இலங்கை பிரதான செய்திகள்

வவுனியா குழாய்நீர் வழங்கல் 5 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும் – ஹக்கீம்

நீர் வழங்கல் அமைச்சை நான் பொறுப்பேற்கும்போது வவுனியாவில் 5 சதவீதத்துக்கும் குறைவான மக்களே குழாய்நீரை பெற்றுக்கொண்டிருந்தனர். எனது பதவிக்காலத்துக்குள்; அவற்றை 30 சதவீதமாக அதிகரிப்பதற்கு பல்வேறு வகையான குடிநீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வவுனியா, மாங்குளம் பாலர் பாடசாலைக்கு சுற்று மதில் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப வேலைகளை இன்று (16) ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாவற்குளம், ஆணைவிழுந்தான், பெரிய உலுக்குளம், ஈச்சங்குளம், நன்டிமித்ரகம, பொகஸ்வௌ, கற்குளம் போன்ற இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைச்சர் திறந்துவைத்தார். அத்துடன் சின்னசிப்பிக்குளம் பிரதேசத்தில் குழாய்கிணறு நிர்மாண வேலைகள் ஆரம்பித்து வைத்ததுடன், சூடுவெந்த பிளவு, ராஜேந்திரகுளம் போன்ற இடங்களில் குழாய் பதிக்கும் வேலைத்திட்டத்துடன் பட்டானிச்சூரில் நீர் வழங்கல் இணைப்புகளையும் ஆரம்பித்துவைத்தார்.

இதற்கு உதவியாக காலநிலை பாதிப்புக்கு ஈடுகொடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் உட்கட்டுமான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

வவுனியாவில் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள மாங்குளம், நேரியகுளம், பாவற்குளம், செட்டிக்குளம், மெனிக்பாம் உள்ளிட்ட 15 கிராமங்களில் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிலான நீர் வழங்கல் திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.

இலங்கையில் வரலாற்றில் முதல்முறையாக குடிநீருக்காக ஒரு வாவியை அமைக்கும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். பேராறுக்கு குறுக்காக ஒரு வாவியை அமைக்கும் இந்த திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இந்த வேலைத்திட்டத்தை பொறுப்பேற்ற கொந்துராத்துக்காரர் தரம்குறைந்த குழாய்களை பயன்படுத்திய காரணத்தினால் அவருக்கெதிரான சட்டநடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறோம். இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை அவசரமாக முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

மல்வத்து ஓயாவுக்கு குறுக்காக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தை வைத்து பாரிய வவுனியா குடிநீர் வழங்கல் திட்டமொன்றை கொம்பிளாண்ட் என்ற சீன நிறுவனத்தின் உதவியில் முன்னெடுக்கவுள்ளோம். இதுதவிர, நிலத்தடி நீரை பயன்படுத்தி சிறிய குடிநீர் திட்டங்கள் பலவற்றையும் திறந்துவைத்துள்ளோம்.

ஆசிய அபிவிருத்தி வங்கி – 5 திட்டத்தின்மூலம் மன்னாரில் பாரிய குடிநீர் வழங்கல் திட்டமொன்றை கடந்த வருடம் பிரதமரை அழைத்துவந்து திறந்துவைத்தோம். பாரிய மன்னார் குடிநீர் வழங்கல் திட்டத்தை செயற்படுத்திவரும் சீன நிறுவனம் இந்த வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தி வருகிறது.

இந்த வேலைத்திட்டத்தை எனது பதவிக்காலத்துக்குள் செய்துமுடிக்க இயலாது போகலாம் என்ற காரணத்தினால் முதலில் முசலி பிரதேசத்தில் நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தயாராகவுள்ளோம்.

முசலி பிரதேசத்தின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதற்கு வியாயடி குளத்திலிருந்து நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 4750 மில்லியன் ரூபா செலவிலான நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் முசலி பிரதேச மக்கள் அனைவருக்கும் குழாய்மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

மன்னார் மடுமாதா ஆலயத்துக்கு இலட்சக்கணக்கான கிறிஸ்தவ பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். இங்குள்ள பாசிபடிந்த குளத்து நீரை பயன்படுத்தமுடியாத நிலை காணப்படுகிறது. இதனை நான் நேரில் பார்வையிட்டபின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, குடிநீர் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு அவர்களிடம் வாக்குறுதி அளித்துவிட்டு வந்திருக்கிறேன்.

மடு நீர் வழங்கல் திட்டம் தொடர்பாக நான் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறிய பின், அடுத்த வாரம் கூட்டம் ஒன்றை கூட்டுமாறு கோரியிருக்கிறார். திறைசேரி அதிகாரிகளையும் அழைத்துவந்து, இந்த வருட வரவு, செலவுத்திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருக்கிறேன்.

கடந்த 10 வருடங்களாக வரவு, செலவுத் திட்டத்தில் நீர் வழங்கல் திட்டங்களுக்காக நேரடியாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. வேறு வங்கிகளிடம் கடன் பெற்றுத்தான் சகல நீர் வழங்கல் திட்டங்களையும் செயற்படுத்தி வருகிறோம். இந்த கடனை திருப்பிச் செலுத்துவதில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.

எனினும், மடு நீர் வழங்கல் திட்டத்துக்கு 600 மில்லியன் ரூபாவை நேரடியாக வரவு, செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கித் தருமாறு கோரியிருக்கிறேன். அது கிடைத்தவுடன் உடனடியாக மடுவுக்கு நீர்வழங்கல் திட்டம் செய்துகொடுக்கப்படும்.

உலக வங்கி 7 மாவட்டங்களை உள்ளடக்கி அமுல்படுத்தவுள்ள நீர் வழங்கல் திட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி உள்ளடக்கப்படுவதால் அவற்றுக்கு வேறு திட்டங்களை நாங்கள் செய்யவுள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், முத்தலிப் பாவா பாருக், பிரதேச சபை உறுப்பினர் மாஹிர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட மாகாண பொது முகாமையாளர் பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers