உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சம்…


பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தததால் தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 32 வயதுடைய பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில்  தனது சிறுவயது முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குழந்தைகள் திருமணம், பெண் ஆணவக் கொலைகள் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் அவர் பாகிஸ்தான் ராணுவம் தனது நாட்டு பெண்கள் மீது நடத்திவரும் பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகைப்படங்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதனையடுத்து, குலாலாய் இஸ்மாயில் மீது நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. அவரை கைது செய்வதற்காக   காவற்துறையினர் தேடுதலை தீவிரப்படுத்தினர். கடந்த மே மாதம் முதல் அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்று அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

தற்போது நியூயார்க்கின் புரோக்லின் நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்துவரும் குலாலாய் அமெரிக்கா சமூக ஆர்வலர்களின் உதவியை நாடியுள்ளார். குலாலாய் மீண்டும் பாகிஸ்தான் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவருக்கு அடைக்கலம் கொடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சியை சார்ந்த செனட்டர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.