இலங்கை பிரதான செய்திகள்

புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது

புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும் இந்த எதிர்ப்பு வலுக்கிறது. இதற்கு அவர்கள் காலம் கடந்து விட்டது, இது தேர்தல் ஆண்டு என்ற காரணங்களை காட்டுகிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.   

இது தொடர்பில்  மேலும் கூறியுள்ளதாவது,

 

புதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை தொடங்கிய ஆரம்பத்தில், வழிநடத்தல் குழு, ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம், அரசியல் தீர்வு ஆகிய மூன்று பிரதான இலக்குகளை தீர்மானித்தது. காலப்போக்கில் முதலிரண்டை மட்டும் தீவிரமாக செய்ய முயன்று, அரசியல் தீர்வை தள்ளி வைக்க முயன்றார்கள்.

 

ஜேவிபியை திருப்தி படுத்த முதலாவது இலக்கான நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பதை நோக்கி வழிநடத்தல் குழு வேகமாக நகர்ந்தது. பிறகு எல்லா பெரும்பான்மை கட்சிகளும் சேர்ந்து தேர்தல் முறையை மாற்றி தொகுதி முறைமையை கொண்டு வந்து, தென்னிலங்கையில் பரந்து வாழும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை  தீர்த்து கட்டுவது என கங்கணம் கட்டிக்கொண்டு வழிநடத்தல் குழுவில் செயற்பட்டார்கள். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு கட்டத்தில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பட்டது. பின்னர் ஏனைய சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மாற்றிக்கொண்டது.

 

தகிடுதத்தம் செய்து உள்ளூராட்சி தேர்தல்களில் புதிய தேர்தல் முறையை கொண்டு வந்தார்கள். இதை பெரும்பான்மை கட்சிகள் எம்மீது நிர்பந்தம் செலுத்தி அரசியலமைப்பு பணிக்கு வெளியில் செய்தார்கள். பின்னர் இதை அப்படியே மாகாணசபை தேர்தல் முறைக்கும் கொண்டுவந்து,  வழிநடத்தல் குழுவுக்குள் பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை முழுதாக முடிக்க முயன்றார்கள்.

 

மாகாணசபை தேர்தல் சட்டம் கொண்டு வந்த போது அதற்கு பெரும் நிபந்தனைகள் விதித்து நாம் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தினோம். வழிநடத்தல் குழுவுக்குள், பாராளுமன்ற தேர்தலுக்கு,  புதிய தேர்தல் முறை மாற்றத்தை கொண்டு வருவதையும் நாம் கடுமையாக எதிர்த்தோம். இன்று முழு நாடும் பழைய தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டுள்ளது. இது எமது வெற்றி. இந்த இனவாத முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமுகூ, முகா, அஇமகா ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளுக்கு மட்டுமே உண்டு.

 

இப்போது புதிய அரசியலமைப்பு வரும் சாத்தியம் அருகி விட்டது. இதை ஊகித்தே பல வருடங்களுக்கு முன்னமேயே, புது அரசியலமைப்பு இது வரும்; ஆனால் வராது. நேரத்தை வீணடிக்காமல் வேறு வழிமுறைமையை நாட வேண்டும்” என்று அடித்து கூறினேன். உண்மையை கூறினேன். வேறு வழிமுறைமை என்றால், வழிநடத்தல் குழு என்ற பேச்சு பெட்டியை விடுத்து, அனைத்து தமிழ் கட்சி எம்பீக்களின் ஒன்றியம் அமைப்போம் என்ற யோசனையையும் முன் வைத்தேன். சிங்கள கட்சிகள், அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு அரசியல் தீர்வு முயற்சியை ஆதரிக்க வேண்டும் என சொல்லும் தமிழ், முஸ்லிம் தலைமைகள், தமக்குள் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு ஒன்றுசேர முடியாமல் போனது ஏனோ என்ற கேள்வியை இன்று வரலாறு எம்மை பார்த்து கேட்கிறது. இந்த கேள்வியை வரலாறு கேட்பதற்கு முன் நான் அன்றே கேட்டேன்.

 

இனியாவது தமிழ் கட்சிகள் தமக்குள் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு ஒன்றுசேர வேண்டும். அதுவே இன்று எம்முன் இருக்கும் ஒரே வழி. ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கு உரியதை கேட்டு பெற நாம் ஒருகுரலில் பேச வேண்டும். இதை  உணர்ந்து செயற்பட தயாராகும் கட்சிகளுடன் சேர்ந்து செயற்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தயார்.       

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • “ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கு உரியதை கேட்டு பெற நாம் ஒருகுரலில் பேச வேண்டும் மற்றும் அனைத்து தமிழ் கட்சி எம்பீக்கள் அடங்கிய ஒன்றியத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்று சரியான யோசனைகளை மனோ கணேசன் சொல்லியுள்ளார். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பங்கை முழுமையாக செலுத்த வேண்டும்.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers