இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

நோய்க் கிருமியில் இனமாமோ? – பசீர் சேகுதாவுத்…


1970 ஆம் ஆண்டைய நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் மூன்று பிரதான கட்சிகளைச் சேர்ந்த மூன்று முக்கிய அரசியல்வாதிகள் போட்டியிட்டனர்.அத்தோடு மட்டக்களப்பின் பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் சுயேச்சையாகக் களமிறங்கியிருந்தார்.தமிழரசுக்கட்சி சார்பாக மட்டு நகரைச் சேர்ந்த இராசதுரையும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கொழும்பைச் சேர்ந்த மாக்கான் மாக்காரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏறாவூரைச் சேர்ந்த MACA றகுமானும், சுயேச்சை வேட்பாளராக மட்டு நகர் இராஜன் செல்வநாயகமும் போட்டியிட்டனர். மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியாகும்.இந்த நான்கு பிரதான வேட்பாளர்களில் இருவர்தான் வெல்வர் இருவர் தோற்றே ஆகவேண்டும். இத்தொகுதியில் காத்தான்குடி, ஏறாவூர் என்ற இரண்டு பெரிய முஸ்லிம் கிராமங்கள் மட்டுமே உள்ளடங்கியிருந்தன.தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும், முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் கிடைக்கும் வகையிலேயே இவ்விரட்டை அங்கத்தவர் தொகுதி உருவாக்கப்பட்டது. இதில் உள்ள ஒரு சுருக்கு என்னவென்றால் காத்தான்குடி முஸ்லிம்களில் பெரும்பான்மையினரும், ஏறாவூர் முஸ்லிம்களில் பெரும்பான்மையினரும் ஒன்றிணைந்து ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களித்தால் மாத்திரமே முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் அல்லாதுவிட்டால் இரண்டு பிரதிநிதித்துவங்களும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இரண்டு தமிழர்களுக்கே சென்றடையும்.

70′ தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் இராசதுரைக்கு வாக்களித்து அவரை மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியின் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்தனர். காத்தான்குடி மக்கள் மிகப் பெரும்பான்மையாக மாக்கான் மாக்காருக்கு வாக்களித்த அதேவேளை, மிகப் பெரும்பான்மையான ஏறாவூர் மக்கள் ஏறாவூராரான றகுமானுக்கு வாக்களித்திருந்தனர். இரு ஊர்களும் பிரிந்து நின்று வாக்களித்தமையால் ரகுமானும், மாக்காரும் தோல்வியடைந்து முஸ்லிம் பிரதிதிதித்துவம் இல்லாமலானது. வெறும் 11000 வாக்குகள் பெற்ற இராஜன் செல்வநாயகம் இரண்டாவது தமிழர் பிரதிநிதியானார். பின்னர் இராஜன் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மொழுமொழுப்பான நடுத்தர வயது நாயகியின் கையைப் பற்றி ஆளுங்கட்சி அங்கத்தவரானார்.இந்நிலமையினால் மட்டு தமிழ் மக்களுக்கு உரிமைக்காகக் குரல் கொடுக்க சொல்லின் செல்வரும், அபிவிருத்திக்காகச் செயல்பட செயல் வீரரும் கிடைத்தனர். ஆனால் மட்டக்களப்பு முஸ்லிம்களுக்கு அவர்களது தூர நோக்கற்ற அரசியல் முடிவினால் குரலோ செயலோ ஏதுமற்றுப் போனது.

காத்தான்குடி தமது ஊர் மகனுக்கு வாக்களிக்கவில்லையே என்ற ஆதங்கமும், மனவருத்தமும் ஏறாவூர் மக்களுக்கு இருந்தது. அன்று ஏறாவூர் தேர்தல் களத்தில் நின்ற சண்டியர்கள் பலி தீர்க்க முடிவெடுத்தனர். தமது வேட்பாளரின் கட்சி ஆளுங்கட்சி ஆகிவிட்டது. காத்தான்குடி ஆதரவு கொடுத்த மாக்காரின் கட்சி எதிர்க்கட்சி ஆகிவிட்டது என்று தைரியமும் அடைந்தனர். எனவே, தேர்தல் முடிந்த கையோடு ஏறாவூரில் அன்று இருந்த 99 வீதமான காத்தான்குடி முதலாளிகளுக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளையும் தீ வைத்துக் கொழுத்தி நாசமாக்கினர்.இன்று ஏறாவூர் நகர சபை அமைந்துள்ள வளவின் ஒரு பகுதியில் காத்தான்குடியைச் சேர்ந்த ‘வழுக்கல்’ முதலாளியின் பெரிய கடையும் கொழுத்தப்பட்ட கடைகளில் ஒன்றாகும்.அவர்களின் ஆண் குடும்ப உறுப்பினர் யாவருக்கும் பிறப்பிலேயே தலையில் முடியில்லை என்பதால் இப்பட்டப் பெயர் உருவானது, இயற்பெயர் எனக்கு நினைவில்லை.

இக்கடையின் சாம்பர் மேட்டில் துளாவி நெருப்பின் வலிமைக்கு ஈடுகொடுத்து தப்பித்த சில்லறைக் காசு சேகரிப்பு உண்டியலில் இருந்த பணத்தை பத்து வயது விளையாட்டுச் சிறுவர்களான நானும் நண்பர் யூசுப்பும்,பின்னாளைய தோழர் லத்தீபும் எடுத்து பங்கிட்டதை இன்றும் குற்றமாக உணர்கிறேன். நாங்கள் அதிகாலை வேளை அந்த உண்டியலில் இருந்து சில்லறைகளை எடுத்த போது அவை சூடு தணியாதிருந்ததை நினைக்கும் போது இன்றும் என் நெஞ்சு சுடுகிறது.

1971 ஆம் ஆண்டு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் அமைந்திருந்த வெற்று வளவில் அமைக்கப்பட்ட மேடையில் கல்முனைத் தொகுதி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் M.C அஹமட் தமிழர்களுக்கு எதிராக ஒரு உப்புச் சப்பற்ற உரையை நிகழ்த்தினார். இவரது அவ்வுரைக்கு அன்றைய காலத்தில் கல்முனையில் இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் முரண்பாட்டு நிகழ்வுகள் காரணமாக இருந்தன. அதை ஏற்றி வந்து எதுக்கு இங்கு கொட்டினார் என்பது தெரியவில்லை.

இந்தக் கூட்டத்தில் கணிசமான தமிழர்களும் நின்றிருந்தனர், அஹமதின் உரையில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் வந்த போது அவ்விடத்திலேயே இந்த தமிழர்கள் ‘ கூய்’ போட்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அடுத்த நாள் செங்கலடி சந்தியை அடைந்த ஏறாவூரைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் அனைவரும் தமிழ் சண்டியர்களால் நையப் புடைக்கப்பட்டனர். பன்குடாவெளி சண்டியர்கள் முஸ்லிம் விவசாயிகளுக்கும் கூலிகளுக்கும் எதிராக அதிக வன்முறையில் ஈடுபட்டனர். இரத்தம் சொட்டச் சொட்ட வந்த ஏறாவூர் முஸ்லிம்களைக் கண்ட ஊர் சண்டியர்கள் ஊருக்குள் தொழில் நிமித்தம் வந்த ஏழைத் தமிழர்கள் பலரைத் தாக்கிக் காயப்படுத்தினர். இவற்றைத் தொடர்ந்து ஏறாவூர் விவசாயிகளின் வயல் காணிகள் அமைந்திருந்த – தமிழ் மக்கள் செறிந்து வாழும் அனைத்து இடங்களிலும் கலவரம் பரவியது. அது அறுவடைக் காலமாகையால் அநேக சூட்டுக் குவியல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.இக்கலவரம் ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கவில்லை.அப்பகுதி தமிழ் முஸ்லிம் அரசியல் மற்றும் குடிமைச் சமூகத் தலைவர்கள் ஒன்றுகூடிப் பேசி சமரசத்தை ஏற்படுத்தினர். அன்றைய உற்பத்திப் பொருளாதார முறையில் இரண்டு சமூகங்களும் ஒன்றில் ஒன்று தங்கியிருந்தமையால் இவர்களால் நீண்ட காலம் பிரிந்திருக்கவும் முடியாது.

ஏறாவூரில் நடந்த கடை எரிப்பில் பாதிப்படைந்த காத்தான்குடி முதலாளிகள், கலவரத்தின் போது மட்டக்களப்பு வாவியினூடாக வந்து தமிழ் சண்டியர்களுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்ததாக ஏறாவூரில் அன்று கதை பரவியிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏனைய கிழக்குப் பகுதிகளிலும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழிடங்கள் மற்றும் தொழிலிடங்களில் இவ்வாறான சிறு சிறு அசம்பாவிதங்கள் நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இடம்பெற்று வந்தன. அதேபோல் முஸ்லிம் ஊர்களுக்கிடையில் சிறு சிறு முரண்பாடுகளும் நிலவி வந்தன.

கிழக்கில் அன்று தமிழர்களும் முஸ்லிம்களும் பாரம்பரிய விவசாயச் செய்கையைப் பிரதானமான வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். இரண்டு சமூகத்தவரின் வயல் காணிகளும் அருகருகே அமைந்திருந்தபடியால் உறவும் முரணும் மாறி மாறி நிகழ்ந்தவண்ணமிருந்தன. தமிழரின் வயல் விதைப்பின் போது அருகில் வயல் செய்து வந்த முஸ்லிம் விவசாயி கூலி பெறாமல் விதைப்பில் பங்கு கொண்டார், இவ்வாறே முஸ்லிமின் வயலில் தமிழ் விவசாயி இலவசமாக வேலை செய்தார். அதே நேரம், விதைப்புக் காலத்தில் பரஸ்பரம் உதவியவர்கள் வயலுக்கு நீர் பாய்ச்சும் காலத்தில் தனக்கு முந்தி- இல்லை எனக்கு முதலில் என்று முட்டி மோதிக் கொண்டனர். இதற்கு கிழக்கில் விவசாயம் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை அற்றிருந்ததும், குளங்களை அரசு சரியாகப் பராமரிக்காமையினால் நீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதும் காரணங்களாயிருந்தன.

இவ்வாறே இரு தரப்புகளும்,இவர்களின் சந்ததிகளும் நூறாண்டுகளாக வாழ்க்கையை உறவும் முரணும் கலந்துதான் கடந்து வந்திருக்கின்றன.முஸ்லிம் ஊர்களுக்கிடையில் நிலவுகிற தன் முனைப்புக் குழுவாத முரண்பாடுகள் சௌகரிகமான ஊர்த் தனி நபர் அரசியல் வாய்ப்புக்காகவும், ஏய்ப்புக்காகவும் இன்னும் நடைமுறையில் உள்ளது.

மேற்சொன்னவாறு வடிவமைக்கப்பட்டிருந்த வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்ட தமிழ் இளைஞர்களையே 80 களிலும், 90 களிலும் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் உள்வாங்கின.இவ்வாறான முஸ்லிம் இளைஞர்களே 80 களின் ஆரம்பத்தில் முஸ்லிம் அடையாள அரசியல் இயக்கத்திலும் உள்வாங்கப்பட்டனர். இதனாலேதான், கிழக்கில் தமிழ் முஸ்லிம் சகவாழ்வு சகதியாகிப் போய் இன்று வரை அதில் இருந்து மீள முடியாது தவிக்கவேண்டி ஏற்பட்டது.இது மாத்திரமின்றி,தமிழ் முஸ்லிம் விரோதம் இன்றைய சிறுபான்மை அரசியலில் – கட்சிகள் மற்றும் தனி அரசியல்வாதிகளின் வெற்றிக் கனியை இலகுவாகப் பறிக்கும் கொழுகம்பாக, இன்று வரை முறித்தெறியப்பட முடியாமல் நிமிர்ந்து நிற்கிறது.கிழக்கின் இந்த நிலைமை 90 இல் இருந்து வடக்கிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கி பேரிடர்களை விளைவித்துவிட்டது.

முஸ்லிம் ஊர்களுக்கிடையிலான பேதமும் முரணும் முஸ்லிம்களின் உரிமை அரசியலில் ஏற்படுத்திய அழிச்சாட்டியம் சொல்லுந்தரமன்று. 1989 ஆம் ஆண்டைய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் மட்டக்களப்பில் கட்சிக்கு உறுப்புரிமை கிடைத்தால் காத்தான்குடிக்கும், ஏறாவூருக்கும், ஒட்டமாவடிக்கும் இவ்விரண்டு வருடங்களாகப் பிரித்துக் கொடுக்கப்படும் என்று மேடைகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டமை மூன்று ஊர்களுக்குமிடையில் நிலவிய பேதத்தையும் முரணையும் வெல்வதற்கான தந்திரமன்றி வேறென்ன? இவ்விடத்தில், இப்பதிவின் ஆரம்பப் பந்திகளில் குறிப்பிட்ட ஏறாவூர் காத்தான்குடி முரண்பாட்டை நினைவிற்கொள்ள வேண்டுகிறேன்.

முஸ்லிம்களின் தனித்துவக் கட்சிக்கு முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறையில் இருந்து அஷ்ரஃபுக்குப் பிறகு ஒரு தலைவரைப் பெற முடியாமைக்கு அங்குள்ள ஊர் பேதமும், முரணுமே காரணமாகும். அஷ்ரஃப் கூட- தான் சம்மாந்துறையில் பிறந்தவன் கல்முனையில் வளர்ந்து வாழ்ந்தவன் என்று பேசவும், ஒலுவிலில் வீடு கட்டுவதற்கான கட்டாயத்தை ஏற்படுத்தியதும் முஸ்லிம்களுக்குள் இருக்கும் இந்த ஊர்வாதப் போக்கேயாகும்.

திருமலை மாவட்டத்தில் கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத் கிண்ணியாவில் மூதூரை விட மிக அதிகமான முஸ்லிம் வாக்குகள் இருந்தும் அவரது தொகுதிக்கு கிண்ணியாத் தொகுதி என்று பெயர் வைக்காமல் மூதூர் தொகுதி என்று பெயர் வைத்ததும், அவரை மூதூர் மஜீத் என்று அழைத்ததும் ஊர்வாதம் தனது அரசியல் வாய்ப்பை அழித்துவிடக் கூடாது என்பதற்காக அல்லவா?

தமிழ் முஸ்லிம் உறவு கட்டி எழுப்பப்படாமல் வடகிழக்குக்கு விடுதலையே கிடையாது என்பதை நான் நம்புகிறேன். கிழக்கில் முஸ்லிம்களுக்குள் உள்ள ஊர்வாதம் ஒற்றுமை எனும் கயிற்றை நறுக்கிக் கொண்டிருந்தால் நமது பேரர்களுக்குத்தானும் உரிமை அரசியலில் பேரம் பேசும் திறன் கை கூடாது என்பதையும் உறுதிபட நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த நீண்ட கட்டுரையை எனது அனுபவத்தின் மனப்பதிவுகளைக் கொண்டு வரைந்திருக்கிறேன்.

தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப சிலரும் முஸ்லிம் ஊர் பேதத்தைக் களையச் சிலரும் தியாகத்துடன் செயல்பட முன்வந்தால் மட்டுமே இக்கட்டுரை பயனுறும்.

ஏறாவூர் கவிஞர் தமிழ் முஸ்லிம் கலவரங்களைக் கண்டு எழுதிய ” நோய்க்கிருமியில் சாதியாமோ? ” என்ற கவிதையை நினைவு கூறுகிறேன். இக்கவிதை எங்கும் வெளியிடப்படவில்லை.அவரது கையெழுத்தில் இக்கவிதை என்னிடமிருந்தது. அதனை கவிஞர் சாந்தி முகைதீன் கிட்டத்தட்ட ‘களவெடுத்த’ பாவனையில் கொண்டு சென்றுவிட்டார் பல முறை கேட்டும் திருப்பித் தரவில்லை.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers