இந்தியா சினிமா பிரதான செய்திகள்

தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு


இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான, ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தலைமுறையின் மிகுந்த செல்வாக்குமிக்க நடிகராக வலம்வந்த ‘பிக் பி’ என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், 70-80களின் காலகட்டத்தில் ‘ஆங்கிரி யங் மேன்’ என அழைக்கப்பட்டார். இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் அமிதாப் பச்சன், ஒரு தலைமுறையையே தன் நடிப்பால் ஆதிக்கம் செலுத்தி பெரும் தாக்கத்தை உருவாக்கினார்.

நான்கு தேசியத் திரைப்பட விருதுகள், பதினைந்து பிலிம்பேர் விருதுகள் பெற்ற இவர், பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘இந்தியத் திரைப்படத்துறையின் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாகத் தேர்வு செய்ததில் மகிழ்ச்சியடைகிறோம். நாடு முழுதுமே இந்த முடிவை வரவேற்கின்றனர். அவருக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்’ என கூறியுள்ளார்.

76 வயதான அமிதாப் ஒரு நடிகராக 50 ஆண்டுகள் நிறைவடையும் இந்த வருடத்தில் இந்த விருது கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது அறிவிப்பு வெளியானவுடன் அமிதாப், ‘நான் பணிவுடனும், மிகுந்த நன்றியுணர்வுடனும் இதனை உணர்கிறேன். எனது மனமார்ந்த நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது இந்திய சினிமாவின் தந்தை துந்திராஜ் கோவிந்த் பால்கே பெயரால் வழங்கப்படுகிறது. இது இந்திய சினிமாவில் ஒரு கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன் (1996), இயக்குநர் கே.பாலசந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #தாதாசாகேப்பால்கே  #விருது #அமிதாப்பச்சன் #சிவாஜிகணேசன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.