இலங்கை பிரதான செய்திகள்

மாந்தை மேற்கில் வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டினால் மீள் குடியேறிய மக்கள் பாதிப்பு-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடும் போக்கான செயற்பாடுகளினால் அப்பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ள மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். -மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (11) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.

இதன் போது மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான் ஆகியோரது இணைத்தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் பிரதி நிதியாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான சரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளே இணைத்தலைவர்களிடம் குறித்த பிரச்சினையை தெரிவித்தனர். -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெயர்ந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பல்வேறு கிராமங்களில் துன்ப துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

-இந்த நிலையில் தமது காணிகளில் அபிவிருத்தி நடவக்கைகளை மேற்கொண்டால் வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கடும் போக்குடன் நடந்து கொள்ளுவதோடு,காணிகளை துப்பரவு செய்தால் கைது செய்வோம் என அச்சுறுத்துகின்றனர் எனவும் தெரிவித்தனர். மேலும் தமது காணிகளில் வன வளத்துறையினர் தமக்குரியது என எல்லையிட்டுள்ளனர் எனவும் இதனால் தமது காணிகளில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

குறித்த குழு கூட்டத்தில் வீதி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, மருத்துவம், குடி நீர் , விவசாயம்,கால்நடை உற்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறித்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதி நிதிகள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டதோடு, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

எனினும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளும் தரப்பான ஐக்கிய தேசியக்கட்சியை பிரதி நிதி படுத்தும்,தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.