தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் நேற்று (29.05.2019) புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீப்பற்றியதனையடுத்து வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து தலவாக்கலை காவல்துறையினர்;, தலவாக்கலை லிந்துலை நகர சபை தீயணைப்பு படையினர், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ள போதிலும் சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதனையடுத்து அந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் தற்காலிகமாக ஒலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், தலவாக்கலை லிந்துலை நகர சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் தலவாக்கலை காவல்துறையினர் நுவரெலியா காவல்துறை கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)
#தீ விபத்து #தலவாக்கலை #குடியிருப்புகள்
Add Comment