இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

லசந்தவின் கொலையை ராஜபக்ஸக்கள் மறந்திருக்கலாம், நாட்டு மக்கள் மறக்கவில்லை…

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…


சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்படும் முன்னர், அவர் கைது செய்யப்படவிருந்ததாக அவரது கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம், லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் வழங்கிய வாக்குமூலத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிசிர மெண்டிஸ், கடந்த மாதம் 11 ஆம் திகதி, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக விஜேதிலக்க தன்னை தொடர்புக்கொண்டு, லசந்த விக்ரமதுங்கவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டிருந்ததாக சிசிர மெண்டிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலத்தடி பதுங்குகுழி சம்பந்தமாக சன்டே லீடர் பத்திரிகையில் தகவல் வெளியிட்டமை காரணமாகவே லசந்த விக்ரமதுங்கவை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் லசந்த விக்ரமதுங்கவுக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதால், சிசிர மெண்டிஸ், தனது மூத்த அதிகாரி விடுத்திருந்த உத்தரவை பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் சிசிர மெண்டிஸை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட, அசோக விஜேதிலக்க, லசந்த விக்ரமதுங்கவை எப்படியாவது கைதுசெய்யுமாறு கூறியுள்ளார்.முறைப்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில்,லசந்த விக்ரமதுங்கவை எப்படி கைதுசெய்ய முடியும் என சிசிர மெண்டிஸ் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அசோக விஜேதிலக்க, இது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவு எனவும் இதனால், முறைப்பாடுகள் அவசியமில்லை, உடனடியாக கைதுசெய்யுமாறும் கூறியுள்ளார்.

இதற்கு அமைய லசந்த விக்ரமதுங்கவை கைதுசெய்ய தான் தயாரானதாகவும் அப்போது தன்னை தொடர்புக்கொண்ட அசோக விஜேதிலக்க, லசந்த விக்ரமதுங்கவை கைதுசெய்யாது திரும்பி வருமாறு அறிவித்ததால், தான் திரும்பி வந்து விட்டதாகவும் சிசிர மெண்டிஸ், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர், குறித்த சம்பவம் பற்றி, வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர், கோத்தபாய ராஜபக்சவிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச, “லசந்த விக்ரமதுங்க என்பவர் யார்” என பதிலளித்திருந்தார்.
லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர், கோத்தபாய ராஜபக்சவினர், அவரை மறந்திருக்கலாம், ஆனால் நாட்டு மக்கள் அதனை மறக்கவில்லை என சிங்கள பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

சட்டம், நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் பொலிஸ் சுதந்திரம் பற்றியும் ஜனநாயகம் குறித்தும் உபதேசம் நடந்தும் கோத்தபாயவினர், அன்று பொலிஸாரை தமது தேவைக்கு அமைய பயன்படுத்தினர்.அத்துடன் தற்போது தன்னை கைதுசெய்வதை தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடும் கோத்தபாய, அன்று தமக்கு எதிரான எந்த நபராக இருந்தாலும் முறைப்பாடுகள் இன்றி கூட கைதுசெய்தார்.

லசந்த விக்ரமதுங்க தனது பத்திரிகையில் வெளியிட்ட தகவலுக்கு அமைய அலரி மாளிகைக்குள் ஆடம்பரமான சொகுசான வசதிகளுடன் கூடிய நிலத்தடி பதுங்குகுழி நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்ததுடன் அவற்றின் புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தன.அரச பணத்தை செலவிட்டு, ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் இப்படியான நிர்மாணிப்புகள் பற்றிய தகவல்களை நாட்டுக்கு தெரியப்படுத்துவது ஊடகவியலாளர்களின் கடமை. எனினும் சட்டம் சீரழிந்து காணப்பட்ட ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அந்த கடமையானது உயிரை பறிக்கொடுக்கக் கூடிய பாரதூரமான குற்றம்.தாம் குற்றவாளிகள் இல்லை என தற்போது அடிக்கடி கூறி வரும் ராஜபக்சவினர் மீது லசந்த கொலை தொடர்பான குற்றத்தை ஒப்புவிக்க, சிசிர மெண்டிஸ் வழங்கிய வாக்குமூலம் மிகப் பெரிய சாட்சியம்.

அவுஸ்திரேலியாலில் வசிக்கும் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வியிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இதனடிப்படையில், லசந்த கொலை தொடர்பான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சிங்கள பத்திரிகை கூறியுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.