இலங்கை பிரதான செய்திகள்

கனகராயன்குளத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது காவல் துறை தாக்குதல் –

கட்டுக்கடங்காத காவற்துறையும் காவாலித்தனங்களும் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வவுனியா – கனகராயன்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, விடுதி (ஹோட்டல்) அமைத்து வியாபாரம் செய்வதற்கு நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.

தாவீது ஹோட்டல் என்னும் பெயரில் இயங்கி வரும் இந்த ஹோட்டல் நடத்துவதற்கான வாடகை உடன்படிக்கை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், இடத்தினை மீள வழங்காமையால் வவுனியா நீதிமன்றில் அந்த ஹோட்டல் உரிமையாளர் எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஹோட்டலின் பின்புறமாகவுள்ள காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து காணி உரிமையாளர் தமது தோட்டத்திற்கு நீர் இறைத்துள்ளார்.

ஹோட்டலுக்கு நீர் இல்லாமையால் நீர் இறைக்க வேண்டாம் என தாவீது ஹோட்டல் உரிமையாளர் காணி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதனை அவர் கவனத்தில் கொள்ளாமையால் சில நபர்களுடன் வந்து அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி தாவீது ஹோட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காணி உரிமையாளரின் மனைவி கூறியுள்ளார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்ற ஹோட்டல் உரிமையாளர், காவல் துறையினரை  வரவழைத்து விட்டு 10 நிமிடத்திற்குள் மீள வந்து தனது கணவரை வலிந்து சண்டைக்கு இழுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் காணி வேலியருகில் சென்ற போது, அங்கு சிவில் உடையில் சென்ற கனகராயன்குளம் காவல் நிலைய  பொறுப்பதிகாரி காணி உரிமையாளரை தாக்கியதாக அவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

தடுக்க சென்ற அவரின் மகனையும் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். காணி உரிமையாளரின் மனைவி கைக்குழந்தையுடன் தடுக்க சென்ற போது தள்ளி விழுத்தி கனகராயன்குளம் காவல் நிலைய  நிலைய பொறுப்பதிகாரி தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

காணி உரிமையாளரின் மனைவியை பொலிஸார் தாக்குவதைக் கண்ட மகள் தடுக்க முற்பட்ட போது, அவரது வயிற்றில் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.

இதனால், சிறுமிக்கு இரத்தப் பேக்கு ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து காணி உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி உட்பட வீட்டிற்கு சென்ற இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 42 வயதுடைய காணி உரிமையாளர் பே.வசந்தகுமார்  காவல் தறையினரின்  தாக்குதலில் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிள்ளைகளான 16 வயதுடைய கிருபாகரன், 14 வயதுடைய  சர்மிளா  ஆகியோரும் காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரின் மனைவி மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யச் சென்ற போதும் அவர்கள் நீண்ட நேரம் தாமதப்படுத்திய பின் முறைப்பாட்டை பதிவு செய்யாது பின்னர் திருப்பி அனுப்பினர்.

இதன்பின் வவுனியா இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மாங்குளம் காவல் நிலையம்  நிலையம் சென்று முறைபாட்டை பதிவு செய்ததுள்ளதாக காணி உரிமையாளரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

“வவுனியா பிரதி காவல்துறை  மா அதிபர் காரியாலயத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான முறைப்பாட்டு பிரிவுக்கும் முறைப்பாடு செய்துள்ளேன்.

கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிரான முறைப்பாடு என்பதால் தாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது, உதவிப் காவல்துறை  அத்தியட்சகரிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என காவல் துறையினர்  தாமதப்படுத்துகின்றனர்.

இதனால் அச்சத்துடனேயே நேரத்தை கழிக்க வேண்டியுள்ளது” என்று காணி உரிமையாளரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers