Home இலங்கை இரண்டாம் இணைப்பு! முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகலில் காணி அளக்க சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

இரண்டாம் இணைப்பு! முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகலில் காணி அளக்க சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

by admin

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாயக்கால் கிழக்கு – வட்டுவாகல் பகுதியில் கடற்படைக்காக காணி சுவீகரிப்பு இன்று மேகொள்ள இருந்தமை பற்றி அண்மையில் குளோபல் தமிழ் செய்திகள் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந் நிலையில் இன்று காணி அளக்க சென்வறவர்கள் பொது மக்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை கற்படையின் கோத்தபாய முகாம் அமைந்துள்ள பகுதியை அண்டி பரந்தன் – முல்லை தீவியை இடைமறித்து பந்தலிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்ப குதியில் பதற்றம் ஏற்ப்பட்டது. ஒருபோதும் தமது காணிகளை கடற்படைக்கோ, இராணுவத்திற்கோ கொடுக்க இடமளிக்கப் போவதில்லை என்று மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

அத்துடன் தமது காணிகளை விரைவில் விடுவித்து தம்மை மீள்குடியேற்றுமாறும் மக்கள் வலியுறுத்தினர். இந்த எதிர்ப்பு போராட்டத்தின்போது இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் மக்கள் எதிர்புக்களை வெளியிட்டனர்.

 

கோத்தபாய முகாமிற்காக முள்ளிவாய்க்கால் கிழக்கை சுவீகரிக்க 22ஆம் திகதி மீண்டும் காணி அளவீடு- இதுதான் நல்லாட்சி அரசின் நடவடிக்கை!!

Feb 19, 2018 @ 14:16

 
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதியில் கோத்தபாய கடற்படை முகாம் என்ற பெயரில் இலங்கை கடற்படை தளம் அமைத்துள்ள பகுதி உள்ளிட்ட 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்கில் மீண்டும்  நில அளவை இடம்பெறவுள்ளதாக பிரதேச நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது விண்ணப்பத்திற்கு இணங்க, காணி சுவீகரிப்பு அதிகாரியின் கேட்டளையின் பிரகாரம் இந்த நில அளவை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகலில் தற்போது கடற்படையால் வேலியிடப்பட்ட பகுதியை நிரந்தரமாக சுவீகரிக்கவே இவ்வாறு அளவை செய்யப்படவுள்ளது.
இதேவேளை கடந்த சில வருடங்களாக இந்தக் காணியை அபகரிக்கும் முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மாத்திரமின்றி ஆட்சி மாற்றத்தின் பின்னரும் காணியை சுவீகரிக்க அரசு மேற்கொண்ட முயற்சி மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி அளவீடு செய்யவுள்ளதாக 15ஆம் திகதியிடப்பட்ட அறிவிப்பு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ள பகுதியை உரிமை கோருபவர்கள் இருந்தால் ஆவணங்களுடன் வருகை தருமாறும்  அரச நில அளவையாளர் அதில் அறிவித்துள்ளார்.
 வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலத்திற்குரிய மக்கள் நிலமற்றவர்களாக உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அகதிகளாக அலைகின்றனர்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து காத்திருந்த நிலையில் நல்லாட்சி அரசும் தமது காணிகளை அபகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது தம்மை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக கூறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் மக்கள் தமிழ் தலைமைகள் இதில் மௌனம் காப்பதே மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் தமது நிலங்களை சுவீகரிக்க ஒரபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் எதிர்வரும் 22ஆம் திகதி அப் பகுதி மக்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குளோபல்  தமிழ் செய்திகளுக்குத் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவிருந்து குளோபல் தமிழ் செய்தியாளர் 

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.