காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சுயாதீனமாக செயற்படக்கூடிய உறுப்பினர்களை நியமிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறிவிட்டார்.  புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து அவர்களது கட்டளைகளை நிறைவேற்றுபவர்களே காணாமல்போனோர் அலுவலகத்திற்கு ஆணையாளர்களாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர். குணதாசஅமர சேகர எச்சரித்துள்ளார்.

இவர்கள் கடந்த கால அரசாங்கத்திற்கு பாதகமாகவும், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு சாதகமாகவும் தமது விசாரணைகளை மேற்கொள்வார்கள். எனத் தெரிவித்த அவர்,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகளின் விருப்பங்களை ஜனாதிபதி காணாமல் போனோர் அலுவலக விவகாரத்தில் நிறைவேற்றியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் மாத்திரம் கிடையாது. சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மேற்குலக நாடுகள் யுத்த விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமாகவே இன்றுவரை இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளனர் என்ற விடயம் ஏற்றுக் கொள்ளகூடியதாகவே காணப்படுகின்றது . பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக நாட்டை ஒருபொழுதும் காட்டிக்கொடுக்கவும் விட்டுக்கொடுக்கவும் முடியாது.

மேற்குலக நாடுகளின் விருப்பங்களுக்கு அமையவே தேசிய அரசாங்கம் நாட்டின் நிர்வாகத்தினை மேற்கொண்டு வருகின்றது. ஐ. நா. மனித உரிமையின் ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான அதிருப்தியின் பின்னரே காணாமல் போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகரமாகவே காணப்பட்டது. நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஒருபோதும் சுயாதீனமாக செயற்படமாட்டார்கள்.

இவர்கள் புலம்பெயர் தமிழர்களின் விருப்பங்களுக்கு அமையவே தமது விசாரணைகளை மேற்கொள்வார்கள்.  அலுவலகத்தின் வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் விசாரணைகள் முழுமைபெற வேண்டும். என்ற கட்டாயம் காணப்படுவதன் காரணமாக இவர்கள் பொய்யான விசாரணைகளையும், சாட்சியங்களையும் உருவாக்க முடியும். இறுதி விசாரணை அறிக்கையினை இவர்கள் மேற்குலகத்தவரின் விருப்பங்களுக்கு அமையவே உருவாக்கி சர்வதேச மட்டத்தில் இலங்கையினை காட்டிக் கொடுத்து நாட்டை சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்வார்கள் என்பதை நல்லாட்சியின் தலைவர் மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.