இலங்கை பிரதான செய்திகள்

யாழில் 300 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும் என சிரேஷ்ட பொறியலாளர் மா.இராமதாஸன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நானும் எனது நண்பர்களும் இணைந்து யாழ்.மாவட்டத்தில் இருக்கும் 8 குளங்களை புனரமைப்பு செய்துள்ளோம். கடந்த வருடம் 3 குளங்களையும், இந்த வருடம் 5 குளங்களையும் புனரமைப்பு செய்துள்ளோம். இதன் ஊடாக 2 மில்லியன் லீற்றர் நீரை சேகரிக்க கூடியதாக உள்ளது. ஒரு குளத்தை புனரமைப்பு செய்வதற்கு 2 லட்சம் ரூபாய் செலவாகின்றது. இவ்வாறு 5 அல்லது 6 வருடங்களில் 500 குளங்களை புனரமைப்பு செய்வதற்கு 75 மில்லியன் ரூபாய் தேவைப்படும்.

தற்போது யாழ்.மாவட்டத்தில் உள்ள குளங்களில் 27 பில்லியன் லீற்றர் நீர் தேக்கி வைக்க இயலும். இதில் 40 வீதமான நீர் ஆவியாதல் மற்றும் தாவரங்களுக்கு பயன்பட மீதமாக உள்ள 60 வீதமான நீர் 16 பில்லியன் லீற்றர் நீர் மக்களுக்கு பயன்படும். அதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 63 லீற்றர் நீரை வழங்கலாம். இதனை மேலும் 20 வீதத்தால் உயர்த்தினால் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 72 லீற்றர் நீரை வழங்கலாம்.

குறிப்பாக நகர் பகுதிகளில் உள்ள ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 120 லீற்றர் நீர் தேவை. அதுவே கிராமங்களில் இருக்கும் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 85 லீற்றர் நீர் போதுமானது.

மேலும் யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 40 குளங்கள் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் இருந்தன. மிகுதி 1043 குளங்கள் யாழ்.மாநகரசபைக்கு வெளியே இருக்கின்றது. நிலத்தடி நீர் என்பது வேறு, நிலத்து நீர் என்பது வேறு.

நிலத்தடி நீர் என்பது நிலத்தில் 60, 70 அடி ஆழத்திற்கு கீழ் சுண்ணாம்பு பாறைகளுக்குள் உள்ள குகைள் வழியாக ஓடிக் கொண்டிருக்கும் நீர் அதுவே நிலத்து நீர் என்பது நிலத்தில் மயிர்துளை குழாய்களில் தேக்கிவைக்கப்படும் நீர். இந்த நீரே ஆரம்பத்தில் கிணறுகளில் ஊறும் நீர். இப்போது குழாய் கிணறுகளில் வரும் நீர் நிலத்தடி நீர் என சொல்லப்படும் சுண்ணாம்பு பாறைகளுக்குள் இருக்கும் நீரோட்டங்களில் இருந்து எடுக்கப்படும் நீராகும். அது உகந்த நீர் அல்ல.

ஆகவே நிலத்து நீரை சேகரிப்பதற்காகவே குளங் கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவ்வாறு யாழ்.மாவட்டத்தில் நிலத்து நீரை சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த 1083 குளங்களில் 300 குளங்கள் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் குடியேற்றங்கள், நீண்டகால பராமரிப்பின்மை போன்றனவையாகும். குறிப்பாக யாழ்.மாநகரசபை எல்லைக்குள் இருந்த 40 குளங்களில் 34 குளங்கள் மட்டும் இப்போது இருக்கின்றது.

மேலும் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைந்திருந்த குளங்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை இன்று நிலத்து நீரை தேக்கிவைக்க கூடிய நிலையில் பெரும்பாலனவை இல்லை. ஆரம்பத்தில் குளங்கள் மக்களிடம் இருந்தது. பின்னர் அவற்றை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் மக்கள் குளங்களில் இருந்து அன்னியப்பட்டார்கள். ஆனால் மத்திய அரசுக்கு எங்கே குளங்கள் இருக்கின்றன? அவை தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாது.

குறிப்பாக வட்டுக்கோட்டையில் ஒரு குளத்தை நாங்கள் புனரமைப்பு செய்தோம். அந்த குளத்தில் 2 அடிக்கு களி மண்ணை விட்டே புனரமைப்பு செய்தோம். பின்னர் அந்த ஊரில் உள்ள சிலர் இராணுவத்துடன் தொடர்பு கொண் டு குளத்தை சுற்றி புல் பதிக்கவேண்டும் என கேட்டார்கள். சரி என கூறினோம். பின்னர் அங்குவந்த இராணுவம் குளத்தை மேலும் ஆழப்படுத்துவதாக கூறிக்கொண்டு மேலும் மண்ணை அகழ்ந்துள்ளது.

அகழும்போது அங்கே மக்கி வந்துவிட்டது. மக்கி வந்தால் குளத்தில் தேக்கப்படும் நீர் நேரடியாகவே நிலத்தடிக்கு சென்றுவிடும். பின்னர் நாங்கள் வாக்குவாத பட்டுக்கொண்டதை தொடர்ந்து எடுத்த களி மண்ணை கொண்டுவந்து போடுவதற்கு இணங்கியுள்ளார்கள்.

இவ்வாறு மக்களும் மத்தியில் உள்ளவர்களும் புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு இடத்தில் நாங்கள் குளத்தை புனரமைக்க சென்றபோது அரசாங்கம் 50 லட்சம் கொடுத்துள்ளதாகவும்,
நாங்கள் 2 லட்சம் ரூபாய்க்கு குளத்தை புனரமைப்பு செய்வதாகவும் மக்கள் எமக்கு கூறினார்கள். ஆனால் நாங்கள் எங்கள் சொந்த பணத்தில் குளத்தை புனரமைப்பு செய் கிறோம். என்ற உண்மையை மக்களிடம் கூறுவதற்கு மிகுந்த சிரமப்படவேண்டியதாயிற்று.

ஆகவே குளங்களை புனரமைத்து நிலத்து நீரை தேக்குவதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியம். மக்கள் குளங்களை பாதுகாக்கவேண்டும். குளங்களை சுற்றி மரங்களை நடுகை செய்யவேண்டும். அவ்வாறே குளங்களையும் நிலத்து நீரையும் பாதுக்காக இயலும் என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.