Home இலங்கை வடக்கில் சட்ட ரீதியான அமைச்சர்கள் இருவர். சட்டரீதியற்ற அமைச்சர்கள் நால்வர்….

வடக்கில் சட்ட ரீதியான அமைச்சர்கள் இருவர். சட்டரீதியற்ற அமைச்சர்கள் நால்வர்….

by admin


வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா? என்பது உறுதிப்படுத்தப்பட இயலாத நிலையில் அவர்கள் பேரவைக்கு பொறுப்புகூறும் உரிமை அற்றவர்கள். என வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சுகாதார அமைச்சரிடம் வாய்மொழி மூல கேள்விகளை எழுப்பியிருந்தார். அதன் போது குறுக்கிட்ட எதிர்கட்சி தலைவர் சி.தவராசா, சபையில் தாம் ஒரு ஒழுங்கு பிரச்சினையை எழுப்பவுள்ளதாக கூறியிருந்தார்.

மேலும் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கலாம். ஆனால் வேறு எவரும் பதிலளிக்க இயலாது. காரணம் சட்டரீதியாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மட்டுமே அமைச்சர்கள். இங்குள்ள மற்றய அமைச்சர்கள் யார்? என்பது உறுதிப்படாத நிலையில் ரவிகரனின் கேள்விக்கு முதலமைச்சர் தவிர்ந்த மற்றய யாரும் பதிலளிக்க இயலாது என கூறினார்.

இதனையடுத்து அந்த விடயத்தில் தலையிட்ட அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் வாய்மொழிமூல கேள்வியை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துடன், எதிர்கட்சி தலைவர் சி.தவராசா சபைக்கு கொண்டுவரவுள்ள விசேட கருத்து ஒன்றுக்கு அனுமதி வழங்கினார்.

அதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து கூறுகையில்,

முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனால் தான் பதவிநீக்கப்பட்டது தொடர்பாக, டெனிஸ்வரனால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவு கடந்த யூன் மாதம் 29ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது.

இவ் இடைக்காலத்தடை உத்தரவின் அடிப்படையில் டெனிஸ்வரன் தொடர்ந்து அமைச்சராக இருக்கின்றார் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.

அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபை ஒன்றிற்கு முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களிற்கு மேல் இருக்க முடியாது. ஆனால் இன்று வடக்கு மாகாண சபையில் ஆறு அமைச்சர்கள், செயற்படுகின்றார்கள்.

இவ்விடயம் சீர் செய்யப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் அமைச்சரவையைக் கூட்டவேண்டாமென்று பிரதம செயலாளரிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஆதலால் முதலில் இந்த மாகாண சபையில் யார் அமைச்சர்கள் என்று எமக்கு கௌரவ முதலமைச்சர் அவர்களால் ஒழுங்கு செய்யப்படும் வரை சபையில் அமைச்சர்களிற்குரிய ஆசனங்கள் ஒழுங்கு செய்யப்படக் கூடாதென அவைத் தலைவரை கேட்டுக் கொள்கின்றேன்.

அரசியலமைப்பின் பிரகாரம் சபையின் முக்கிய செயற் பாடுகளிலொன்று அமைச்சர்கள் சபைக்குக் கூட்டாகப் பொறுப்புடையவர்களாதலும் வகை கூறலும் ஆகும்.

இன்று அமைச்சர்களே யாரென்று தெரியாத சபையில் நாம் கூட்டுப் பொறுப்பினையும், கூட்டு வகை கூறலையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதற்கு நிரந்தரமான தீர்வொன்று உடனடியாகக் காணப்படல் வேண்டும். இன்றேல் இச்சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தல் அர்த்தமில்லாத ஓர் செயற்பாடு ஆகும் என்றார்.
00000000000000000000000000000000000000
அமைச்சர்கள் விடயத்தில் சட்ட நுணுக்கம் பேசும் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் ? தவநாதன் கேள்வி.
வடமாகாண அமைச்சர்சபை விடயத்தில் சட்டத்தரணிகளான மாகாணசபை உறுப்பினர்கள் சட்ட நுணுக்கங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இதே சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய நலன்களுக்காக என்றாவது நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா? பயன்படுத்தியிருந்தால் இன்றளவும் எங்களுடைய மக்கள் எவ்வளவு நலன்களை பெற்றிருப்பார்கள்? என வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் தெரிவித்திருந்தார்.

வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. ,தன்போதே மாகாணசபை உறுப்பினர் வி. தவநாதன் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாணசபை ஆளுங்கட்சிக்குள் இன்று உருவாகியிருக்கும் சகல குழப்பங்களுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசு கட்சியின் தலைவர்களே காரணம். குறிப்பாக அவர்களே ஆட்களை நியமனம் செய்துவிட்டு அவர்களே விமர்சனம் செய்வதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.

ஆயுதப் போராட்டத்தின் விளைவாக கிடைத்த சொற்ப வரப்பிரசாதங்களை கொண்ட வடமாகாண சபையையும் போட்டுடைத்த பெருமையும் அவர்களை சாரும். இன்று மாகாண அமைச்சர்கள் விடயத்தில் பல சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பேசுகிறார்கள். அதேசமயம் இன்று வடக்கில் மக்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது.

இன்று இந்த அவையில் அமைச்சர்கள் விடயம் குறித்து சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பேசும் சட்டத்தரணிகள் மக்களுடைய நலன்கள் சார்ந்து எதாவது பேசியிருக்கிறீர்களா? மக்களுடைய நலன்களுக்காக இவ்வாறு பேசியிருந்தால், மக்களுடைய நலன்களுக்காக இவ்வாறு செயற்பட்டிருந்தால் இன்று மக்கள் பல நன்மைகளை பெற்றிருப்பார்கள்.

இந்த அமைச்சர்கள் விடயம் தொடர்பாக பேசி ஒரு தீர்வினை பெறாமல் சபையை நடாத்தாதீர்கள். ஏற்கனவே பல லட்சம் பணத்தை செலவிட்டாயிற்று இனியும் அதனை செய்யாதீர்கள் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More