இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’

இரா. சம்பந்தன்

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டனை, நேற்று, முன்தினம் புதன்கிழமை (02.01.19)  மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத்  தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திய சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையை இரா.சம்பந்தன் எடுத்துக்காட்டினார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தினை மீளக் கொண்டுவருவதற்கு தாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும் என்றும் நாடானது ஒரு பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தபோது நாட்டு பொருளாதாரத்திற்கும் நிறுவனங்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தினை மீள கொண்டுவருவதற்கான ஆதரவினை கொடுத்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கடந்த டிசம்பர் 7ம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு யாப்பு எதிர்வரும் பிப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்பதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சம்பந்தன் புதிய அரசியல் யாப்பானது நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் அதே சந்தர்ப்பத்தில் மக்களும் பிராந்திய மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இரா. சம்பந்தன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்ன் மற்றும் ஊடக பேச்சளார் எம்.ஏ.எசுமந்திரனை கொழும்பில் சந்தித்தார்.

மேலும் ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்றபோது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்க்கு தமிழ் மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் யாப்பில் முன்னேற்றத்தினை கொண்டுவருவதற்கு பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்த இரா.சம்பந்தன் ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000ம் ஆண்டு அறிக்கை, மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அனைத்து கட்சி தெரிவுக்குழு, மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசியல் யாப்பிற்கு அதிகளவு முன்னேற்றங்களை பரிந்துரைந்திருந்தன எனவும் தெரிவித்தார்.

மேலும் “நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனெனில் இது எனது நாடு. இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம். எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது,” எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பதிலளித்த சுமந்திரன் தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகம் மிக சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர் என தெரிவித்த அதேவேளை இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தெரிவித்த இரா.சம்பந்தன் இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும்போக்காளர்களை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

காணி விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்பந்தன், அரசாங்கத்தினால் பிரதேசங்களின் இன விகிதாசாரத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் குடியமர்வுகளை எதிர்ப்பதாகவும், மாறாக இயற்கையாக மக்கள் குடியமர்வதனை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் பேசும் மக்கள் தமது நிலத்தினையும் கலாசாரத்தினையும் பேணுவதில் மிகவும் உள்ளார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்பதனையும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜெப்ரி வான் ஓர்டன் 2009 இற்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமையினையிட்டு தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

1-படத்தின் காப்புரிமைISHARA KODIKARA

3-படத்தின் காப்புரிமைGETTY IMAGE

நன்றி – பிபிசி

 

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • தீவிரவாத (Radical) போக்கு உள்ள தமிழர்கள் (விக்னேஸ்வரன்) தமது முழு உரிமைகளையும் கேட்கின்றார்கள்.

    கடும் (Hard) போக்கு உள்ள தமிழர்கள் (கஜேந்திரகுமார்) உரிமைகளை எடுப்பதில் உறுதியாக இருந்து தேர்தலில் கூடிய வாக்குகளை பெற்றார்கள்.

    மென் (Soft) போக்கு உள்ள தமிழர்கள் (சம்பந்தர்) உரிமைகளை விட்டுக்கொடுத்து தேர்தலில் ~ 180,000 வாக்குகளை இழந்துள்ளார்கள்.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers