இலங்கை பிரதான செய்திகள்

முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி

முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

காலை-09 மணி முதல் யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரது தயாரிப்பில் முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் உருவான கார்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.


அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கண்காட்சியில் “Jaffna style gokart”, “Solar powered baby car”, “pedal power car”, “Ultralight pickup” உள்ளிட்ட நான்கு வகையான கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியின் ஒரு கட்டமாக கார்களின் பவனியும் இடம்பெற்றது. குறித்த கார்களை சிறார்கள் எளிதாகச் செலுத்திப் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். குறித்த கண்காட்சி மற்றும் கார்களின் பவனியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்ததுடன் கார்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

மேற்படி கார்களைத் தயாரித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர்   விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் பேராசிரியராகக் கடமையாற்றி வரும் நிலையில் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் விற்கப்படும் பழைய பொருட்களைப் பயன்படுத்தி சுமார் ஒரு வருடம் இரண்டு மாதங்களாக நேரத்தைச் செலவழித்து எனது குழுவினருடன் இணைந்து இந்த நான்கு கார்களையும் தயாரித்துள்ளோம்.

எமக்கு நேரமும், ஆக்கம் செய்யக் கூடிய தகுதிகளுமிருக்கின்றன. நாம் அதனைச் சரியான வழியில் பயன்படுத்தும் போது எமது சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்ல வெளியீடுகளை நாம் வெளியிட முடியும்.

அனைத்துப் பொருட்களையும் நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். உதாரணமாக உணவுப் பொருட்களை நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இந்த நிலையை நாங்கள் மாற்ற வேண்டும்.

எங்களிடமுள்ள பொருட்களை வைத்தே நாங்கள் உள்ளூரிலேயே பொருட்களைத் தயாரிக்கக் கூடிய மதிநுட்பம் எங்களிடமிருக்கிறது. இதனை நாங்கள் உரியவாறு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் எங்களுடைய சமூதாயம் தனியே தேசிய வருமானத்தை ஈட்டக் கூடியதொரு நாடாக வளரும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையிருக்கிறது.

சீனாவிலிருந்து தற்போது நாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமாகவுள்ளது. உலகில் எங்கு சென்றாலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் காண முடிகிறது. இதனால் தான் தற்போதைய காலத்தில் உலகளாவிய ரீதியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகச் சீனா காணப்படுகின்றது. அதேபோன்று யாழ்ப்பாணத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

இவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமானதொன்று. அவ்வாறான அனுமதி இல்லாமல் நாங்கள் கார்களைத் தயாரிப்பது சட்டத்திற்கு முரணானது என்பதால் நாங்கள் சிறியளவிலேயே எமது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம் என்றார்.

உண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியதொன்று. அதுவும் தமிழர்கள் இவ்வாறான தயாரிப்புக்களில் ஈடுபடுவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயம் . ஆனால், அரசாங்கத்தின் அனுமதி இல்லாத காரணத்தால் வீதிகளில் குறித்த கார்களைச் செலுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். எம்மவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்போம்… வளத்தைப் பெருக்குவோம்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap