இலங்கை பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நினைவுத் தூபி – ஜனாதிபதியிடம் வலியுறுத்தி உள்ளேன் :

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவுதூபியினை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலையே இதனை தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

இறுதி யுத்தத்தின்போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உயிரிழந்த இந்த மக்கள் நினைவுகூர முடியாத நிலைமை பல வருடங்களாக நிலவி வந்தது. ஆனாலும் எமது நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து 2015 ஆம் ஆண்டு மே மாதம் முதல் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை நினைவேந்தல் செய்யக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதேபோன்றே கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகளும் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.

இவ்வாறு எமது அரசாங்கமானது நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதியினை வழங்கியுள்ளது. நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதில் தவறேதும் இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார்.

யுத்தத்தில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது அரசியல், சுயநல பேதங்கள் இன்றி பொதுவான எண்ணத்துடன் நடத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நாளில் அரசியல் பேதங்கள் இன்றி சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியமானதாகும். உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு முள்ளிவாய்க்காலில் நினைவுதூபி அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை கடந்த மூன்று வருடங்களாக வலியுறுத்தி வருகின்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த புதன்கிழமை சந்தித்து நினைவுதூபி அமைக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கான கடிதத்தினையும் கையளித்துள்ளேன்.

அதேபோன்றே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இரணைதீவில் மக்களை குடியேற்றவேண்டியதன் அவசியத்தை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தேன். அதற்கான சந்தர்ப்பம் தற்போது எட்டியுள்ளது.

அதேபோன்றே நினைவு தூபி அமைக்கும் விடயத்திலும் தொடர்ச்சியாக அக்கறை செலுத்துவேன்.
இந் நாளில் சகலரும் ஒன்றிணைந்து உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவோம். அரசியல் பேதங்களை மறந்து நாம் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது இன்றியமையாதது. என மேலும் தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.