இலங்கை பிரதான செய்திகள்

“மகாவலி விடயத்தில் எம்மிடம் நெகிழ்வு தன்மை இல்லை”


மகாவலி அதிகாரசபை ஊடாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எந்த நெகிழ்வு தன்மையும் இல்லாமல் அன்றும் பேசியது. இனிமேலும் அப்படியே பேசும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மகாவலிக்கு எதிராக நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

மகாவலி அதிகாரசபை எமது நிலங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதும், குடியேற்ற முயற்சிப்பதும் புதிய விடயமல்ல. அது மிக நீண்டகாலத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட முயற்சியாகும்.  அமைச்சர் காமினி திஸநாயக்க காலத்தில் எங்களுடைய நிலங்களில் 40 ஆயிரம் சிங்கள மக்களை 1 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் குடியேற்றுவதற்கு அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் தந்தை செல்வ நாயகத்தின் கடுமையான எதிர்பினால் அது 3 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சினைக்காக ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் நெகிழ்வு தன்மை இல்லாமல் பேசியிருக்கிறோம். இனிமேலும் அவ்வாறே பேசுவோம்.

தந்தை செல்வ நாயகம் அரசுடன் செய்த உடன்படிக்கைகளின் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களில் மக்களை குடியேற்றுவதாக இருந்தால் அது அந்த மாகாணங்களை சேர்ந்த மக்களை முதலில் குடியேற்றவேண்டும்.  பின்னர் குடியேற்றப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தமிழ் மக்களை குடியேற்றவேண்டும். அதுவும் இல்லாவிட்டால் வேறு மாகாணங்களில் இருக்கும் தமிழ் மக்களை குடியேற்றவேண்டும். என்பது நியதியாக இருந்தது.

ஆனால் இன்று அந்த நியதிகள் இல்லை. எமது மக்களுடைய சனத்தொகை போதாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி எங்களுடைய நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப் படுகின்றார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக மயிலிட்டியில் ஜனாதிபதிக்கு முன்பாகவும், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதி செயலணியில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் காரசாரமாக பேசியுள்ளார்கள்.

இந்நிலையில் மகாவலி அதிகாரசபையின் தலைவரை அழைத்து பேசியபோது தாங்கள் அவ்வாறு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கவில்லை. என கூறியுள்ளார். இந்நிலையில் நாங்களும் மக்களும் கூறுவது பொய்யா? அல்லது மகாவலி அதிகாரசபையின் தலைவர் கூறுவது பொய்யா? என்பதை ஜனாதிபதி நேரில் வந்து பார்த்து தெளிவுபடுத்துவதாக கூறியிருக்கின்றார். அதனை அவர் நிச்சயமாக பார்க்கவேண்டும்.  எங்களுடைய மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானவை. இந்த நிலத்திற்காகவே பல தியாகங்களை செய்திருக்கிறோம். பல ஆயிரக்கணக்கான உயிர் தியாகங்களை செய்திருக்கிறோம். இரத்தம் சிந்தியுள்ளோம்.

எனவே நான் இந்த இடத்தில் திட்டவட்டமாக ஜனாதிபதிக்கும், அரசுக்கும் கூறுவது ஒன்றுதான் மகாவலி நீர் எமக்கு தேவையில்லை. மகாவலி அதிகாரசபையினால் ஆக்கிரமிக்கப்பட்ட எங்களுடைய காணிகள்  எங்கள் மக்களுக்கு மீளவும் கொடுக்கப்படவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.