Home இலங்கை பல்கலை மாணவர் கைது -“பூனைகளைப் புலிகளாக்கும் நடவடிக்கை” நகர்த்தல் பத்திரம் சமர்க்கப்படவுள்ளது…

பல்கலை மாணவர் கைது -“பூனைகளைப் புலிகளாக்கும் நடவடிக்கை” நகர்த்தல் பத்திரம் சமர்க்கப்படவுள்ளது…

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை உருவாகுவதைத் தடுக்கும் முகமாக, வழக்கை எதிர் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில், நகர்த்தல் பத்திரம் மூலம் அணைத்து சமர்ப்பணங்களையும்  செய்ய சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், உரிய அனுமதி வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.

அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ் ஆகிய மூவரும் முற்பட்டனர்.

பயங்கரவாத ஒழுங்குவிதிகளின் கீழும் தற்போதைய அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழும் மாணவர்கள் இருவருக்கும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால் பிணை எடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. அதனால் மாணவர்கள் இருவரும் வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மாணவர்கள் மீது பயங்கரவாத மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

“தடை செய்யப்பட்ட அமைப்பினதும் அதன் தலைவரினதும் ஒளிப்படங்களை வைத்திருந்தார்கள் என்று மாணவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் இருவருக்கும் எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தாக்குதலை அடுத்துக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதற்கு பூர்வாங்க ஆட்சேபனையை நாங்கள் பதிவு செய்தோம். பொலிஸார் மேலதிக அறிக்கைகளை முன்வைக்க வேண்டியிருப்பதால் மாணவர்கள் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்படனர்” என்று சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்தார்.

ஆயுதங்களை உடமையில் வைத்திருப்பதே பயங்கரவாத செயல்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மீளத் திறக்கின்ற சூழல் இருக்கின்றதா? என்பதை ஆராய்வதற்கு மாத்திரம் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் பிரச்சினைக்குரிய வெடிகுண்டு எவையும் மீட்கப்படவில்லை.

ராஜபக்ச ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழும் தற்போதைய உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டு மாணவர்கள் இருவரும் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர்.

நாம் ஒன்றைத் தெளிவாக எடுத்துரைத்தோம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்களை நடத்திய தரப்பினரைக் குறிவைத்து அதனைக் கையாள்வதற்காகவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே அதற்குக் கீழ் இதனைக் கொண்டுவர முடியாது என்று தெரிவித்திருந்தோம்.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இதனைக் கொண்டுவர முடியாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தோம். ஏனென்றால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 2ஆம் பிரிவில் ஆயுதங்கள், ரவைகள் மற்றும் அதனை ஒத்த விடயங்களும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் படமும் பதாதைகளும் ஆயுதங்களை ஒத்தவை என பொருள்கோடல் கொள்வது பொருத்தமில்லை.

அத்துடன், ஆயுதங்கள், ரவைகள் மற்றும் அவற்றை ஒத்த எவையும் மீட்கப்படவில்லை. அதனால் அந்த ஒழுங்குவிதியின் கீழ் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்தோம்.

அத்துடன், இனப்படுகொலை என்ற பதாதைகள் உள்ளமையாலும் குழந்தைகள் மற்றும் இசைப்பிரியா போன்றவர்களின் படங்கள் உள்ளமை இனக்குரோத்த்தை தூண்டும் எனப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். ஆனால் தமிழ் மாணவர்கள் தமக்கான நீதிக்கான போராட்டதை முன்னெடுப்பதைத் தடுப்பது பேச்சுச் சுதந்திரத்தைத் தடுப்பதாக அமையும் எனச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை நடத்திய வலையமை தேடிக் கண்டுபிடிப்பதும் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றியமைப்பதுமே பொலிஸாரின் தற்போதைய கடமையாகும் எனச் சுட்டிக்காட்டியிருந்தோம்” என்றார் சட்டத்தரணி கலாநிதி குமாரவேல் குருபரன்.

பூனைகளைப் புலிகளாக்கும் நடவடிக்கை

“பூனைகளைப் புலிகளாக்கும் நடவடிக்கையே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து செய்கின்றார்கள். அதுதான் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் கைது செய்யப்பட்ட இந்த வழக்கிலும் நடைபெற்றுள்ளளது.

ஐஎஸ்ஐஎஸ் என்ற சர்வதேசப் பயங்கரவாத அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த அவசரகாலச் சட்ட விதிகளில் இன்று இரண்டு அப்பாவி மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவன் என்ற அடிப்படையிலும் சட்டத் துறையின் முதலாவது மாணவர் ஒன்றியத் தலைவர் என்ற வகையில் நான் நீதிபதிக்கு ஒன்றைச் சுட்டிக்காட்டியிருந்தேன். நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு 2005ஆம் ஆண்டு புதுமுக மாணவனாக காலடி எடுத்துவைத்து இந்த மாணவர் ஒன்றியத்தின் அறையில் இருந்துள்ளேன். அப்போது இந்தப் படம் ஒட்டப்பட்டிருந்த்து. அந்தப் படம் இன்று செல்லரித்து யாருடைய படம் என்றே தெரியாத நிலையில் இருந்த போதே அதனை மீட்டு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறைக்குள் யார் இருந்தாலும் கைது செய்யப்பட்டிருப்பார்கள். அதனால் அப்பாவி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துரஷ்டவசமாக இந்தச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் பிணை கிடைக்கின்றமை மிகமிக கடினம். அதனால் அப்பாவி மாணவர்கள் இருவரும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் அதுவரை நாம் பொறுத்திருக்கப் போவதில்லை எதிர்வரும் திங்கட்கிழமை இந்த வழக்கை நகர்த்தல் பத்திரம் அணைத்து எமது கருத்தை முன்வைக்கவுள்ளோம்” என்று சட்டத்தரணி கனரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.  #srilankanorth #jaffnauniversity #arrested #prabaharan #maveerar #police

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More