இலங்கை பிரதான செய்திகள்

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றக்கோரி மக்கள் தொடர் போராட்டம் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று புதன் கிழமை(20) மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு சிலாவத்துறை கிராமத்தில் இருந்து 250 குடும்பங்கள் இடம் பெயர்ந்து கற்பிட்டி உள்ளடங்களாக வேறு இடங்களுக்குச் சென்றனர்.

யுத்தம் நிறைவடைந்த நிலையில் இடம் பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாக தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஓக்ஸட் மாதம் வந்தநிலையில் முசலியில் பல்வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். எனினும் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு, கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்காதநிலையில் இன்று மாலை மணியளவில் சிலாவத்துறை பள்ளிவாசலுக்கு முன் ஒன்று கூடிய பின்னர் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் சிலாவத்துறை கடற்படை முகாமை நோக்கி சென்றனர்.

இன்போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் ‘கடற்படையே வெளியேறு’, ‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’ , ‘கடற்படையே எம் நிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் குடியேற்ற வழி செய்’,’கடற்படை முகாமை மாற்ற 10 வருடங்கள் காணாதா?’, ‘கடற்படையே எமது பூர்வீக நிலத்தில் வாழும் உரிமையை தா’, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் சிலாவத்துறை கடற்படை முகாமிற்கு முன் நின்ற மக்கள் சிலாவத்துறை கடற்படை அதிகாரியிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் மீண்டும் சிலாவத்துறை கடற்படை முகாமிற்கு முன் அமர்ந்து தமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக்,சர்வமதத்தலைவர்கள், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணியாளர்கள், குறித்த கிராமங்களைச் சேர்ந்த முஸ்ஸீம், தமிழ் மக்கள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers