியும் பாடியுள்ளார். ஆறுகளை தவிர்த்து உள்ள நீர்நிலைகளை தமிழர்கள் பல பெயரில் அழைத்தனர். சுனை, கயம், பொய்கை, ஊற்று, என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை குளம் என்றும், உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ஊரணி என்றும், ஏர் உழவுக்கு பயன்படும் நீர்நிலை ஏரி என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ஏந்தல் என்றும், கண்ணாறுகளை உடையது கண்மாய் என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.

கண்மாய்களில் பாசனத்துக்கு திறந்து விடப்படுவது மதகு என்றும், உபரி நீர் வெளியேறும் பகுதி மறுகால் என்றும் அழைக்கப்படுகிறது. கண்மாயின் கொள்ளளவு கணக்கிடப்பட்டு மறுமால் அமைக்கப்பட்டு, தானாகவே வெளியேறும் உபரி நீர் ஓடைகளின் வழியாக வெளியேறி அடுத்த கண்மாய்க்கு செல்லும். இப்படி படிபடிப்பாயாக கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் ஏதோ ஆறுடன் இணைக்கப்படும் நுட்பமானது வியப்புக்குரியது.

ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் “மடை” மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது. வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும். மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம். மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் “மடையர்கள்” என அழைக்கப்பட்டார்கள்.

நிலத்தால் திரிந்துபோன நீரின் சுவையை மேம்படுத்தத் தமிழர்கள் நெல்லியினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர். கிணற்று நீர் உவராக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களைப் போட்டு வைப்பதும், ஊரணிக் கரையில் நெல்லிமரங்களை நட்டுவைத்து அதற்கு நெல்லிக்காய் ஊரணி என்று பெயரிடுவதும் தமிழ் மக்களின் வழக்கம்.

நெடுஞ்சாலைகளில் கோடைக் காலத்தில் நீர்ப்பந்தல் அமைப்பது ஒரு அறச்செயலாகக் கருதப்பட்டது. சோழர் காலத்துக் கல்வெட்டொன்று தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் இறைத்து தருபவனுக்கும், அதற்குக் கலமிடும் குயவனுக்கும், தண்ணீர் ஊற்றித் தருபவனுக்கும் மானியமளித்த செய்தியினை குறிப்பிடுகிறது.

தரவுகள்
· ஆய்வாளர். தொ.பரமசிவம்
· ஆய்வாளர். ஆ.சிவசுப்பிரமணியன்
· சிலப்பதிகாரம்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers