இலங்கை பிரதான செய்திகள்

நெடுந்தீவில் ஐந்தாண்டுகளாக நிரந்தரவைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நெடுந்தீவு வைத்திய சாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் , பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தை கவனத்திற்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

நெடுந்தீவு பிரதேசமானது தனி பிரதேச செயலகம் கொண்ட ஒரு பிரதேசமாகும். அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால் அந்த பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகள் எதுவும் முன்னெடுக்கபடுவதில்லை.

குறிப்பாக கடந்த பல காலமாக வீதி அபிவிருத்தி பணிகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. வீதிகள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தின் போது எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் (ரணில் விக்ரமசிங்க) இருந்த போது நெடுந்தீவுக்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தீர்கள். அப்போது அங்கே உங்களுக்கு போக்குவரத்து செய்வதற்கு லான்ட்மாஸ்ரரே கிடைத்து அதிலையே பயணித்தீர்கள். அது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

தற்போது பிரதமராக உள்ள நீங்கள் அப்பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்க்க வேண்டும். தற்போது நீங்கள் ஹெலியில் நெடுந்தீவுக்கு வந்திறங்கலாம் என கூறினார்.

அதன் போது பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் , நெடுந்தீவில் உள்ள வீதிகளை கொங்கிரீட் வீதிகளாக புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், அதன் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

அதேவேளை நெடுந்தீவில் நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படாமையால் கடந்த ஐந்தாண்டு காலமாக நெடுந்தீவில் நிரந்தர வைத்தியர்கள் கடமையில் இல்லை. ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் அமர்த்தி உள்ளனர். அவரும் வயதானவராக உள்ளமையால் , அடிகடி சுகவீனமுற்று விடுப்பு எடுக்கின்றார்.

யாழ்.நகரில் இருந்து குறிகட்டுவான் இறங்கு துறை சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. குறிகட்டுவானில் இருந்து 11 கடல் மைல் தூரத்தில் நெடுந்தீவு உள்ளது. அந்த தீவில் வைத்தியர்கள் இல்லாமையால் சிறிய நோய்களுக்கு கூட மருத்துவம் பெற முடியாது உயிராபத்துகளை எதிர்நோக்க வேண்டி உள்ளது. எனவே உடனடியாக வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரினார்.

அது தொடர்பில் பதிலளித்த சுகாதார பணிமனையினர் , நெடுந்தீவில் சுகாதார பணிமனையின் கீழான நான்கு வைத்திய சாலைகள் உண்டு. அங்கு நிரந்த வைத்தியர்களை நியமிக்க முடியவில்லை. வடக்கில் 400 வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதன் ஊடாகவே அந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என தெரிவித்தனர்.

அதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , நகர் பகுதிகளில் வைத்தியர்களாக கடமையாற்றுபவர்கள் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கின்றார்கள். அவ்வாறானவர்கள் கஷ்ட பிரதேசங்களுக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். ஆகவே அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவாக கொடுத்தால் அவர்கள் செல்ல ஆர்வம் காட்டுவார்கள் என யோசனை ஒன்றினை முன்வைத்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers