இலங்கை பிரதான செய்திகள்

சூடு, சுரணை வெட்கம், இருந்தால், சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் –

சித்தர், செல்வத்திற்கு சுரேஷ் சவால் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

சமஸ்டி என்றால் என்ன என்று தெரியுமா? என கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக சூடு, சுரணை இருந்தால் புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம். என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார். யாழ்.நீர்வேலியில் அமைந்துள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,  தமிழ் மக்கள் சமஸ்டியை கோரவில்லை. 13ஆம் திருத்தில் மேலதிகமாக சில விடயங்களை செய்தாலே போதும் என என்ற தொனியில் சுமந்திரன் காலியில் பேசியுள்ளார்.

இது இவர் இப்போது கூறிய கருத்தில்லை. ஏற்கனவே ஒருமுறை ‘புதிய அரசியலமைப்பு சிங்கள கட்சிகளது ஒப்புதலுடனேயே வருகின்றது. எனவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் முழுமையாக இருக்காது ‘ என கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையிலே இப்போது இக் கருத்தை தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அதில் சமஸ்டி பற்றி பேசப்படவில்லை அது ஒற்றையாட்சி பற்றியே பேசுகின்றது என பல்கலைகழக விரிவுரையாளர்களும் சிவில் சமூகத்தினரும் என
அனைத்து தரப்பினருமே கூறிய போதும் அதில் சமஸ்டி இருப்பதாக சுமந்திரன் கூறி வந்தார்.

இவ்வாறான நிலையில் சுமந்திரனது இச் செயற்பாடுகள் கருத்துக்கள் என்பது வர இருக்கும் அரைவேட்காட்டுதனமான புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் வகையிலேயே உள்ளது.

இந்நிலையில் அத்தகைய சுமந்திரனது கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான புளொட் சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூறியிருக்கும் நிலையில் அவர்களை பார்த்து சுமந்திரன் ‘ பங்காளி கட்சியினருக்கு சமஸ்டி என்றால் என்னவென்று தெரியுமா அதன் உள்ளடக்கம் என்னவென்று தெரியுமா ‘ என அதி மேதாவி தனமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தகைய நிலையில் அப் பங்காளி கட்சியினருக்கு உண்மையிலேயே வெட்கம், சூடு சுரனை எதாவது இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து தொடர்பாக சரியான பதிலடியை கொடுக்கட்டும் பார்க்கலாம்.

மேலும் சுமந்திரனது செயற்பாடுகள் கூட்டமைப்புக்கும் தமிழரசு கட்சிக்கும் மாறுபட்டதாக உள்ள நிலையில், அவரது கருத்துக்கள் கூட்டமைப்பின் கருத்துக்கள் இல்லை என கூறி வரும் நிலையில் எந்த அடிப்படையில் சுமந்திரனை  கூட்டமைப்பின் பேச்சாளராக வைத்திருக்க முடியும் என்பதும் அவரது நடவடிக்கை எந்தளவு தூரம் சரியானது என்ற கேள்வியெழுந்துள்ளது என்றார்.

சுமந்திரன் அரசை பாதுகாக்கிறார்..

தற்போது இந்த ஆட்சியில் கூடுதலான மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. முல்லை தீவில் எந்தவிதமான சிங்கள குடியேற்றங்களும் நடைபெறவில்லை என்பது போன்றதான பிரச் சாரங்கள் அதிகரித்துள்ளது.

வடக்கு கிழக்கின் நில தொடர்பினை துண்டாடும் வகையில் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், நாயாறு போன்ற பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இத்தகைய மாகாவலி அதிகார சபையின் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன்னர் முல்லைதீவில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக விடுதலைப் புலிகள் அப் பகுதியில் பலமாக இருந்த காலத்தில் அங்கு தமது திட்டமிட்ட குடியேற்றங்களை செய்ய முடியாதிருந்த அரசு தற்போது விடுதலைப்புலிகள் இல்லாத காலத்தில் தமது திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இந்த ஆட்சியில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்ற ஒரு கருத்தை கூறிவருகின்றார். ஆனால் உண்மையில் சுமந்திரனுக்கு இதில் இருக்கும் உண்மை என்ன என்பது தெரியும்.

ஆனாலும் இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அரசுக்கு ஆதரவாக, தமிழ் மக்களை அவர்களது சொந்த பிரதேசத்திலேயே வாழ்வதற்கு ஆப்பு வைக்கும் வகையில் கருத்துக்களை கூறி வருகின்றார்.

குறிப்பாக அன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ளாத சுமந்திரன் இவ்வாறு கருத்துக்களை கூறுவது எந்த விதத்தில் நியாயமானது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்.

வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களது காணிகள் என்பது அம் மக்களின் நீண்ட கால தொடர் போராட்டத்தினால் கிடைக்கப்பட்டதே தவிர அரசாங்கத்தின் அக்கறையினால் கிடைத்தது இல்லை.

இவ்வாறான நிலையில் சுமந்திரன் கூறும் கருத்துக்களானது தமிழ் மக்களது இருப்பினை, உரிமைகளை பாதுகாப்பதாக இல்லை என்பதுடன் அது தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்துக்களாகவே உள்ளது.

எனவே இது தொடர்பாக சுமந்திரனது கருத்துக்கள் கூட்டமைப்பின் கருத்தா அல்லது இதுவும் சுமந்திரனது தனிப்பட்ட கருத்தா என்பதை கூட்டமைப்பு பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என்றார். சிறுப்பிள்ளைதனமாக கருத்தக்கள் வேண்டாம்..

தமிழ் தேசிய மக்கள் முன்னனியானது நாம் அவர்களுக்கு முதுகில் குத்தி விட்டதாக கூறியிருந்தார். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் அவர்களுக்கும் எமக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் அந்த இணக்கப்பாட்டை நாம் மீறியிருந்தால் அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் பல வருடங்களாக பேசப்பட்ட போதும் அவ் இணக்கப்பாடு எதுவும் எட்டபடவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலமை தொடர்பாக சிந்தித்து வரும் நிலையில் சிறுபிள்ளை தனமான கருத்துக்களை கூறுவது தமிழ் மக்களது எதிர் காலத்திற்கு ஆரோக்கியமற்றதாகும். இங்கு ஒரு கட்சி மாத்திரம் தான் புனிதமானது ஏனைய கட்சிகள் துரோகிகள் என பேசுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

யுத்தம் நடந்த காலத்தில் இருந்த நிலை வேறு, தற்போதிருக்கிற நிலை வேறு. இப்போது தமிழ் மக்களது உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது அதனை பெற்றுக்கொள்வதற்கான உபாயங்கள் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இதனைவிடுத்து பல வருடங்களுக்கு முற்பட்ட விடயங்களை இப்போது கிழறி வரட்டு வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தால் தமிழ் மக்களது உரிமை தொடர்பான பிரச்சனை அடிபட்டு அது கட்சிகளுக்கிடையிலான போட்டியாகிவிடும். எனவே இது தற்போது உகந்ததில்லை என்பதை சம்மந்தப்பட்ட தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers