இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் நகர்த்தல் பத்திரம் ஊடாக பிணை விண்ணப்பம் செய்யவுள்ளதாக தெரிய வருகின்றது.

யாழ்.பல்கலைகழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் , காவல்துறை அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவ படம் , மாவீரர்களின் உருவப்படம் என்பன மீட்கப்பட்டன.

அது தொடர்பில் , மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு , பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோப்பாய் காவல்துறையினர்; முற்படுத்தினார்கள்.

அதன் போது மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தனர். பொலிஸார் அதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான் மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் மாணவர்கள் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேவேளை வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு மாணவர்களை விடுவிக்க கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

அத்துடன் மாணவர்கள் கைதுக்கு எதிராக பொது அமைப்புக்கள் , அரசியல்வாதிகள் , மாணவர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளைய தினம் திங்கட்கிழமை மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி சட்டத்தரணிகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து பிணை விண்ணப்பம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

#jaffnauniversity #student #bail #politicians #vickneswaran

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • சட்டம், நீதி வழங்கள் எல்லாம் ISIS பயங்கரவாதிகளுக்கும் நீதிமன்ற அவமதிப்பாளர்களுக்கும் புலிப் பயங்கரவாதிகளுக்கும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆயினும் தம்முடைய சிறுபிள்ளைத்தனத்தினால் Childishness ஆல் மாட்டுப்படக்கூடிய மாணவர்கள் விடயத்தில் இடம் இருந்தால் நீதி கருணை காட்டுவது சிறப்புக்குரியது.