Home இலங்கை இராணுவம் வெளியேறி, பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வன்முறையைக் கட்டுப்படுத்தலாம்…

இராணுவம் வெளியேறி, பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வன்முறையைக் கட்டுப்படுத்தலாம்…

by admin


இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே,உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்த்தன அவர்களே,உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ ஜே.சீ.அளவதுவள அவர்களே,ஏனைய கௌரவ அமைச்சர்களே,கௌரவ இராஜாங்க அமைச்சர்களே,கௌரவ பிரதி அமைச்சர் அவர்களே,கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே,ஏனைய உயர் அதிகாரிகளே,சகோதர சகோதரிகளே!

மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்களின் கடமைகளுடன் தொடர்புபட்ட பிரச்சனைகள் மேலும் பிரதேசத்தின் தேவைப்பாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டம் என்பவற்றின் அடிப்படையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்பின் கீழ் கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் 8ஆவது வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற இத் தருணத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

வடபகுதியில் வாழுகின்ற மக்கள் ஏனைய பகுதிகளில் வாழுகின்றமக்களின் தேவைகளை விட அதிக அளவு தேவைகளையுடையவர்கள்.போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல தேவைகளை அவர்கள்கொண்டவர்களாகக்காணப்படுகின்றார்கள்.

இவை பற்றி விரிவாக இந்த மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்டத்தில் ஆராயப்பட வேண்டும்.நீண்டகால ஏக்கத்தில் தமக்கு விடிவு கிட்டாதாஎன எமது மக்கள் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன். இம் மக்களின் அத்தியாவசிய சேவைகள், அடிப்படைத் தேவைகள் பற்றி அறிந்திருந்தால்த்தான் அவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க முடியும். அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஒரு புறம், நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மறுபுறம், முதலீட்டுடன் சேர்ந்த பொருளாதார மேம்பாடு சம்பந்தமான பிரச்சினைகள் இன்னொரு புறம், மனிதாபிமான முறையில் தீர்க்கப்பட வேண்டிய வேறு சில பிரச்சினைகள் பிறிதொருபுறம் என்று எமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும். வெறுமனே அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நடவடிக்கைகளில் இறங்கினால் எமது மக்களின் பிரச்சினைகள் உண்மையாகத் தீர்க்கப்படா.

எமது பெருமதிப்பிற்குரிய கௌரவ உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்த்தன அவர்களை தனிப்பட்ட முறையில் நான் மிகவும் நேசிக்கின்றேன். மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதில் மிகவுந் துடிப்பாக இருப்பவர் அவர்.மனிதநேயம் மிக்கவர் அவர். அவரின் வருகை எம்மை மகிழ்விக்கின்றது. எமது மக்களின் நீண்டகாலத் தேவைகளைக் கண்டறிந்து உரிய நிவாரணங்களை அவர் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

எமது மக்களில் பலர் போரின் விளைவாக உயிர் இழப்புக்களையுச் சந்தித்தது ஒருபுறமிருக்க,பொருள் பண்டங்கள், வீடு வளவுகள் என அத்தனையையும் தொலைத்துவிட்டு நடைப்பிணங்களாக யுத்த வடுக்களை உடல்களிலும் உள்ளங்களிலும் சுமந்தவர்களாக சுற்றித்திரிவது எமக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது. இம் மக்களுக்கான இருப்பிட வசதிகள் அவர்களுக்கு ஏற்றவாறு செய்து தரப்பட வேண்டும். அவர்கள் வாழ்ந்த நிலங்கள் அவர்கள் தொழில் செய்கின்ற பூமிகள்,கடல் வளங்கள், விவசாய நிலங்கள் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இராணுவம் அவசியமானது. தமது சொந்த நாட்டை ஏனைய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் உள்நாட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இராணுவத்தின் பணி அவசியமானது. ஆனால் எமது பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உணவகங்களை நடத்துவதற்கும், காணிகளைத் தம் வசப்படுத்தி வைத்திருப்பதற்கும், குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவ வீரர்களின் சேவைகள் தேவைப்படமாட்டாது. போர் முடிந்து அடுத்த மே மாதம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது. படிப்படியாக இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் தந்திருப்பினும் அது நடைபெறாமலே இருக்கின்றது. மாறாக குற்றச் செயல்கள் இங்கு கூடியுள்ளன. அவற்றைத் தடுக்க எமக்கு அதிகாரங்கள் தரப்படவில்லை. பொலிசார் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இராணுவம் வெளியேறி பொலிஸ் அதிகாரம் எமக்குக் கையளிக்கப்பட்டால் இன்றைய வன்முறைக் கலாச்சாரத்தை வடக்கில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ஒரு பெரிய காரியமன்று. உள்ளூர் வாசிகளை ஆட்கொண்டு வெளியூர்வாசிகள் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ள எமது மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.

இந் நிலையில் வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை இராணுவத்திற்கு வழங்கி அதன் மூலம் எமது வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதென்பது இந் நாட்டின் அடிப்படைக்கொள்கைகளுக்கு முரணான ஒரு செயற்பாடாகவே அமையும். இதனால்த் தான் இப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தின் செறிவை குறைக்குமாறு நான் பல இடங்களிலும் எடுத்துரைத்து வருகின்றேன். நீதிபதிகள் போல் இராணுவத்தினரும் ஒதுக்குப் புறமாக இருந்து தமது கடமைகளை ஆற்ற வேண்டும், மக்கள் மனதைத் தம் வசப்படுத்த வேண்டும் என்ற கருத்தில் மக்களுடன் இராணுவத்தினரைச் சேர்ந்து வாழவிடுவது எதிர் காலத்தில் பல சங்கடங்களை ஏற்படுத்தும்.

இராணுவ அதிகாரிகள் மீதோ, போர் வீரர்கள் மீதோ எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும்எனக்கு இல்லை. இராணுவ உயர் அதிகாரிகளுடன் நான் சிறந்த உறவை வெளிப்படையாகக் கொண்டிருக்கின்றேன். ஆனால் கொள்கை அடிப்படையில் படையினர் முன்னெடுக்குஞ் செயற்பாடுகள் கபட நோக்கங்கள் கொண்டிருக்கக் கூடாது.எம்மை வாழ வைப்பதாகக் கூறிக் கொண்டு எம்மை எஞ்ஞான்றும் கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட வேண்டிய மக்களாக கணித்து வாழக் கூடாது.

நாம் வாழ்வது எமது பாரம்பரிய நிலங்களில். இங்கு இருக்கும் இயற்கை வளங்கள் யாவும் இங்குள்ள மக்களுக்கே சொந்தம். அவற்றை சூறையாடிச் செல்வதையோ தொடர்ந்து ஆக்கிரமிப்பில் வைத்து வருவதையோ எமது மக்கள் தொடர்ந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ணக் கூடாது. ஏதாவது எச்சில் துண்டுகளை எறிந்தால் அவர்கள் எம்வசம் இருப்பார்கள் என்றும் எண்ணக் கூடாது. எமது காணிகள் எமக்கு எந்தளவுக்கு முக்கியமோ எமது சுதந்திரமும் எமக்கு மிக முக்கியம். எம்முடன் கலந்தாலோசித்தே எமக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எம்மைப் பங்குதாரர்களாக ஏற்றே எமக்கான நன்மைகள் செய்து தரப்பட வேண்டும். எமக்கான அபிவிருத்திகளை எமக்கூடாகச் செய்ய முன் வாருங்கள். எமக்கூடாக எனும் போது நான் மாகாண நிர்வாகத்தையே சுட்டுகின்றேன். எம்மை உங்களுக்குச் சரிசமமானவர்கள் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டால்த்தான் பங்குதார வாழ்க்கை பயன் அளிக்கும். அந்நிலையில் மத்தியும் மாகாணமும் சேர்ந்து வேலை செய்யலாம். திட்டங்களையும் நிதியையும் உங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மாகாண அலுவலர்களைக் கொண்டு உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதை நாங்கள் கண்டிக்கின்றோம்.

இவற்றை எல்லாம் எமது கௌரவ அமைச்சர் அவர்கள் நன்கு புரிந்து கொண்டவர்என எண்ணுகின்றேன். எனவே எமது எதிர்பார்ப்புக்களை நன்கறிந்து எமது மனோ நிலைகளை நன்கு புரிந்து,நீங்கள் இப் பகுதி மக்கள் தொடர்பாக,அவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக இப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகஉயர் அதிகாரிகளுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து வெளிப்படையாகப்பேச்சுக்களை முன்னெடுங்கள். அவற்றின் அடிப்படையில் எமது பிராந்தியத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கள் சிதைவுறா வகையில்,பாரம்பரியங்கள் பழுதுறா வகையில், கலாசார சீரழிவுகள் நடைபெறா வகையில்உயரிய திட்டங்களைத் தீட்டி எம் மக்களுக்கு உதவ முன்வாருங்கள் என வினயமாக வேண்டி எனது உரையை இந்த அளவில் நிறைவு செய்கின்றேன்.

நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

‘உத்தியோகபூர்வப் பணி’ஜனாதிபதி மக்கள் சேவை – தேசிய நிகழ்ச்சித் திட்டம்
02.07.2018 – யாழ் மாவட்டம்
8வது வேலைத்திட்டம்
யாழ் வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம்
02.07.2018 திங்கட்;கிழமை காலை 9.00 மணியளவில்
வடமாகாண முதலமைச்சர் உரை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More