இலங்கை பிரதான செய்திகள்

சட்டத்தின் மூலமோ, அரசியல் திருத்தங்கள் மூலமோ மக்களின் மனங்களை வென்றுவிட முடியாது.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யுத்தத்தினாலும் சுனாமியினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தென்னிலங்கையிலிருந்து வந்த பௌத்த துறவிகள் உதவி செய்கின்றமை மிகுந்த மனமகிழ்ச்சியை தருகின்றது. இந்த நல்ல செயற்பாடு தொடர வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் நான் பிராத்திக்கின்றேன். 

என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் நேற்றையதினம் (27) மாலை பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

போதிராஜா பதனமே தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஓமலே சோபிததேரர் அவர்களினால் தாய்லாந்து, சிங்கபூர், மலேசிய நாட்டவர்களின் பங்களிப்புடன் முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சில்லு வண்டிகள், 1000 மாமரக் கண்டுகள், 100 பசுக் கன்றுகள், பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் என பல உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த இராஜகுரு அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபினி கேதீஸ்வரன், வடமாகாண ஆளுநரின் உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் உட்பட அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடன் நான் இங்கே வாழ்ந்து வருகின்றேன். அவர்களின் கலாச்சாரம் மனித நேயம், மனித தன்மை அவர்களின் துன்பங்கள் அனைத்தினையும் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றேன். அவர்களுக்கு தேவை கருணை, இரக்கம் பரிவு. இதனை விடுத்து சட்டத்தின் மூலமோ, அரசியல் திருத்தங்கள் மூலமோ அவர்களின் மனங்களை வென்றுவிட முடியாது. இதனை நாடு பூராகவும் தெளிவுபடுத்த வேண்டும்.

யுத்தம் நடைபெற்றது. இதில் இரு தரப்புக்கள் சண்டை பிடித்தன. யுத்தம் முடிந்தது. யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் கையில் இருக்க வேண்டியது துவக்கு அல்ல சமாதான ஒளி விளக்கு அதனை எடுத்துச் செல்ல வேண்டும். 

 இப்பகுதியில் கட்டிட ஒப்பந்த காரர்கள் இடைநடுவில் விட்டுச் செல்லும் கட்டிடங்களை உரிய காலப்பகுதியில் இராணுவத்தினர் கட்டி முடிக்கின்றனர்.

வீதிகளை போடுகின்றனர். எதிர்கால இச்சந்ததியினருக்காக ஆயிரக்கணக்கான மரங்களை நாட்டி வைத்துள்ளனர். பூரண படுத்தப்படாது காணப்படும் கஸ்டப்பட்ட மக்களின் வீடுகளை இராணுவம் கட்டி கொடுக்கின்றது. இரத்தம் கொடுக்கின்றது. தீவில் வாழுகின்ற மக்களுக்கான கடல்போக்குவரத்துகளை செய்கின்றது. இது போன்ற சேவை இன்னமும் விரிவுபட வேண்டும் என எதிர்பார்கின்றேன் என ஆளுநர் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.