இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

யாழில்.புறா பந்தயத்தில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசளிப்பு

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம்  ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) வின் ஏற்பாட்டில் குறித்த பந்தய போட்டி நடைபெற்றது. 

 
முதல் முறையாக 125 கிலோ மீற்றர் தூரத்துக்கான பந்தயம் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் உள்ள  விடுதியில் இடம்பெற்றது. 
 
யாழ்ப்பாணத்தின் பிரபல மருத்துவ நிபுணரும் நீண்ட காலமாகப் புறா ஆர்வலராக இருந்து வருபவருமான மருத்துவர் கே.சுரேஸ்குமார் தலைமை அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்குப் பரிசில்களை வழங்கி வைத்தார். 
 
குருநகரைச் சேர்ந்த எம்.அஜித் குமாரின் இரு புறாக்கள் ஒரு மணி 40 நிமிடங்களில் பந்தயத் தூரத்தைக் கடந்து முதல் பரிசைத் தட்டிச் சென்றன. 
 
சங்கானையைச் சேர்ந்தவரான ரி.நிதர்சனின் புறா மூன்றாம் இடத்தையும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.காந்தரூபனின் புறா நான்காவது இடத்தையும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த எஸ்.பிரியதர்ஸனின் புறா ஐந்தாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன. 
 
‘‘புறாப் பந்தயங்கள் உலகின் பல நாடுகளிலும் பல நூறு ஆண்டுகளாக நடக்கின்றன. அங்கெல்லாம் பல மில்லியன் டொலர் பரிசுகளை அள்ளிக்கொட்டும்  ஒரு விளையாட்டாக இது இருந்தாலும் அண்மையில்தான் இலங்கையில் பந்தயங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. 
 
கண்டியில் உள்ள புறா ஆர்வலர்கள் சேர்ந்து முதன் முதலில் புறாப் பந்தயத்தை இங்கு நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பல பகுதிகளிலும் இந்தப் பந்தயம் தற்போது நடைபெற்று வருகின்றது. 
 
வடக்கில் முதன் முதலில் நடத்தப்பட்ட பந்தயம் இதுதான்’’ என  கழகத்தைச் சேர்ந்த ரி.பி.அன்ரன் தெரிவித்தார்.மேலும்  முதல் தடவை என்பதால் குறிப்பிட்டளவு புறாக்களே பந்தயத்தில் ஈடுபட்டன என்றாலும் எதிர்காலத்தில் வடக்கு மாகாணம் முழுவதற்கும் இந்தப் பந்தயத்தை விரிவாக்கும் போது பெரும் எண்ணிக்கையான புறாக்கள் பந்தயத்தில் கலந்துகொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
அதேவேளை மருத்துவர் சுரேஸ்குமார். தெரிவிக்கையில்  ‘‘ மேற்கு நாடுகளில் இது ஒரு தொழில்முறைப் பந்தயமாக இருக்கிற போதும் அதில் ஈடுபடுவது இலகுவானதல்ல இந்த விளையாட்டைச் சரியாக ஆடவேண்டும் என்றால், அதை நேர்த்தியாகச் செய்யத் தெரிந்திருக்கவேண்டும். 
 
புறாக்களுடன் முழு ஈடுபாட்டுடன் அதிக நேரத்தைச் செலவிடவேண்டும். மற்றைய வேலைகளுக்கு மத்தியில் பகுதிநேரமாக பந்தயப் புறா வளர்ப்பிலும் ஈடுபடுவதென்பது சவாலானது. இப்போதுதான் பந்தயங்களை இங்கு ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதால், முதலில் மிக வேகமாகப் பறக்கும் புறாக்களை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து சிறந்த பரம்பரை வரிசையை உருவாக்குவதில் நீங்கள் அக்கறை காட்டவேண்டும். அப்போதுதான் சிறந்த பந்தயப் புறாக்களை யாழ்ப்பாணத்தில் உருவாக்க முடியும். 
 
வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் சிறந்த பரம்பரை வரிசையை உருவாக்குவதிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ள புறாவளர்ப்புக்காரர்கள் எல்லோரும் ஒற்றுமையோடு கவனம் செலுத்தவேண்டும். இப்போது வரைக்கும் அத்தகைய சிறந்த பரம்பரை வரிசை ஒன்று இலங்கையில் இல்லை. தமிழ் நாட்டில் புறாச் சேதுவிடம் அத்தகைய சிறந்த பரம்பரை வரிசை உண்டு என்று அறிகிறோம். அதுபோன்றதொரு நிலையை இங்கும் உருவாக்குவதில் முதலில் கவனம் செலுத்தப்படவேண்டும்’’ என தெரிவித்தார். 
 
அத்துடன் புறா வளர்ப்புத் தொடர்பில் உள்ள அறிவியல் விளக்கம் மற்றும் நுட்பங்கள் பற்றியும் நிகழ்வில் அவர் விளக்கினார்.  வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் புறாப் பந்தயக் கழகங்களை உருவாக்கி பந்தயங்களை நடத்த ஆர்வம் உள்ளவர்கள் பபுகயாவுடன் தொடர்புகொண்டால் ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கத் தயாராக தாம் தயாராக இருக்கின்றனர் என கழகத்தின் சார்பில்  அன்ரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers