இலங்கை பிரதான செய்திகள்

குழந்தைகளுக்கு அண்மைய சிறைக்கு ஆனந்த சுதாகரனை மாற்றவில்லையே…

நிறைவேற்றப்படாத ஜனாதிபதியின் உறுதிமொழிகளை நினைவுபடுத்தி கடிதம் எழுதினார் விக்கி…..

முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் சென்ற மாதம் 29ம் திகதியன்று மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்    யாழ் வருகையை முன்னிட்டு அவசர கடிதம் ஒன்றை இன்றைய திகதியிட்டு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவையின் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் நடக்கவிருப்பதை வரவேற்று சில பொதுவான பிரச்சினைகள் சம்பந்தமாக கடிதம் எழுதியுள்ளார்.

வடக்கில் குற்றவியல் நடவடிக்கைகள் திடீர் என்று அதிகரித்துள்ளன என்றும் வன்முறையையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கடமையில் இருக்கும் சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரையோ அல்லது இளைப்பாறிய சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரினது தலைமையிலோ வடமாகாண சபையின் அலுவலர்களையும் உள்ளடக்கி மேற்படி வன்முறை, போதைப் பொருள் விநியோகம், அவற்றின் பாவனை மற்றும் மண் கடத்தல் போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்ந்து அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உடனடி அறிக்கை ஒன்றைப் பெறுமாறு கேட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த போது கைதி ஆனந்த சுதாகரனுக்கு மன்னிப்பு வழங்க முடியாது இருப்பதைப்பற்றி ஜனாதிபதி  குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் அவரின் குழந்தைகள் வாழும் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு கைதியை மாற்றினால் தாய் இல்லாத குழந்தைகள் தமது தந்தையை பார்க்கச் சென்று கண்டுவர முடியும் என்று முதலமைச்சரால் கூறப்பட்டதை வரவேற்று அதற்குரிய நடவடிக்கையை உடனே எடுப்பதாக ஜனாதிபதி   உறுதி மொழி அளித்திருந்தார். அதனை நினைவுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர்  கோரியுள்ளார்.

அத்துடன் முதலமைச்சர் நிதியத்தின் நியதிச்சட்ட வரைவு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை என்றும் 5 வருடங்களாக அதுபற்றிக் கோரியும் இன்னமும் தாமதிப்பது எமது வடமாகாண பொருளாதார விருத்தியை அரசாங்கமானது விரும்பவில்லையோ என்று எண்ண வைக்கின்றது என்பதையும் ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.  வேறுபல கூட்டங்கள் இருப்பினும் அவற்றைத் தவணை போட்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மக்கள் சேவையின் போது இன்று பிரசன்னமாய் இருக்க இணங்கியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.