இலங்கை பிரதான செய்திகள்

யாழ் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த இந்தச் சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவிலிருந்து செயற்பட்ட இந்தச் சந்தேகநபர், மானிப்பாய் தனுறொக் என்பவர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளைத் தாக்கி வந்த கும்பலைச் சேர்ந்தவர். அத்துடன் கடந்த ஆண்டு மருதனார்மடம் பகுதியில் சுன்னாகம் காவல்துறையினரால் வாள்களுடன் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்த இந்த நபர் தப்பித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் தனங்களப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருக்கின்றார் என்று யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவுக்கு தகவல் கிடைத்ததனடிப்படையில் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான ரஞ்சன் எதிரிசிங்க தலைமையிலான அணியினர் நேற்று நள்ளிரவு சந்தேகநபர் மறைந்திருந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர்.

காவல்துறையினர் சுற்றிவளைத்ததை அறிந்த சந்தேகநபர் தப்பிக்க முயற்சித்த வேளை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள்கள் இரண்டு, முகமூடிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டன. சாவகச்சேரி, சுன்னாகம் காவல்துறை பிரிவுகளில் தலா 2 குற்றச்செயல்களிலும் மானிப்பாய் காவல்துறைப் பிரிவில் 3 குற்றச்செயல்களிலும் சந்தேகநபருக்கு எதிராக வழக்குகள் உள்ளன எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.