இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்….

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின் 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2015ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணம் நகரில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள், அந்த வழக்கின் பிரதான சூத்திரதாரி எனக் குறிப்பிடப்பட்ட சுவிஸ்குமாரை யாழ்ப்பாணம் நீதிமன்றுக்குள் வைத்துள்ளதாகத் தெரிவித்து அதனை சூழ்ந்துகொண்டனர்.

இதன்போது சிலரால் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. நீதிமன்ற வளாகத்தைச் சூழ களேபரம் ஏற்பட்டதால், காவற்துறையினர், சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கட்டம் கட்டமாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 72 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது. அதில் 35 பேருக்கு எதிராக நீதிமன்றக் கட்டடம் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சிறைச்சாலை வாகனத்தைத் தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழும் ஏனையோருக்கு எதிராக காவலற்துறை உத்தியோகத்தரைத் தாக்கியமை, யாழ்.நகரில் காவல்நிலைய  காவலரணைத் தாக்கி சேதப்படுத்தியமை மற்றும் சிறைச்சாலை மீது கல் எறிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

“நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. எனினும் அந்த வழக்கை முடிவுறுத்துவதில் காவற்துறையினர்  அக்கறையின்றி இழுத்தடிக்கின்றனர். .

எனவே காவற்துறையினர், சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்று சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும். அதுவரை சந்தேகநபர்கள் மன்றில் முன்னிலையாகத் தேவையில்லை. மீளவும் அழைப்புக் கட்டளை வரும் போது, மன்றில் முற்படவேண்டும்” என்று 2018ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வழக்குக் கோவை சட்ட மா அதிபர் திணைக்களத்தால் பெறப்பட்டு குற்றச்சாட்டுக்களை சாட்சிகள், சான்றாதாரங்கள் ஊடாக நிரூபிக்கக் கூடிய சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத கூட்டம் கூடியமை, நீதி அமைச்சுக்குச் சொந்தமான நீதிமன்றச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சிறைச்சாலைக்குச் சொந்தமான சொத்துக்கு சேதம் விளைத்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களை வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கான அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீதிமன்றில் சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.