இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

கடன்காரி (யுத்தமும் நுண்கடனும்) – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

எங்களுக்கு அயல் கிராமத்தில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். கணவர் யுத்தத்தில் இறந்துபோய்விட்டார். அவர் ஒரு பெட்டிக் கடைதான் நடாத்திக் கொண்டிருந்தார். என் சிறு வயது முதலே அவர் ஒரு பெட்டிக்கடையை துணையாக்கிக் கொண்டதை பார்த்திருக்கிறேன். இடம்பெயர்ந்தால் அந்தப் பெட்டிக்கடையும் அவருடன் இடம்பெயறும்.

அவர் எங்கு போய் அடைக்கலம் புகுந்துகொள்ளுகிறாரோ அங்கே அந்தப் பெட்டிக்கடையும் குடியேறும். அப்படியே இடம்பெயர்ந்து 2009 யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் தங்கள் பெட்டிக்கடையை திறந்து கொண்டார்கள். முள்வேலி முகாமிலேயே அப்படி ஒரு கடையை திறக்க முடியுமா என்று அந்த அம்மா முயன்றிருக்கிறார் என்பதைப் பார்த்தாலே அவரின் முயற்சி தெரியும்.

கிளிநொச்சி சந்தையிலிருந்து கொண்டு வரும் பொருட்களுக்கு சிறியளவிலான இலாபத்தை வைத்து விற்பனை செய்வார்.கிராமத்திலிருந்து கிளிநொச்சிக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க பஞ்சிப்படுபவர்களுக்கு அக் கடை ஒரு ஒத்தாசையாக இருந்தது. அந்தரத்துக்கு பொருட்களை வாங்கிக் கொள்ளும் ஒரு கடை. சமைத்துக் கொண்டிருக்கும்போது உப்பில்லை, புளியில்லை என்பவர்களுக்கும் பிஸ்கட், இனிப்பு வாங்க விரும்பும் சிறுவர்களுக்கும் டக்கென்று ஓடிப்போய் வாங்கிக்கொள்ளும் ஒரு சின்ன பூட்சிற்றி.

இதனால் அந்தக் கடை எப்போதும் நன்றாக ஓடிக்கொண்டே இருந்தது. இரவு ஒன்பது மணிவரை கடை திறந்திருக்கும். இனிப்பு வாங்கும் சிறுவர்கள், பீடி, சுருட்டு பற்றுபவர்கள் எல்லாம் உறங்கிய பிறகுதான் அந்தக் கடையும் உறங்கும். அந்தக் கடையுடன் காணியில் கிடைக்கும் வருமானங்களை வைத்துக்கொண்டு அந்த அம்மா சந்தோசமாக தான் இருந்தார். முதலாவது பெண் பிள்ளைக்கு திருமணமும் செய்து வைத்தார்.

ஒருநாள் அவர்களின் கடையின் முன்னால் பளபளக்கும் ஒரு மோட்டார் வண்டி நின்றது. அன்றைக்குத்தான் அவர்களுக்கு கஷ்டகாலம் தொடங்குகிறது என்பதை அந்த அம்மா நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். அவர்களின் கடைக்கு ஒரு நுண்கடன் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஒரு தம்பி வந்தார். நல்ல வெளுத்த சட்டை. டையும் கட்டிக் கொண்டு வந்தார். பாத்தால் புதிதாய் எடுபட்ட மாவட்ட அரசாங்க அதிபர் போல இருந்தார். எல்லாரும் அப்பிடித்தான் வெளிக்கிட்டு வருவாங்கள். நல்ல வசீகரமாய் கதையை தொடங்கினார். இப்படி கடையை நடாத்துவதைக்காட்டிலும் எம்மிடம் கடன் எடுத்துக்கொண்டால் கடையை பெருப்பிக்கலாம். வருமானம் கூடும். இப்படி எக்கச்சக்கம் ஆசைகளைக் காட்டி அந்த அம்மாவை எப்படியோ தங்கள் நிறுவன வாசலுக்கு இழுத்துச் சென்றுவிட்டார் அந்த நுண்கடன் நிதி நிறுவன தம்பி.

அதற்குப் பிறகு அவர்களின் வீட்டு வாசலில் பளபளப்பான மோட்டார் வண்டிகள் நிறையத் தொடங்கின. அந்த நதி நிறுவனத் தம்பி தனக்கு தெரிந்த நிதி நிறுவன நண்பர்களை எல்லாம் அழைத்து வந்தான். தம்பிமார் வந்த ராசி பெட்டிக் கடையும் வெகு நாளாக மூடியிருந்தது. அந்த அம்மாவின் மகள்கள் எல்லோரும் பெண்களுக்கான ஸ்கூட்டி மோட்டார் வண்டிகளிலேயே பயணம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் வீட்டில் இருப்பதை காட்டிலும் அதில் இருப்பதே அதிகமாய் போனது.

இப்போதெல்லாம் பின்னேரங்களிலும் அந்த அம்மாவுக்காக பளபளப்பான மோட்டார் வண்டிகள் வந்து காத்திருந்தன. அம்மா எத்தனையோ கிலோ மீற்றருக்கு நடந்து சென்று திரும்பிக் கொண்டிருப்பார். யாரிடமாவது பணம் கேட்பாராம். ஒரு மாதத்தில் தருகிறேன் என்று கேட்பாராம். பிறகு அவ்வளவு தான். எப்படித்தான் கொடுப்பது. வேறு வீதியை பயன்படுத்தி இன்னொரிடத்திற்குச் செல்வாராம். காலை எழுந்தவுடன் ஒரு பையை கையில் எடுத்துக் கொண்டு குடையையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு பக்கமாக சொல்லுவார்.

வீட்டில் மகள்களுக்கு ஸ்கூட்டியு்டன் நன்றாக பொழுது போனது. என்ன பொழுதுபட்டால் மாத்திரம் வெளியில் வர முடியாமல் நுண்கடன் நிறுவனப் பொடியள் வந்து நிற்பார்கள். அவர்களுக்கும் ஒன்றாக நின்று கதைத்து பம்பல் அடிக்கும் இடமாக அந்த வீடு மாறிவிட்டது. எத்தனை வீடுகளுக்கு போய் அலைந்து திரிந்து வந்திருப்பார்கள். ஒரு கரம்போட்டோ, செஸ் பலகையோ கொண்டு வந்தால் விளையாடி பொழுதை கழித்துவிட்டுச் செல்லலாம் என்று ஒருவன் சொல்லிக் கொண்டே மோட்டார் வண்டியில் படுத்திருந்தான்.
00

2009இக்கு முன்பெல்லாம் இந்த நிறுவனங்கள் ஒன்றும் இங்கே கிடையாது. இரண்டு மூன்று வங்கிகள் மாத்திரமே இருந்தன. பெரும்பாலும் அதிலை காசை வைப்பிலிடத்தான் போவோம். இப்போது நுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு கொஞ்சமும் குறையாமல் வங்கி நிறுவனங்களும் கடன் திட்டங்களை அடைவுத்திட்டங்களை வைத்திருக்கிறார்கள். ஆசிரியர் தொழிலுக்கு சேர்ந்து அடுத்த நாளே எனக்கு தொலைபேசியில் அழைப்பு. அட இப்பதான் டியூட்டி அசூம் பண்ணினம். அதுக்குள்ள எப்படி தெரியுமோ இவங்களுக்கு? கடன் அட்டையள் இருக்குது. கடன் சேவைகள் இருக்குது.. சேரின்ட போரச் சொல்லுவீங்களா?.. என்று ஒரு பெண் குரல். அம்மா தாயே ஆழை விடு என்று சொல்லாமல் தப்பித்துக் கொண்டேன்.

ஒரு இரண்டு வங்கிகள் இருந்த கிளிநொச்சியில இப்போது கடைகளைக் காட்டிலும் கடன் குடுக்கும் நிறுவனங்கள்தான் கூட. அதிலும் வரிசையாக நுண்கடன் நிதி நிறுவனங்கள். எங்க போற தெண்டு குழப்பமாய் இருக்கும். நன்றாக சிரித்த முகத்துடன் வரவேற்கும் பெண்கள். அந்த முகங்களை பார்த்தால் லோன் எடுக்கத்தான் சொல்லும். பிறகு காஷ் கலக்டீங் செய்ய யம முகத்துடன் பொடியள் வரும்போது தான் அந்த சிரிப்பு விளங்கும். ஆனால் இப்போது மாத்திரம் நல்லா கைகூப்பி கனிவாய் கூப்புடுவார்கள். அங்க வேலை செய்யிற பொடியளைப் பாத்தால் தவளையை விழுங்கிய சாரைப் பாம்புபோல அந்தரப் படுவார்கள். டாக்கட் அச்சீவ் பண்ணியாச்சா என்பேதே அவர்களின் அன்றாட பேச்சு. இதை கடன் எடுக்கப் போறர்களைப் பார்த்தும் ஒருவன் கேட்டானாம்.கனவெல்லாம் போனஸ்தான். இரண்டு போனஸ்களுக்கிடையே அவர்களின் வாழ்வு ஓடியது.
00

இன்னும் ஒன்றையும் இடையில் சொல்ல வேண்டும். நான் சொன்ன அந்தக் கிராமத்தில் வசித்த 35 வயது இளைஞர் ஒருவர் ஒரு கடையில்போய் சாப்பாட்டுக்கு அரிசி, மரக்கறி சாமான் கேட்டிருக்கிறார். முதல் நாளும் இப்பிடித்தான் வந்து கேட்டாராம். கடைக்காரன் குடுத்திருக்கிறார். இரண்டாம் முறையையும் வந்துகேட்டபோது கடைக்காரன் கடன் குடுக்க மறுத்துவிட்டாராம். அதுக்குப் பிறகு ஒரு இரண்டு நாள் இருக்கும் அந்த நபர் தூக்கில் தொங்கிவிட்டாராம். ஒரு கொலைக் குற்றவாளி போல கடைக்காரன் நடுங்கினான்.

அவர் பல வங்கிககளிலை கடன் எடுத்திருக்கிறார். அவர் கடன் எடுத்த வங்கிகளிலை ஒன்று, அண்மையில முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்த முகாமையாளரையும் ஊழியாரையும் தடைசெய்த வங்கியுமாம். இது எப்படி இருக்குது? எங்கடை மக்களுக்கு சுருக்காந்தடம் போட்டுக் கொண்டு இறந்துபோன உறவுகளுக்கு ஒரு தீபம் ஏற்றினது குற்றமாம். தீபாவளி, வாழ்த்து, பொங்கல் வாழ்த்து எல்லாம் சொல்லுவினம். தங்கம் தாறம், வைரம் தாறம் எக்கவுன்ட் திறக்க வாங்க எண்டிவினம். ஆனால் ஒரு துன்பத்தில் கண்ணீர் விடுவதற்கு சட்டதிட்டத்தில சிக்கல் எண்டுறினம்.
00

எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர் ஒருவர் மகனின் பிறந்தநாள் என்று அழைத்திருந்தார். வழமையாக அவரது வீடு வெளித்துப் போயிருக்கும். அன்றைக்கு மாத்திரம் வழமைக்கு மாறாக சுவர்களில் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. பிறந்தநாள் வாழ்த்து என்று மினுங்கும் எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அம்மம்மா வீடு, சித்தப்பா வீடு என்று திக்குத் திக்காய் உடைந்துபோன அவரது பிள்கைள் ஒன்றாக நின்றார்கள். அவரது அம்மா, சகோதரர்கள், அவர்களின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என்று கூட்டம் பெரிதாக இருந்தது. அன்று பிறந்த நாள் காணும் அவரது மகனும் மற்ற இரண்டு மகள்களும் ஒரு ஓரமாக நின்றார்கள். கேக் வெட்டும்போது அந்த 18 வயது மகனின் கண்கள் கலங்கக் தொடங்கின. அம்மாவின்டை நினைவு வந்திருச்சி.. என்றபடி அவனது அம்மம்மா கன்னங்களை வருடிக்கொண்டு முத்தமிட்டார்.

முன்பொருநாள் அந்த ஆசிரிய நண்பர் பாடசாலை சென்றுவிட்ட சமயத்தில் நுண்கடன் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தமது கடன் சேவைகளைப் பற்றி கூறியிருக்கிறார். நீங்கள் கடன் வாங்கி வட்டிக் கொடுக்கலாம் என்றும் அதன் மூலம் நல்ல இலாபம் வரும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு நிறுவனத்திடம் கடன் வாங்கிய அவர் பின்னர் பல நிறுவனங்களிடம் கடன் வாங்கத் தொடங்கினார். வட்டிக் கொடுத்து, ஏமாந்து கடன் கட்ட முடியாமல் திண்டாடினார். இந்த விடயம் பின்னர்தான் கணவருக்கு தெரியவந்தது. வீட்டில் மாலை ஆகினால் அவர்கள் கோயிலுக்கு பூசைக்கு வந்த அடியவர்கள் போல வந்துவிடுவார்கள்.

இதனால் குடும்பத்திலும் பிரச்சினை. நண்பரின் மனைவியோ மாலை நேரங்களில் எங்காவது பதுங்கிக்கொள்வாராம். பற்றையும் பழகியவர்கள் வீடுமாய் பதுங்கிய அவர் ஏலாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் கடவுச்சீட்டு எடுத்து, இரவோடு இரவாக கொழும்பு சென்று அரபு நாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுவிட்டாராம். போய் இரண்டு வருசமாச்சுது.. இன்னும் ஒரு போன்கூட இல்லை.. என்று அவர் சஞ்சலப்பட்டார். அம்மா இல்லாத ஏக்கத்தால் அவரது கடைசி மகளின் கண்கள் இருண்டிருந்தது. அம்மாவை நினைத்து ஏங்கும் அந்த விழிகளை பார்க்க என்னவோ செய்தது.

சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு மனைவி சென்ற பின்னரும் அந்த நுண்கடன் நிதித் தம்பிமார் வீட்டுக்கு வருவார்களாம். இப்படித்தான் ஒரு நாள் பாடசாலையில் விளையாட்டுப் போட்டியை முடித்துக் கொண்டு நண்பர் வீடு திரும்ப ஆறரை மணியாகியிருக்கிறது. வந்தால் வீட்டுப் படலையை திறந்து மோட்டார் சைக்கிளை முற்றித்தில் விட்டுவிட்டு நுண்கடன் நிதித் தம்பி வெளித் திண்ணையில் படுத்திருக்கிறார். வந்ததும் கடும் கோபத்துடன் பேசினாராம். ஓம் ஓம்… கோவிக்காதிங்கோ கொஞ்சம் இருங்கோ வாறன் என்று பவ்வியமாக கூறிட்டு ஒரு கயிறை எடுத்துவரச் சொல்லி மகனுக்குச் சொல்லியிருக்கிறார் நண்பர். விளக்கை கொளுத்திவிட்டு கயிறை எடுத்து ஆளை மரத்துடன் கட்ட துவங்கவும் நுண்கடன் நிதித் தம்பி காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடிவிட்டு இந்தப் பக்கம் இனி தலை வைக்க மாட்டேன் என்று ஓடினாராம்.
000

ஆரம்பத்தில் ஒரு அம்மாவைப் பற்றி கூறினேனே. ஒருநாள் அந்த அம்மா எங்கயோ காசுக்கு அலைந்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். வந்து பார்த்தால் பேரதிர்ச்சி. பிள்ளைகள் ஸ்கூட்டி இல்லாமல் பெட்டி படுக்கையுடன் நிற்கிறார்கள். அவர்களின் வீடு ஒரு நுண்கடன் நிதி நிறுவனமாக மாற்றப்பட்டிருந்தது. பெட்டிக்கடை பிரித்தெரியப்பட்டு பிரதான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. பெயர் பலகை போட்டு, அலுவலக வேலைகள் மும்மரமாக நடக்கிறது. நுண்கடன் பெறுவதற்கு வரிசையில் நிறைய நிறையப் பெண்கள் நிற்கிறினம். இதனைப் பார்த்த அந்த அம்மா அதிலேயே மயங்கி விழுந்தார். பின்னர் எழுந்திருக்கவே இல்லை.

யுத்தமும் – நுண்கடனும் – கடன்காரியும் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers